இலங்கை அரசியல் நெருக்கடியில் ஜனநாயகத்தின் அவல நிலை

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் ஜே.வி.பியோடு சம்பந்தன் ஏற்படுத்திய இணக்கம் என்ன?

ரணில் விடயத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், தமிழர் பிரதேசத்தின் கடந்த 30 ஆண்டுகால நிலை?
பதிப்பு: 2018 நவ. 06 14:31
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 06 23:56
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் மாறி மாறி ஆட்சியமைத்து வரும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் தனித்து ஆட்சி அமைக்கும் போட்டியில் தமிழ் முஸ்லிம் கட்சிகளையும் சிறிய கட்சிகளையும் பேரம்பேசி வருகின்றன. இந்த நிலையில் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாக ஆட்சி அமைப்பதற்கோ, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பியும் தெரிவித்துள்ளன. ஜனநாயகத்திற்கு முரணான சதித்திட்டங்களை இலங்கை நாடாளுமன்றத்தில் தோற்கடிப்பது தொடர்பான தலையீட்டினை மேற்கொள்வது குறித்து இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இருகட்சிகளின் தலைவர்களும் கூறியுள்ளனர்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்றுத் திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை அரசும் அதன் கீழான திணைக்களங்கள் இலங்கை இராணுவம் என்ற கட்டமைப்புக்கள், தமிழர் தாயகப் பகுதிகளில் சட்டத்திற்கு முரணாகவும், ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் அராஜகமாக செயற்படுவது குறித்து இதுவரை கண்டித்துக் குரல் எழுப்பாத ஜே.வி.பியோடு இணைந்து சம்பந்தன், ரணிலுக்காகப் பேசிய ஜனநாயகம் தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் பிமல் ரத்நாயக்க மற்றும் கே.டி.லால் காந்த என்போரும் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு அநுரகுமார திசாநாயக்க கருத்து வெளியிட்டார்.

ஜனநாயகம் எங்கே கேள்விக்குரியதாக்கப்பட்டாலும், அப்போது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு முன்னிற்க தயாராகவுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்கா தெரிவித்தார்.

அதேவேளை, தென்னிலங்கையில் மூன்றாவது அரசியல் சக்தியாக விளங்கும் ஜே.வி.பி. தங்களை மாற்று அரசியல் சக்தியாக அடையாளப்படுத்தினாலும், சிங்கள பௌத்த தேசிய இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என அவதானிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக 2006 ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அவருடைய ஆதரவுடன் இலங்கை உயர்நீதிமன்றத்தில் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக மனு ஒன்றைத் தாக்கல் செய்து, இரு மாகாணங்களையும் தனித்தனியாக பிரி்ப்பதற்கு காரணமாக அமைந்தவர்கள் ஜே.வி.பியினர்தான்.

2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அவரக்கு ஆதரவு வழங்கியதுடன் நோர்வேயின் சமாதான முயற்சிக்கு எதிராகவும் தீவிரமான பிரசாரங்களை ஜே.வி.பி மேற்கொண்டிருந்தது.

2002 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துடன் நோர்வேயின் ஏற்பாட்டில் பேச்சுக்கள் ஆரம்பமானபோது இலங்கைத் தீவு முழுவதிலும் எதிர்ப்பிரசாரங்களில் ஜே.வி.பி. ஈடுபட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவை போருக்குள் தள்ளியவர்கள் ஜே.வி.பி.தான் என்று அப்போது சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளராக இருந்த சுனில் ஜயசேகர குற்றம் சுமத்தியிருந்தார்.

அது மாத்திரமல்ல, ஈழத் தமிழர்களின் பிரச்சினைத் தீர்வுக்கு இலங்கை அரசு நிா்வாக ரீதியான மாற்றங்களைச் செய்தால் போதும் என்பதே ஜே.வி.பியின் நிலைப்பாடு.

வடக்கு - கிழக்கு இணைப்பு உள்ளிட்ட தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கைக்கு ஜே.வி.பியின் தற்போதைய தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலிலும் ஜே.வி.பி.அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. இந்த நிலையில் சம்பந்தன் எவ்வாறு ஜே.வி.பியுடன் இணக்கத்தை ஏற்படுத்தினார் என்பது குறித்து அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தனியே ரணில் விக்கிரமசிங்கவை மாத்திரம் காப்பாற்றுவதற்காக. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஜே.வி.பியை சந்தித்தாரா, அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற அடிப்படையில் கலந்துரையாடினாரா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

சட்டத்திற்கு முரணாக ரணில் அரசாங்கம் பதவி கவிழ்ந்துவிடக்கூடாது என்றும் அரசியல் யாப்புக்கு முரணாக எவரையும் செயற்பட அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையிலும் ஜே.வி.பியோடு கூட்டுச் சேருவது என்றால், அதன் பின்னரான சூழலில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் ஏற்படப் போகும் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளை நிறுத்த ஜே.வி.பி. சம்பந்தனுக்கு ஒத்துழைப்பு வழங்குமா?

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவம் நிலைகொண்டுள்ளது. சிவில் செயற்பாடுகளில் இலங்கை இராணுவம் தலையிடுகின்றது. பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றன.

இந்தச் செயற்பாடுகள் கொழும்பை மையப்படுத்தி இயங்கும் இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் சிங்கள உயர் அதிகாரிகள் மூலமாக சட்டத்திற்கு முரணாகவும், சட்டத்திற்குரியது என காண்பிக்கும் போலியான ஆவணங்களுடனும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இலங்கை அரசும் அதன் கீழான திணைக்களங்கள், இலங்கை இராணுவம் என்ற கட்டமைப்புகள், தமிழர் தாயகப் பகுதிகளில் சட்டத்திற்கு முரணாகவும், ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் அராஜகமாக செயற்படுவது குறித்து இதுவரை கண்டித்துக் குரல் எழுப்பாத ஜே.வி.பியோடு இணைந்து சம்பந்தன், ரணிலுக்காகப் பேசிய ஜனநாயகம் தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஜே.வி.பியோடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக்குழுவுடனோ, அல்லது தமிழரக் கட்சியுடனோ சம்பந்தன் கலந்துரையாடவில்லையென கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சந்தித்திருந்தாலும், வடக்கு - கிழக்கு பகுதிகளில் இதுவரையும் பின்பற்றப்படாத ஜனநாயகம் பற்றியும் சட்ட ஆட்சி இல்லாத சூழல் குறித்தும் அக்கறைப்படாத ஜே.வி.பியோடு ஒரு மணித்தியால சந்திப்பில் எப்படித் திருப்பங்கள் ஏற்பட்டன என்பது குறித்து சம்பந்தன் தமிழ் மக்களுக்கு பகிரங்கமாகத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.