இலங்கை அரசியல் நெருக்கடியில் தமிழரசுக் கட்சியின் வகிபாகம்?

தமிழர் தேசம் அபகரிக்கப்படும் நிலையில் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து ரணிலுக்கு ஆதரவாகப் பேசினார் சம்பந்தன்

1948 ஆம் ஆண்டில் இருந்து தமிழர்களுக்கு எதிரான சட்ட மீறல்கள், இனப்படுகொலைகள் பற்றிப் பேசினாரா?
பதிப்பு: 2018 நவ. 20 22:22
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 21 09:36
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் 15 பேரைச் சந்தித்து இலங்கை அரசியல் நெருக்கடி தொடர்பாக கலந்துரையாடியுள்ளது. கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சம்பந்தன் தலைமையில் சந்திப்பு இடம்பெற்றது. கூட்டமைப்பின் பேச்சாளரும் ரணில் விக்கிரமசிங்கவி்ன் ஜனநாயக உரிமை மீறலுக்கு எதிராக செயற்பட்டு வருபவருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பு உறுப்பினா்கள் அனைவரும் சந்திப்பில் கலந்துகொண்டனர். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மகிந்த ராஜபக்ச புதிய பிரதமராகப் பதவியேற்றதால் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது என சம்பந்தன் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமைக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்தமை. மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியமை குறித்தும் விளக்கமளித்தாக சம்பந்தன் கூறினார்.

1948 ஆம் ஆண்டு சோல்பரி யாப்பில் உள்ள 29 ஆவது சரத்து மீறப்பட்டது முதல், 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி. பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல், ஆளுநர் ஊடாக மகிந்தவும் ரணில் விக்கிரமசிங்கவும் தடுத்து வைத்துள்ளமை எந்த வகையான ஜனநாயகம் என்று சம்பந்தன் வெளிநாட்டுத் தூதுவர்களிடம் கேட்டாரா?

சந்திப்பில் கலந்துகொண்ட வெளிநாட்டுத் தூதுவர்கள் தம்மிடம் பல கேள்விகளைக் கேட்டதாகவும் இந்தச் சந்திப்பின் மூலம் பல விடயங்களை அறிந்து கொண்டதாவும் தூதுவர்கள் கூறியதாக சம்பந்தன் தெரிவித்தார்.

ஆனால், இந்தச் சந்திப்பில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள். நிரந்தர அரசியல் தீர்வு முயற்சிகள் பற்றி வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு எடுத்துக் கூறியதாக சம்பந்தன் எதுவுமே சொல்லவில்லையென கொழும்பில் செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கை நீதித்துறை சுயாதீனமாகச் செயற்படுவதாக சம்பந்தன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்புக்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை பாராட்டிய சம்பந்தன், இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை வைப்பதாகவும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைவர் ரணில் வி்க்கிரமசிங்கவுக்கும் ஜனநாயகம் மீறப்பட்டுள்ளது என்றும் இலங்கை அரசியல் யாப்பும் மீறப்பட்டுள்ளதாகவும் கூறிய சம்பந்தனுக்கு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இலங்கை அரசு என்ற கட்டமைப்பு மேற்கொண்டு வரும் ஜனநாயக மிீறல், சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் பற்றி எதுவுமே தெரியாதா என விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

15 வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் நியாயப்படுத்தி விளக்கமளித்துள்ள சம்பந்தன், இந்தக் கட்சிதான் தமிழர்கள் மீது 1983 ஆம் ஆண்டு போரை வலுக் கட்டாயமாகத் திணித்தது என்று கூறியிருப்பாரா?

இந்த ஐக்கிய தேசியக் கட்சிதான் கொழும்பில் 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிரான பௌத்த தேசியவாத வன்முறைத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டது என்று சம்பந்தன் சொல்லியிருப்பாரா?

வடமாகாண சபைக்குரிய முலதமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க அனுமதிக்காமல் ரணில் விக்கிரமசிங்க தடுத்தமை எந்த வகையான ஜனநாயகம் என்று சம்பந்தன் வெளிநாட்டுத் தூதுவர்களிடம் கேட்டிருப்பாரா?

மகிந்த ராஜபக்சவும் வடமாகாணத்துக்கான முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க அனுமதிக்கவில்லை. மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களையே மகிந்த மீளப் பெற்றுக்கொண்டார்.

1948 ஆம் ஆண்டு சோல்பரி யாப்பில் உள்ள 29 ஆவது சரத்து மீறப்பட்டது முதல், 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல், ஆளுநர் ஊடாக மகிந்தவும் ரணில் விக்கிரமசிங்கவும் தடுத்து வைத்துள்ளமை எந்த வகையான ஜனநாயகம் என்று சம்பந்தன் வெளிநாட்டுத் தூதுவர்களிடம் கேட்டாரா?

ஏன் 2006 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச, ஜே.வி.பி மூலமாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை பிரித்திருந்தார்.

1996 ஆம் ஆண்டு திருகோணமலை குமாரபுரத்தில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த எட்டு இலங்கை இராணுவத்தினரையும் நிரபராதிகள் என்று கூறி கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது.

தமிழ் அரசியல் கைதிகள் பலருக்கு மரண தன்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கை நீதித்துறை என்பது தமிழர்களின் அரசியல் உரிமை சம்மந்தமான வழக்குகளில் பௌத்த தேசியவாத கண்ணோட்டத்துடன் நோக்குவது சம்பந்தனுக்குத் தெரியாதா?

தமிழர் விவகாரத்தில் இலங்கை நீதித்துறையின் சுயாதீனம் எங்கே இருக்கின்றது?

ஜனநாயக மறுப்புகள், நீதிக்கு புறம்பான கொலைகள், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, புத்தர் சிலை வைத்தல் இலங்கை முப்படையினரைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களின் காணிகளை அபகரித்தல் என்று எத்தனை, எத்தனை சட்டத்திற்கு மாறான செயற்பாடுகள் தமிழர் தாயகத்தில்?

இவை பற்றி வாயே திறந்து பேசாத சம்பந்தன், ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டமை ஜனநாயக மீறல் என்று வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்து விளக்கமளிக்க வேண்டிய அவசியம் ஏன் என்று சாதாரண மக்கள் கூட கேள்வி எழுப்பியுள்ளனர்.

இப்போது சிங்கள பௌத்த தேசியவாதியான விமல் வீரவன்ச கேட்கிறார், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவா? சுமந்திரனா என்று? நிலமை அந்தளவு துாரத்துக்கு மாறியுள்ளது.

இது சம்பந்தனுக்குத் தெரியாததல்ல. தமிழரசுக் கட்சி 1965 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்கும் போது கூறிய அதே விளக்கங்களையே இன்றும் முன்வைக்கின்றது.

ஆனால், பயன்பெற்றது சிங்களதேசம். 2009 ஆம் ஆண்டு மே மாத்திற்குப் பின்னரான சூழலில் தமிழர் தேசம் நாளுக்கு நாள் இலங்கை முப்படையினரின் ஆதரவோடு கொழும்பை மையப்படுத்தி செயற்படும் இலங்கை அரச திணைக்களங்களினால் பறிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.