முடிவின்றித் தொடரும் இலங்கை அரசியல் நெருக்கடி

நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முடியாதென மகிந்த அறிக்கை - சஜித்தைப் பிரதமராக்கும் மைத்திரியின் முயற்சி மீண்டும் தோல்வி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் அதிகரித்துள்ள நிலையில் நாளை மாநாடு - மகிந்த மௌனம்
பதிப்பு: 2018 டிச. 03 19:32
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 03 22:17
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
பிரதமராக பதவி வகிக்க முடியாதென கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவை ஏற்க முடியாதென்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தீர்ப்புக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் மகிந்த கூறியுள்ளார். இடைக்காலத் தீர்ப்புத் தொடர்பாக மகிந்த இன்று திங்கட்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கை குறித்து ரணில் தரப்பு எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி மேலும் நீடித்துச் செல்லுகின்றது.
 
இன்று திங்கட்கிழமை பிற்பகல் தீர்ப்பு வழங்கும் வரை மகிந்தவே பிரதமர் என்றும் மைத்திரியின் கையொப்பத்தோடு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தமானி இதழை வாபஸ் பெற முடியாதெனவும் மைத்திரி- மகிந்த தரப்புகள் கூறிவந்தன.

ஆனால் நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பையடுத்து அவசர அவசரமாக மாற்று யோசனைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையிலேயே மகிந்த ராஜபக்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முடியாதெனக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனு மீதான விசாரணையில் ஏழு நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் மைத்திரிக்குச் சாதகமாக இறுதித் தீர்ப்பு வரலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் நம்புவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்சவும் அவரது 49 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியில் இருக்க முடியாதென வழங்கப்பட்ட இடைக்காலத் தீப்புத் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 12, 13 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

ஆகவே அதற்கு முன்னதாக ஏழாம் திகதி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமை சரியானது என ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்களில் ஐந்து பேர் அல்லது நான்கு பேர் தீர்ப்பு வழங்கினால் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்.

எனவே அவ்வாறு தீர்ப்பு வழங்கினால் மகிந்த பிரதமராக தொடர்ந்து பதவி வகிக்கலாமா இல்லையா என்ற மனு மீதான விசாரணையின் இறுதித் தீர்ப்பில் அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் நம்புகின்றனர்.

எவ்வாறாயினும் எதிர்வரும் நான்காம் திகதி நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் யாரைப் பிரதமராக நியமிப்பது என்பது குறித்து மைத்திரி தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகின்றது.

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பெரும்பான்மை விருப்பத்தை மைத்திரி ஏற்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.

இது குறித்து மைத்திரிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை. தனிப்பிட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ரணில் விக்கிரமசிங்கவை, மைத்திரி பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் இது அரசியல் யாப்பு விதி எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மைத்திரி - மகிந்த தரப்புக்கு இது பெரும் சவால் என அவதானிகள் கூறியுள்ளனர். ஆனாலும் நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை மாத்திரம் மையமாகக் கொண்டு இறுதித் தீர்ப்பும் அவ்வாறுதான் அமையும் எனக் கூற முடியது என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பாக மூன்று நீதியரசர்கள் இடைக்காலத் தீர்ப்ப்பை வழங்கியிருந்தனர். ஆனால் எதிர்வரும் ஏழாம் திகதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் ஏழு நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது மைத்திரிபால சிறிசேனவுக்கு சாதகமானது எனவும் ஆகவே நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்ப்பார்க்கலாம் எனவும் அவதானிகள் கூறுகின்றனர்.

அதேவேளை, நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் இன்று திங்கட்கிழமை இரவு வரை சஜித் பிரேமதாசாவை பிரதமராக நியமிக்க மைத்திரி கடும் முயற்சி எடுத்ததாகவும் ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை மற்றும் மத்திய குழுத் தீா்மானங்களை மீறி பிரதமர் பதவியை ஏற்கப் போவதில்லை என சஜித் பிரேமதாச அடித்துக் கூறியதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள், நெருக்கடிகள், குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் கட்சியின் 54 உறுப்பினர்கள் மகிந்தவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஆனால் இந்த மாநாடு தொடர்பாக மகிந்த ராஜபக்ச அமைதியாகவே இருக்கின்றார். அவர் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என கட்சித் தகவல்கள் கூறுகின்றன.