தமிழ் பேசும் மக்களின் தாயகமான

திருகோணமலையில் படைத்தளம் அமைக்க பிரித்தானியா முயற்சி- ஆனால் கொழும்பில் உள்ள தூதரகம் மறுப்பு

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான வசதியான நிலை- தமிழ்த்தரப்பின் வகிபாகம் என்ன?
பதிப்பு: 2019 ஜன. 12 15:34
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 12 17:28
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடக்கு மாகாணம் முல்லைத்தீவுக் கடற் பிரதேசத்தில் இருந்து கிழக்கு மாகாணம் திருகோணமலைக் கடற்பிரதேசம் வரையான எண்ணெய்வள ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, திருகோணமலைத் துறைமுகத்தில் கடற்படைத் தளம் ஒன்றையும் அமைத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கச் சார்பு நாடான பிரித்தானியாவும் திருகோணமலையில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதாக லன்டன் டெலிகிராவ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆசியாவில் தளங்களை அமைப்பதற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜெரெமி ஹன்ட் கூறியுள்ளார். அந்த அடிப்படையில் திருகோணமலையில் கடற்படை தளத்தை அமைப்பது குறித்து பிரித்தானியா ஆர்வம் கொண்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
அத்துடன மேற்கிந்திய தீவுகளிலும் கடற்படை தளங்களை அமைப்பது தொடர்பாக பிரிட்டன் ஆலோசித்து வருகின்றது.

மைத்திரி, ரணில். மகிந்த, சந்திரிக்கா அல்லது வேறு எந்த சிங்கள அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் பூகோள அரசியலைப் பயன்படுத்தி இலங்கையை அபிவிருத்தி செய்வதும், ஈழத் தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையை இலங்கைத் தேசியம் என்பதற்குள் கரைத்து விடும் செயற்பாடுகளையுமே முன்னெடுப்பர் என்பது பட்டறிவு.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியனாலும், உலக அளவில் தமது அந்தஸ்த்தை இழந்துவிடவில்லை. அது உயர்ந்த நிலையிலேயே காணப்படுவதாக பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக டெலிகிராவ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

திருகோணமலை, மாலைதீவு அல்லது சிங்கப்பூரில் தளத்தை அமைப்பதற்கு பிரித்தானிய விரும்பியுள்ளது. ஆனாலும் திருகோணமலைதான் பிரதான இலக்காக இருக்கும் என பிரித்தானிய உயர்மட்டத்தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் பிரித்தானியப் படைத் தளங்கள் அமைக்கபடமாட்டாது என கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதரக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சர்வதேச மட்டத்தில் பாதுகாப்பு, வெளி விவகாரங்களில் பிரித்தானியா தொடர்ந்தும் கவனம் செலுத்தும். ஆனால் இலங்கையின் திருகோணமலையில் கடற்படைத் தளம் அமைக்கப்படும் என்ற செய்தியை கொழும்பில் உள்ள தூதரக அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

ஆசியாவில் சீனா பொருளாதார ரீதியான தளங்களை கட்டமைத்து, இராணுவ மூலோபாயங்களின் அடிப்படையிலும் செயற்பட்டு வருவதாக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் ஏலவே சந்தேகம் வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாகவே திருகோணமலைத் துறைமுகத்தை மையமாகக் கொண்டு அமெரிக்கா தமது செயற்பாடுகளை நகர்த்தி வருகின்றது.

இந்திய மத்திய அரசும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்காவைத் தொடர்ந்து பிரித்தானியாவும் ஆசியாவில் குறிப்பாக தென் ஆசியாவில் படைத் தளங்களை அமைக்க முற்படுவது இந்தோ பசுபிக் சமுத்திரத்தில் மேலும் அச்சுறுத்தலான நிலைமை தோன்றும் என அவதானிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக கிழக்கு மாகாணம் திருகோணமலையில் கடற்படைத் தளம் அமைக்கப்படுமானால் அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் தனியுாிமைக் கூட்டுச் செயற்பாட்டுக்கு வழிவகுக்கலாம்.

இராணுவ மூலோபாயத்தின் அடிப்படையில்தான் இந்தக் கூட்டுச் செயற்பாடு அமையும் என்பது உறுதி. ஆனாலும் இந்த நாடுகள் மிகவும் இலகுவாக நினைப்பது போன்று, இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தை குறைந்தளவேனும் கட்டுப்படுத்திவிட முடியாது.

ஏனெனில் இலங்கை அரச கட்டமைப்பு என்பது அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணினாலும், பொருளாதார ரீதியாகவும் கலச்சாரத்தின் அடிப்படையிலும் சீனாவுடனான இராஜதந்திர உறவுக்கு முக்கியத்தும் கொடுக்கும் என்பது கண்கூடு.

அதேவேளை, வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இறுதிப் போருக்கு உதவியளித்த இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், பத்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட சூழலிலும், ஈழத் தமிழரின் அரசியல் தீர்வு விவகாரத்தில் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க்வில்லை.

இந்த நிலையில் ஈழத் தமிழர்களின் கடற்பிரதேசம் மற்றும் துறைமுகங்களை இலக்கு வைத்துச் செயற்படுவதன் மூலம் இலங்கை அரசு என்ற கட்டமைப்பை மாத்திரமே இந்த நாடுகள் நம்பிச் செயற்படுவதாக அமைகின்றது.

இந்த நாடுகளின் இவ்வாறான அணுகுமுறை, இந்தோ பசுபிக் சமூத்திரப் பூகோள அரசியலுக்கு ஏற்றதாகவும் ஆரோகியமானதாகவும் அமையப்போவதில்லை என அவதானிகள் கூறுகின்றனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில்தான் இவ்வாறான பூகோள அரசியலில் இலங்கை அரசு என்ற கட்டமைப்பை மாத்திரம் நம்பி அரசியல், பொருளாதார நகர்வுகளைச் செய்வதற்கு அமெரிக்கா, பிரித்தானியா. ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு வசதியாக அமைந்துவிட்டன.

ஆனால், சிங்கள அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மையும் வடக்கு கிழக்கு மக்கள் ஜனநாயக வழியில் கோரி வரும் சுயாட்சி அதிகாரத்தை அங்கீகரிப்பதற்கான போராட்டங்களும், இந்த நாடுகளின் பூகோள அரசியல் செயற்பாடுகளுக்கு ஆரோகியமாக அமைந்துவிடாது என அவதானிகள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் இலங்கை அரசு என்ற கட்டமைப்பும் இலங்கையின் அரசியல் யாப்பும் ஈழத் தமிழர்களின் சுயாட்சிக்கு பெரும் தடை என்பதையும், சுயாட்சியை நிறுவதற்கு பூகோள அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் தமிழ்த் தரப்பு அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டிய காலகட்டமிது.

அதற்கேற்ப எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டங்கள் பற்றிய ஆதாரங்களும் உண்டு. இனப்படுகொலை நடந்தது என்பதை நிறுவுவதற்கான வழிமுறைகளும் உள்ளது.

ஆகவே, இலங்கை அரசு விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டுள்ள அல்லது இடமளித்துள்ள இந்தப் பூகோள அரசியல் செயற்பாடுகளின் பின்னால் தமிழ்த் தரப்பும் இலங்கை அரசாங்கத்தோடு இணங்கித்தான் செல்ல வேண்டும் என்று சர்வதேச நாடுகள் சொல்வதைக் கேட்பதைவிட, இதுதான் தமிழர் நிலைப்பாடு என்ற செய்தியை இடித்துரைக்க வேண்டியது தமிழ்த் தரப்பின் முதன்மைப் பொறுப்பு.

மைத்திரி, ரணில். மகிந்த, சந்திரிக்கா அல்லது வேறு எந்த சிங்கள அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நாடுகளின் பூகோள அரசியலைப் பயன்படுத்தி இலங்கையை அபிவிருத்தி செய்வதும், ஈழத் தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையை இலங்கைத் தேசியம் என்பதற்குள் கரைத்து விடும் செயற்பாடுகளையுமே முன்னெடுப்பர் என்பது பட்டறிவு.

எனவே கட்சி அரசியல். தேர்தல் அரசியல் ஆகியவற்றில் இருந்து விலகி அல்லது அந்த அரசியல் செயற்பாடுகளுக்கு வேறு இளம் சமூகத்தினரை அறிமுகம் செய்துவிட்டு, தமிழ்த் தரப்பு ஒருமித்த குரலாக, ஒரு தேசிய இயக்கமாக இலங்கை அரசியல் யாப்புக்கு வெளியே நின்று செயற்படுவதன் மூலமே இந்தப் பூகோள அரசியல் மாற்றங்கள் ஊடான அங்கீகாரத்தைப் பெற முடியும்.