இலங்கை அரசியல் நெருக்கடியில் மேலும் சிக்கல் தொடர்கிறது

நாடாளுமன்றக் கலைப்பு சரியா, பிழையா- உயர் நீதிமன்றத்தின் கருத்தை சுயாதீனத் தேர்தகள் ஆணைக்குழு அறியவுள்ளது

தீர்மானத்தை தெரிந்த பின்னரே தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலனை எனவும் தெரிவிப்பு
பதிப்பு: 2018 நவ. 10 00:55
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 11 10:42
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை நாடாளுமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு அமைவானதா என்பது குறித்து இலங்கை சுயாதீன தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இலங்கை உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கோரவுள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு முடிவு செய்துள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. மஹிந்த ராஜபக்ச தரப்பு பொரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு மைத்திரிபால சிறிசேன இலங்கை அரச வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளமை அரசியல் யாப்பு விதிகளை மீறும் செயல் என குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிகின்றது.
 
அதேவேளை, மாகாணசபைத் தேர்தல்கள் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட வேண்டிய நிலையில் எவ்வாறு ஜனாதிபதித் தேர்தலுக்குரிய ஏற்பாடுகளை செய்வது என்பது குறித்தும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

இது சட்டப் பிரச்சினை என்றும் இது தொடர்பாகவும் உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிவதுடன், அரசியல் கட்சிகளின் தலைவர்களோடும் கலந்துரையாட வேண்டும் எனவும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளதாக அறிய முடிகின்றது.

இதேவேளை, நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் முடிவுறாத நிலையில் மைத்திரிபால சிறிசேன எவ்வாறு நாடாளுமன்றத்தைக் கலைத்தார் என ஐக்கியதேசியக் கட்சி உடனடியாகவே கேள்வி எழுப்பியுள்ளது.

ஆனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்பு விதிகளுக்கு அமைவானதுதான் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

எனினும் அரசியல் யாப்பின் 70 ஆவது சரத்தில் உறுப்புரையின் முதலாவது பந்தியில் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 19 ஆவது திருத்தச் சட்டத்தை மைத்திரிபால சிறிசேன மீறியுள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிய முற்படுகின்றமை மைத்திரி - மஹிந்த ஆகியோரின் நடவடிக்கைகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் இலங்கை நீதித்துறையின் சுயாதீனத் தன்மை தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகளின் சட்டத்தரணிகளே கேள்விக்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டால் தேர்தல் நடத்தப்படும் திகதியை அரசியல் கட்சித் தலைவர்களுடன் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரே கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி தேர்தல் நடைபெறும் என அரச வர்த்தமானியில் அறிவித்துள்ளமை குறித்தும் கொழும்பில் பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும் ஜனாதிபதி தொடர்ந்தும் அதிகாரத்துடன் செயற்படுவதால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தேர்தல் நடைபெறும் திகதியை ஜனாதிபதி தீர்மானிக்க முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறுகின்றது.