இலங்கை அரசியல் நெருக்கடிக்குப் பின்னரான தமிழர் நிலைமை

ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஏற்றுக்கொண்ட சம்பந்தன் தற்போது இரு வகையான ஜனநாயகத்தை உணர்கிறார்?

ஈழத் தமிழர்களின் தன்னாட்சி அதிகாரத்தை இலங்கைத் தேசியத்துடன் கரைக்கும் முயற்சிக்கு கிடைத்த பயன்
பதிப்பு: 2018 டிச. 20 12:22
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 21 00:21
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில் இலங்கையில், கடந்த ஐம்பது நாட்களாக நீடித்த அரசியல் நெருக்கடி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளததாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அறிக்கை வெளியிட்டு பெருமைப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சி உறுப்பினர் சுமந்திரன். சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆகியோரின் கடும் முயற்சியினால் இலங்கை உயர் நீதிமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இலங்கை அரச வர்த்தமானி இதழுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கி மீண்டும் நாடாளுமன்றம் செயற்படுவதற்கு அனுமதியளித்துள்ளது. இது குறித்து பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களே பெருமைப்பட்டுள்ளனர். இந்தியா, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளுக்கும் தமிழரசுக் கட்சியின் இப் பங்களிப்பு நன்கு தெரியும்.
 
எவ்வாறாயினும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உருவாக்கப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கம் போன்று இவ் அரசாங்கம் செயற்படும் என்பது குறித்து அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளுக்குத் திருப்பதியுள்ளதாகக் கூற முடியாது.

பூகோள அரசியலில் ரணில் அல்லது மகிந்த மாத்திரமே அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற சர்வதேச நாடுகளுக்குத் தேவை. சம்பந்தன் அல்ல. அப்படித் தேவை என்று அந்த நாடுகள் கருத வேண்டுமாக இருந்தால், இலங்கைத் தீவில் இரு தேசிய இனங்கள் இருக்கின்றன என்பதை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் தரப்புகள் உரத்துக் கூற வேண்டும். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் அந்த செயற்பாட்டில் தமிழ்த் தரப்பு ஈடுபடவில்லை.

ஆனாலும் நல்லாட்சி என்றே செயற்பட வேண்டும் என அமெரிக்கா பாராட்டி வெளியிட்ட அறிக்கையில், அந்தத் தொனி தெரிகிறது. கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரும் அவ்வாறுதான் கூறியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என அமெரிக்காவின் ட்ரம் நிர்வாகம் இந்தியாவின் மோடி அரசாங்கத்தோடு சேர்ந்து கடந்த சில மாதங்களாக முயற்சி எடுத்திருந்தது.

ஆனால் அந்த முயற்சி என்பது அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினாலும் இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களினாலும் நேராடியாகக் கையாளப்பட்டதல்ல. நேரடியான ஈடுபாடு என்பதில் ரணிலுக்கு ஆதரவு என்ற முகத்தையே இந்த இரு நாடுகளும் வெளிப்படுத்தியிருந்தன.

ஆனால் மீ்ண்டும் ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டு வர எடுத்த முயற்சி என்பது இன்னுமொரு கையினால் மறைமுகமாகக் கையாளப்பட்டிருந்ததாக அவதானிகள் கூறுகின்றனர்.

எனினும் இலங்கையில் சிங்களப் பெருந்தேசியவாத கட்சிகளிடையே ஏற்பட்ட மோதல் என்பதால், மற்றுமொரு பெருந்தேசியவாத கட்சிக்குச் சார்பாகவும், இலங்கை அரசியல் யாப்பின் நேர்மையான காவலனாகவும் தன்னை வெளிப்படுத்தி உயர் நி்திமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதனால் ராஜபக்ச ஆட்சிக்கு வரவேண்டும் என்று மறைமுக முயற்சி ஒன்றின் மூலம் காய்களை நகர்த்திய அமெரிக்காவும் இந்தியாவும் அந்தத் தீர்ப்பை ஏற்று ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பாரட்டையும் தெரிவித்திருந்தன.

கடந்த 13 ஆம் திகதி வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத் தி்ர்ப்பின் மூலம் தற்போது மீண்டும் ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சரவையும் இன்று வியாழக்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் புதிய அமைச்சரவையில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்தி ஐக்கிய மக்கள் சுநத்திரக் கூட்டமைப்பு அங்கம் வகிக்கவில்லை.

ஆனாலும் இன்னும் சில வாரங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியோடு முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை பெறக் கூடும் எனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இந்த இடத்திலேதான் தற்போது எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ரணில் பிரதமராகப் பதவியேற்றதும் இதுவரையும் பிரதமராகப் பதவி வகித்து சர்சையை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கமைவாக சபாநாயகர் கரு ஜயசூரியவும் மகிந்த ராஜபக்சவே எதிர்க்கட்சித் தலைவர் என கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துமுள்ளார்.

ஆனால் அதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏற்கவில்லை. இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருப்பதாக சம்பந்தன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும் நிலையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு மூத்த உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியாது என சுமந்திரன் கூறியுள்ளார்.

ஆகவே இலங்கை நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் அவ்வாறு பதவி வகிக்க முடியாது எனத் தெரிந்தும் சபாநாயகர் கரு ஜயசூரிய. மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்ததன் நோக்கம் என்ன என்பது குறித்து சம்பந்தன். சுமந்திரன் ஆகியோருக்கு சார்பான தமிழ்த்தரப்புகள் கேள்விகள் எழுப்பியுள்ளன.

உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டத்தரணி சுமந்திரன் எச்சரிக்கைவேறு விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் பதவி விவகாரம் குறித்து ஐக்கியதேசியக் கட்சி விசனத்தை வெளியிட்டாலும் ரணில் விக்கிரமசிங்க இதுவரை வெளிப்படையாகக் கருத்துக் கூறவில்லை.

மகிந்த எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதில் சட்டப் பிரச்சினை உண்டு என்று தெரிந்தும் ரணில் விக்கிரமசிங்க அமைதியாகவே உள்ளார்.

இந்தவொரு நிலைலேதான் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக சம்பந்தன் மகிந்தவுடன் மோதுப்படுகின்றார்.

அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் பொருளாதார நலன்சார்ந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக வளைந்து கொடுத்து ஈழத் தமிழர்களின் தாயகம் சுயாட்சி என்ற கோட்பாடுகளை இலங்கைத் தேசிய அரசியலுடன் கரைப்பதற்கான மற்றுமொரு முயற்சிதான் இந்த எதிர்க்கட்சித் தலைமைக்கான போட்டி என அவதானிகள் கூறுகின்றனர்.

இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்க முடியாது என்பது கடந்த எழுபது ஆண்டுகால அனுபவம்.

ஆனாலும் ஒற்றையாட்சி முறைமைக்குள் தமிழ் மக்கள் வாழ முடியும் என்ற கருத்தியலை சர்வதேச அரங்கில் ஏற்படுத்த ரணில் விக்கிரமசிங்க 2002 ஆம் ஆண்டு எடுத்த முயற்சிக்கு சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் இன்று துணை போய்விட்டனர் என்று அரசியல் அவதானிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஏற்றுக்கொண்ட சம்பந்தன், தற்போது அந்த ஒற்றையாட்சியில் கூட தனக்காக ஜனநாயகம் பேச சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் முன்வரவில்லை என்பதை தற்போதுகூட உணரவில்லை.

அல்லது தெரிந்தும் தமிழ்த்தேசியக் கோட்பாட்டு அரசியலை நிராகரித்து வரும் இந்தியக் கருத்தியலின் அடிப்படையில் செயற்படுகின்றார் என்றே கருத இடமுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட சம்பந்தன் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக நடத்தும் இந்த ஜனநாயகப் போராட்டத்திற்கு ஐக்கியதேசியக் கட்சியும் ஜே.வி.பியும் கூறப் போகும் நேர்மையான பதில் என்ன?

இலங்கையில் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஜனநாயகம் இரண்டு வகையானதோ என்ற கேள்விதான் தற்போது விஞ்சிக் கிடக்கின்றன. அதாவது ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவிக்காகப் பேசப்பட்ட ஜனநாயகம் சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காகப் பேசப்படவேயில்லை என்பதுதான்.

ஆக அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் பொருளாதார நலன்சார்ந்த நிகழ்சி நிரலுக்கு அமைவாக வளைந்து கொடுத்து ஈழத் தமிழர்களின் தாயகம் சுயாட்சி என்ற கோட்பாடுகளை இலங்கைத் தேசிய அரசியலுடன் கரை்ப்பதற்கான மற்றுமொரு முயற்சிதான் சம்பந்தனின் இந்த எதிர்க்கட்சித் தலைமைக்கான போட்டி.

ஆனாலும் இந்தப் போட்டியில் ரணில் விக்கிரமசிங்கவுக்காக குரல் கொடுத்த, ஏனைய சிங்கள அரசியல் கட்சிகள், பொது நிறுவனங்கள் சர்வதேச நாடுகள் சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக குரல் எழுப்பி ஜனநாயகத்தை நிலைநாட்டக் கூடிய சூழல் இல்லையென அவதானிகள் கூறுகின்றனர்.

ரணிலை அல்லது மகிந்தவை காப்பாற்றும் நடவடிக்கைகளைத் தவிர சம்பந்தனைக் காப்பாற்ற சர்வதேச நாடுகள் ஒருபோதும் விரும்பாது என்பதை இனிமேலாவது தமிழரசுக் கட்சி புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் பூகோள அரசியலில் ரணில் அல்லது மகிந்த மாத்திரமே அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்குத் தேவை. சம்பந்தன் அல்ல.

அப்படித் தேவை என்று அந்த நாடுகள் கருத வேண்டுமாக இருந்தால் இலங்கைத் தீவில் இரு தேசிய இனங்கள் இருக்கின்றன என்ற செய்தியை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் தரப்புகள் உரத்துக் கூற வேண்டும்.

ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்த் தரப்புகள் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேயில்லை. இலங்கையின் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தேர்தல் அரசியலில் மாத்திரமே தமிழ்த் தரப்பு ஈடுபடுகின்றது.