இலங்கை அரசியல் நெருக்கடி

பிரதமர், அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யலாம் - ஆனால் சபாநாயகரை நாடாளுமன்றம் கூடும் முன் மாற்ற முடியுமா?

மைத்திரி-மஹிந்த குழப்பம் - சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆராய்வு
பதிப்பு: 2018 நவ. 08 16:46
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 08 22:08
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்சவும் இலங்கை நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்கும் விடயத்தில் இக்கட்டான நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பியும் இணைந்து மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதில்லை என்றும் வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கவுள்ளதாகவும் கொள்கையளவில் இணங்கியுள்ளனர். ஜே.வி.பி இதனை வெளிப்படையாகவும் அதிகாரபூர்வமாகவும் இதுவரை ஊடகங்களுக்கு எதுவும் கூறவில்லை. ஆனால், ஜனநாயகத்திற்கு விரோதமாக அரசியல் யாப்பை மீறும் செயற்பாடுகளுக்கு அனுமதிக்க முடியாதென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் ஆறு ஆசனங்கள் உள்ள ஜே.வி.பி 15 ஆசனங்கள் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்தால் பெரும்பான்மையை நிரூபிப்பது கடினமானதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னரான சூழலில் கொழும்பில் ஒரு வகையான பதற்றமும் வர்த்தகர்கள் மத்தியில் நம்பிக்கையற்ற நிலையும் காணப்படுகின்றது.

அதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரியவின் இறுக்கமான தீர்மானங்களும் மஹிந்த தரப்புக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் அதுவரையும் மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமருக்குரிய ஆசனம் வழங்கப்படமாட்டாது என்றும் சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரியிடம் உறுதியாகக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னரான ஆசன ஒதுக்கீட்டின்படியே 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய, மஹிந்த தரப்புக்கு அறிவித்துமுள்ளார்.

ஆனால் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது இலங்கை அரசியலமைப்பு மரபு வழிறைகளின் பிரகாரம் ஜனாதிபதி என்ற முறையில் மைத்திரிபால சிறிசேன சிம்மாசன உரையாற்றுவார் என்றும் வாக்கெடுப்பு இடம்பெறாதெனவும் மஹிந்த தரப்பு அமைச்சர் லக்ஸ்மக் யாப்பா அபயவர்த்தன இன்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஆனால் நாடாளுமன்றம் கூடிய பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மையை நிரூபிக்காமல், மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் சிம்மாசன உரையாற்ற முடியாதென ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது.

பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்னதாகவே புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களை ஜனாதிபதி ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக நியமித்திருக்கின்றார். நாடாளுமன்ற சபை முதல்வர் கூட நியமிக்கப்பட்டுள்ளார்.

சரி அதனை அரசியல் யாப்புக்கு அமைவானது என்று சட்ட வியாக்கியானம் கொடுத்திருந்தாலும், ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக புதிய சபாநாயகரை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது. அதாவது தற்போதைய சபாநாயகரை மாற்றமுடியாது.

அதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என்று கூறுகின்றனர் சட்ட வல்லுனர்கள். அந்த நம்பிக்கையில்தான் சபாநாயகர் கரு ஜயசூரியவும் இறுக்கமான முடிவுகளை அறிவித்துள்ளார் என்று தெரிகின்றது.

அதேவேளை, 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி ஐந்து வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னராக நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியாது.

அவ்வாறு கலைப்பதாக இருந்தால் நான்கு வருடங்கள் நிறைவடைந்து ஆறு மாதங்கள் சென்றிருக்க வேண்டும். ஆகவே தற்போதைய நாடாளுமன்றம் மூன்றரை ஆண்டுகள் மாத்திரமே பூர்த்தி செய்திருக்கின்றது.

அப்படி இல்லையேல் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைய வேண்டும். அப்படித் தோல்வியடைந்தாலும் இன்னுமொரு வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும்.

ஆனால் அவ்வாறனதொரு சூழல் தற்போதைக்கு இல்லை. அல்லது மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமா, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமா என்று சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

ஆனால் இந்த விடயம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்த முடியுமா இல்லையா என்பது தொடர்பாக அரசியலமைப்பில் தெளிவாகக் கூறப்படவில்லையென சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்சவும் தமது சட்ட வல்லுநர்களுடன் ஆரய்ந்து வருவதாக உயர்மட்டத்தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, தமது பெரும்பான்மையை நிரூப்பிப்பதற்காக மஹிந்த தரப்பும் ரணில் தரப்பும் கொழும்பில் மக்கள் செல்வாக்கைக் காண்பித்து வருகின்றன.

கடந்த 2 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் நடத்திய பேரணியில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஒன்று கூடியதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

அதேபோன்று கடந்த வெள்ளிக்கிழமை மஹிந்த தரப்பு கொழும்பு பத்தரமுல்லையில் நடத்திய பொதுக் கூட்டத்திலும் அதேயளவு மக்கள் ஒன்று கூடியதாகவும் சுயாதீன தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், இன்று எட்டாம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்பாகவிருந்து ஆரம்பித்த ஐக்கியதேசியக் கட்சியின் எதிர்ப்புப் பேரணி மாலை நான்கு மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் உள்ள டி.எஸ். சேனாநாயக்கவின் சிலைக்கு முன்பாக நிறைவடைந்தது.

இவ்வாறு இரு தரப்பும் தொடர்ந்து நடத்தும் ஏட்டிக்குப் போட்டியான பேரணிகள். பொதுக் கூட்டங்களினால் கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னரான சூழலில் கொழும்பில் ஒரு வகையான பதற்றமும் வர்த்தகர்கள் மத்தியில் நம்பிக்கையற்ற நிலையும் காணப்படுகின்றது.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ச பிரதமரக நியமிக்கப்பட்டமை ஆயுதங்கள் அற்ற சதிப் புரட்சியென சபாநாயகர் கரு ஜயசூரிய கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு கடந்த 5 ஆம் திகதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.