இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் நீதித்துறையின் சுயாதீனம் குறித்த கேள்விகள்

அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய ஏழு நீதியரசா்கள் நியமிக்கப்பட்டமை எந்த அடிப்படையில்?

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த இழுபறி
பதிப்பு: 2018 நவ. 26 22:50
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 27 09:16
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான இலங்கை வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான ஏழு நீதியரசர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களை பிரதம நீதியரசர் நளின் பெரேரா வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவாகவே தாக்கல் செய்திருந்தன. ஆனால் அரசியல் நெருக்கடி விவகாரமாகக் கருதி உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வாக விசாரணையை நடத்துமாறு கோரி முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் இடையீட்டு மனு ஒன்றை கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார்.
 
இது குறித்து மேலும் ஐந்து இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களின் அடிப்படையில் ஏழுபேர் கொண்ட நீதியரசர் குழுவை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

மூன்று நீதியரசர்களே அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்வது வழமை. ஆனால் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை எந்த அடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வாக மாற்றி ஏழு நீதியரசா்கள் மூலம் விசாரணை நடத்துமாறு கோர முடியுமென ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் நியமிக்கப்பட வேண்டும் என மைத்திரிபால சிறிசேன இலங்கைச் சட்டமா அதிபரின் பரிந்துரையி்ன் பிரகாரம் ஏலவே ஆலோசனை வழங்கியிருந்தார்.

மைத்திரிபால சிறிசேவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக இருபதுக்கும் அதிகமான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மீதான இரண்டாம் கட்ட விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் நான்காம் ஐந்தாம் ஆறாம் திகதிகளில் ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

ஏழாம் திகதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் ஏழு நீதியரசர்கள் நியமிக்கப்பட்டதை ஐக்கிய தேசியக் கட்சி, பொது அமைப்புகள் மனித உரிமைச் சட்டத்தரணிகள் விரும்பவிலலையென கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

மூன்று நீதியரசர்களே அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்வது வழமை.

ஆனால் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை எந்த அடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வாக மாற்றி ஏழு நீதியரசா்கள் மூலம் விசாரணை நடத்துமாறு கோர முடியுமென ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும், ஏழு நீதியரசர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை அதிகாரபூர்வமாக எதுவுமே கூறவில்லை. ஆனால் கட்சியின் நிலைப்பாட்டை நாளை செவ்வாய்க்கிழமை தெரிவிக்கவுள்ளதாக கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

ஏழு நீதியரசர்களில் நான்கு பேர் அல்லது ஐந்து பேர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என்றும் ஏனைய மூவர் அல்லது இருவர் தவறானது எனவும் தீர்ப்பு வழங்கலாம்.

அதேபோன்று ஏழு நீதியரசர்களில் நான்கு பேர் அல்லது ஐந்து பேர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தவறானது என்றும் ஏனைய மூவர் அல்லது இருவர் சரியானது எனவும் தீர்ப்பு வழங்கலாம்.

அவ்வாறு நீதியரசர்கள் ஏழுபேரும் தமது கருத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுவாகப் பிரிந்து தீர்ப்பு வழங்கலாம். ஆனால் பெரும்பான்மை நீதியரசர்களின் தீர்ப்பே செல்லுபடியாகும். அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பு மேன்முறையீடு செய்யவும் முடியாது.

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்றத்தினால் 2006 ஆம் ஆண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, ஏழு நீதியரசர்களில் ஐந்து பேர் பிரிக்க வேண்டும் எனவும் ஏனைய இருவர் சமூகத்தின் அரசியல் பிரச்சனை என்ற காரணத்தால் பிரிக்க முடியாது எனவும் தீர்ப்பு வழங்கியிருந்தனர்.

அதேவேளை, இவ்வாறான தீர்ப்பின் மூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பை மீறி நாடாளுமன்றத்தைக் கலைத்தார் என்ற குற்றச் சாட்டும் நீங்கிவிடும்.

எனவே, அதற்கு ஏற்றவாறே ஏழு நீதியரசர்கள் முன்னிலையில் மனுவை விசாரணை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாகவும் இது இலங்கை நீதித்துறையின் சுயாதீனம் குறித்து எழும் சந்தேகம் என்றும் மனித உரிமைச் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வாக மாற்ற முடியாது என்றும் இது அப்பட்டமான யாப்பு மீறல் எனவும் மனித உரிமை மீறல் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்றத்தினால் 2006 ஆம் ஆண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, ஏழு நீதியரசர்களில் ஐந்து பேர் பிரிக்க வேண்டும் எனவும் ஏனைய இருவர் சமூகத்தின் அரசியல் பிரச்சினை என்ற காரணத்தால் பிரிக்க முடியாது எனவும் தீர்ப்பு வழங்கியிருந்தனர்.

ஆனால் ஐந்து நீதியரசர்கள் பிரிக்க வே்ண்டும் என தீர்ப்பு வழங்கியதால் வடக்கு - கிழக்கு மாகாணம் சட்ட ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரிப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்ய முடியாது.

இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்புப் பிரேணை ஒன்றை சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றே வடக்கு - கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க முடியும் என அன்று கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் ஏனையவா்கள் அமைச்சர்களாகவும் பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இல்லை எனக் குறிப்பிட்டு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட 122 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு, எதிர்வரும் 30 மற்றும் 3 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுக்கப்படும் என கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.