இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்பு மற்றும் சீனாவைக் கட்டுப்படுத்துவது என்ற போர்வையில்

ஜப்பான் அரசின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில்- நல்லிணக்கம் என்கிறது ஜப்பான் தூதரகம்

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வசதியான அரசியல் நகர்வுகள்
பதிப்பு: 2018 ஒக். 02 20:38
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 02 22:40
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளினதும் கப்பல்கள் வந்துசெல்லக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பில் கூறியிருந்தார். அதனையடுத்து ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவைக் கப்பல்கள் இலங்கை கடல் பாதுகாப்பு திணைக்களத்திடம் செப்ரெம்பர் 13 ஆம் திகதி கையளிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஜப்பான் கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கிக் கப்பல் உள்ளிட்ட இரண்டு போர்க்கப்பல்கள் சென்ற 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்த இரு கப்பல்களும் எதிர்வரும் நான்காம் திகதி வியாழக்கிழமை வரை தங்கி நிற்கவுள்ளன.
 
ககா (Kaga) நாசகாரிக் கப்பலான, இனாசுமா (Inazuma) ஆகிய இரண்டு போர்க்கப்பல்களே கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.

ஐந்து நாட்கள் தங்கிநிற்கவுள்ள இந்த இரு கப்பல்களிலும் இலங்கைக் கடற்படைக்குரிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுரகம் கூறுகின்றது.

ஜப்பான் தனது பொருளாதார நலன்சார் அடிப்படையில் சீனாவுக்கு எதிராக அமெரிக்க, இந்திய அரசுகளின் குறிப்பாக அமெரிக்காவின் ஆலோசனையுடன் இலங்கையில் கால்பதித்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ககா என்ற கப்பல் 248 மீற்றர் நீளம் கொண்ட உலங்குவானூர்தி தங்கி நிற்கக் கூடியது. இந்தக் கப்பலில் நானூறு ஜப்பான் கடற்படை அதிகாரிகள், சிப்பாய்கள் பணியாற்றுகின்றனர்.

ககா என்ற இந்தக் கப்பலில் தற்போது ஏழு நீர்மூழ்கி எதிர்ப்பு உலங்குவானூர்திகளும், இரண்டு தேடுதல் உலங்குவானூர்திகளும் தரித்துள்ளன.

ஆனால் இந்தக் கப்பலில் 28 போர் விமானங்களை அல்லது 14 பெரிய விமானங்களைத் தாங்கிச் செல்லக் கூடிய வசதியுள்ளது.

151 மீற்றர் நீளம் கொண்ட இனாசுமா என்ற நாசகாரி போர்க்கப்பலில், 170 ஜப்பான் கடற்படை அதிகாரிகள், சிப்பந்திகள் பணியாற்றுகின்றனர்.

இந்த இரு போர்க் கப்பல்களும் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளமை குறித்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சோ அல்லது இலங்கை வெளியுறவு அமைச்சோ எதுவுமே கூறவில்லை.

ஆனால் இந்த இரண்டு போர்க்கப்பல்களின் வருகையும் நல்லெண்ண அடிப்படையில் அமைந்துள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகம் கூறுகின்றது.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனேடேரா (Itsunori Onodera) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கொழும்புக்கு வந்தபோது, இகாசுச்சி (Ikazuchi) என்ற ஜப்பான் போர்க் கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வருகை தந்திருந்தது.

இரு வாரங்களில் ஜப்பான் அமைச்சர் வெளியுறவு அமைச்சர் கஸுயுகி நகானே (Kazuyuki Nakane) மற்றும் அதிகாரிகள் சிலரும், இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்க எண்ணெய் வள ஆய்வும் திருகோணமலைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஈழத் தமிழர் கடற்பரப்பில் சென்ற செப்ரெம்பர் மாதம் இரண்டாம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

அதேவேளை, இந்தியாவின் மூன்று கப்பல்கள் சென்ற வெள்ளிக்கிழமை திருகோணமலைத் துறைமுகத்துக்கு வருகை தந்திருந்தன.

கிரிச் (Kirch), சுமித்திரா (Sumitra), ஹோறா தேவ் (Cora Divh) என்ற மூன்று போர்க் கப்பல்களே செப்ரெம்பர் மாதம் ஏழாம் திகதி முதல் செப்ரெம்பர் 13 ஆம் திகதி வரை தங்கி நின்று இலங்கைக் கடற்படையுடன் இணைந்து பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.

இதேவேளை, அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation) (MCC) 480 மில்லியன் டொலர் நிதியை எதிர்வரும் டிசம்பர் மாதம் வழங்கவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தின் 2019 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரம் கோடி ருபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிதியமைச்சின் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் தேவைக்கும் இலங்கையின் பாதுகாப்பு விடயங்களுக்குத் தேவையான நிதி மற்றும் உதவிகளையும் இந்த நாடுகள் வழங்கும் என்ற நம்பிக்கையோடு மைத்திரி- ரணில் அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கியிருக்கலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தென்சீனக் கடல் விவகாரம் உள்ளிட்ட அரசியல். பொருளாதார பிரச்சினைகளில் எதிரும் புதிருமான முரண்பாடுகளுடன் செயற்பட்டு வரும் சீனா, ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கையின் அம்பாந்தோட்டையில் கடந்த சில மாதங்களாகவே கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

இதுவரைகாலமும் சீனா மாத்திரமே இந்து மா சமுத்திரத்தை மையமாகக் கொண்டு இலங்கைக்கான அபிவிருத்தி, மற்றும் உதவிகள் என பல்வேறு வேலைத்திட்டங்களுடன் செயற்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஜப்பான் அரசு தனது பொருளாதார நலன்சார் அடிப்படையில் சீனாவுக்கு எதிராக அமெரிக்க, இந்திய அரசுகளின் ஆதரவோடு குறிப்பாக அமெரிக்காவின் ஆலோசனையுடன் இலங்கையில் கால்பதித்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான அரசியல் சூழலிலேதான் இந்த நாடுகளுக்கு இலங்கை மீது தம் இஷ்டத்துக்கு ஆதிக்கம் செலுத்தும் வசதி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.