2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான சூழலில் தமிழ்த் தரப்பின் மாற்று அணி எது?

பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப விக்னேஸ்வரன் உருவாக்கிய தமிழ் மக்கள் கூட்டணி செயற்படுமா?

சர்வதேசம் தமிழ்த் தரப்புடன் பேச வேண்டும் என்ற கட்டாயச் சூழலை ஏற்படுத்தும் கொள்கை எது?
பதிப்பு: 2019 ஜன. 21 09:57
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 21 16:04
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Geopolitical
#Srilanka
#Tamil
#Vickneswaran
#TNA
வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கிய விக்னேஸ்வரன் தற்போது அதில் இருந்து வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கியுள்ளார். ஆனால் தமிழ் மக்கள் பேரவையில் அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் அவருடைய புதிய கட்சியுடன் கூட்டுச் சேரவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் மாத்திரமே ஆதரவு வழங்கியுள்ளது. சுயாட்சிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கிய அனந்தி சசிதரன் இதுவரை ஆதரவு வழங்கவில்லை.
 
விக்னேஸ்வரனுடன் நெருக்கமாகச் செயற்பட்ட முன்னாள் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் கூட இதுவரை ஆதரவு வழங்குவதாக அறிவிக்கவில்லை.

இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் அரசியல் யாப்பு ரீதியான அநீதிகளை வெளிப்படுத்த வேண்டுமானால், தமிழ்த்தேசிய அரசியல் கோட்பாடுகளுக்கு எதிரான தமிழரசுக் கட்சியின் போக்குகளை அம்பலப்படுத்த வேண்டுமானால் விக்னேஸ்வரன் உருவாக்கிய புதிய கூட்டணி, பூகோள அரசியலின் சாதக பாதக விளைவுகளுக்கு ஏற்ப கொள்கைகளை வகுக்க வேண்டும்.

இந்த நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியில் பதினொரு பேர் பதவி நிலையிலும் மத்திய குழு உறுப்பினர்களாக பதினொருபேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டணியின் தலைவராகவும் செயலாளர் நாயகமாகவும் விக்னேஸ்வரன் செயற்படுவார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவது தமது நோக்கம் அல்ல என்று கூறியுள்ள விக்னேஸ்வரன், தமது கொள்கையை ஏற்கும் எவரும் தமது கூட்டணியில் இணைந்துகொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சிதான் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழலில் ஆனந்தி சசிதரன் தலைமையிலான சுயாட்சிக் கழகம் விரைவில் இணைந்து செயற்படும் எனவும் ஐங்கரநேசன் உள்ளிட்ட பல தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் இணைந்து செயற்படவுள்ளதாகவும் கூட்டணியின் தகவல்கள் கூறுகின்றன.

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேச்சு நடத்தியபோதும் இதுவரை இணக்கம் ஏற்படவில்லையெனவும் ஆனாலும் இணைந்து செயற்படுதில் தமக்கு பிரச்சினை இல்லையென்றும் விக்னேஸ்வரன் அழைப்பும் விடுத்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைகள் உருவாக்கப்படவில்லையென அவதானிகள் கூறுகின்றனர்.

முல்லைத்தீவு, திருகோணமலை உள்ளிட்ட ஈழத் தமிழர்களின் கடற் பிரதேசங்களில் எண்ணெய்வள ஆய்வு நடவடிக்கைகளில் அமெரிக்கா கடந்த செப்ரெம்பர் மாதம் இரண்டாம் திகதி முதல் ஈடுபட்டுள்ளது.

அத்துடன் இந்தியா, ஜப்பான், ஆகிய நாடுகளும் ஒத்துழைத்துச் செயற்படுகின்றன. சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் இணைந்து செயற்படுகின்றன.

இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடனும் பேசினால் மாத்திரமே தமது பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஆரோக்கியமாக அமையும் என்ற சிந்தனையை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு உணர்த்த முடியும்-

ஆனால் இந்த விடயங்கள் குறித்து தமிழரசுக் கட்சியை மையமாகக் கொண்ட தமிழரசுக் கட்சி எதுவுமே பேசவில்லை. திருகோணமலைத்துறை முகம் மீதான அமெரிக்கச் செயற்பாடுகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்குவதால் தமிழரசுக் கட்சி மௌனமாக இருப்பதாக அவதானிகள் கூறியிருமிருந்தனர்.

அத்துடன் வடக்கு - கிழக்கு தமிழா் தாயகப் பிரதேசங்களில் கூடுதல் ஆசனங்களைப் பெற்று இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப செயற்படவில்லையென ஏலவே குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.

இந்த நிலையில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ள விக்னேஸ்வரன், பூகோள அரசியல் குறித்து எந்த விடயங்களையும் முன்வைக்கவில்லை.

ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், சர்வதேச அணுகுமுறைகளை தமிழ்த் தரப்பு எவ்வாறு கையாள வேண்டும் என்ற புதிய வியூகங்கள் எதுவும் விக்னேஸ்வரன் உருவாக்கிய கட்சியின் கொள்கையில் உள்வாங்கப்பட்டதாகத் தெரியவுமில்லை.

ஆகவே, தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாக விக்னேஸ்வரனின் புதிய கூட்டணி செயற்பட வேண்டுமானால், பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப தமிழ்த்தரப்பு கூறுகின்ற விடயங்களை சர்வதேச சமூகம் ஏற்கக் கூடியவாறான கொள்கைகளை முன்வைக்க வேண்டும்.

அப்போதுதான் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான நிலையில் மாற்றுக் கட்சி என்ற அந்தஸ்த்தையும் அங்கீகாரத்தையும் பெற முடியும்.

அத்துடன் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசினால் மாத்திரமே தமது பூகோள அரசியல் நகர்வுகளை ஆரோக்கியமாக முன்னெடுக்க முடியும் என்ற சிந்தனையை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு உணர்த்தவும் முடியும்.

ஆகவே இவற்றைக் கருத்தில் எடுத்து புதிய கொள்கைகளை வகுக்காமல் வெறுமனே தமிழ் மக்கள் கூட்டணியை விக்னேஸ்வரன் அமைத்துள்ளார் என்பதே இங்கு வெளிப்படையாகின்றது.

இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் அநீதிகளை வெளிப்படுத்த வேண்டுமானால், தமிழ்த் தேசிய அரசியல் கோட்பாடுகளுக்கு எதிரான தமிழரசுக் கட்சியின் போக்குகளை அம்பலப்படுத்த வேண்டுமானால் விக்னேஸ்வரன் உருவாக்கிய புதிய கூட்டணி நிச்சயமாக பூகோள அரசியலின் சாதக பாதக விளைவுகளுக்கு ஏற்ப கொள்கைகளை வகுக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய அரசியல் அணுகுமுறைகளிலும் மாற்றங்களைச் செய்தே ஆக வேண்டும். இல்லையேல் தமிழரசுக் கட்சியே போதும் என்ற நிலை சிலருக்கு ஏற்படும். கஜேந்திரகுமார்தான் சரியான இலக்கு என வேறு சிலரும் உணரக் கூடும்.

அல்லது ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்தால் குறைந்த பட்சம் வேலை வாய்ப்புகள், நிவாரணங்கள் கிடைக்கும் என பாதிக்கப்பட்ட மக்கள் சிந்திக்க நேரிடும்.

எனவே இவ்வாறன நிலை என்பது இலங்கை, இந்திய அரசுகளுக்கு தமிழர் தரப்பை பிரித்தாளவும் வசதியாக அமைந்துவிடும். அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் தமிழ்தரப்பு சார்ந்த விடயங்களில் இலங்கை, இந்திய அரசுகள் சொல்லும் கதையை கேட்கும் நிலையும் ஏற்படும்.

இதன் பின்னணி சீன அரசுக்கு இன்னமும் வசதியாகவே அமைந்துவிடும். இவ்வாறனதொரு நிலையில் தமிழரசுக் கட்சி பூகோள அரசியல் சூழலோடு ஒப்பிட்ட தமிழ் அரசியல் செயற்பாட்டுக்குள் வரும் என்று நம்பமுடியாது. வா என்று கேட்கவும் முடியாது.

ஆனால் விக்னேஸ்வரன் உள்ளிட்ட ஏனைய தமிழ் அரசியல் பிரதிநிதிகள் முரண்பாட்டில் ஓர் உடன்பாடாக கூட்டுச் சேர்ந்து செயற்படுவது காலத்தின் அவசியம்.

அதற்கேற்ற முறையில் பூகோள அரசியல் சார்ந்த தமிழர் கொள்கைகளை வகுக்க வேண்டியது தமிழ் மக்கள் கூட்டணியின் பொறுப்பு- அது தமிழர் தரப்பின் புதிய அரசியல் மாற்றத்துக்கான கால்கோளாகவும் அமையும்.