இலங்கை அரசாங்கம் நிலைமாறுகால நீதியை வழங்கத் தாமதம் - ஐ.நா அறிக்கை

ஜெனீவா மனித உரிமைச் சபையில் நம்பிக்கையிழந்த தமிழ் மக்கள் - யாழ்ப்பாணத்திற்குப் படையெடுக்கும் இராஜதந்திரிகள்

சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றே பொருத்தம் எனவும் அபிப்பிராயங்கள் தெரிவிப்பு
பதிப்பு: 2019 மார்ச் 08 10:51
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 09 22:40
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#War
#Geneva
#Jaffna
#Srilanka
#Reconcilition
#Transitionaljustice
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் செயற்பாடுகளில் முற்றுழுதாக நம்பிக்கையிழந்த தமிழ் மக்கள், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றின் ஊடாக ஈழத் தமிழர்கள் விடயத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்ற எதிர்ப்பு மக்களிடம் காணப்படுன்றது. இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதால் அரசியல் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையீனங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் தமிழ் இனப்படுகொலைதான் நடந்தது என்பதை மூடி மறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக, மக்கள் மத்தியில் வலுவான சந்தேகங்களும் நிலவுகின்றன. இந்த நிலையில் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகள் வட மாகாணத்திற்குச் சென்று மக்களின் கருத்துக்களை அறிகின்றனர்.
 
அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், பிரித்தானியத் தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ், சீனத் தூதுவர் செங் யுவான், நெதர்லாந்துத் தூதுவர் ஜோன்னே டோர்னிவேர்ட், சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் சமஷ்டித் திணைக்கள மூத்த ஆலோசகர் மார்ட்டின், ஸ்ரோர்சிங்கர், நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் உள்ளிட்ட பலர் வட மாகாணத்திற்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்குச் சென்று தற்போதைய நிலைமைகளை மக்களிடம் கேட்டு அறிகின்றனர்.

ஈழத் தமிழர்களின் சுயாட்சி அதிகாரங்கள் தொடர்பான விதப்புரைகள் எதுவுமே ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அறிக்கையில் கூறப்படவில்லை. வெறுமனே போரின் பக்கவிளைவுகள் தொடர்பாக மாத்திரமே அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், யாழ் படைகளின் தளபதி உள்ளிட்ட இலங்கை அரச உயர் அதிகாரிகளையும் சந்தித்து உரையாடுகின்றனர்.

சந்திப்புக்களில் பங்குபற்றிய பொது மக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் ஜெனீவா மனித உரிமைச் சபையின் செயற்பாடுகளில் நம்பிக்கையிழந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு நல்லிணக்கம் எனக் கூறிக்கொண்டு சர்வதேச ஆதரவுடன் ஆட்சியமைத்த மைத்திரி - ரணில் அரசாங்கம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லையென யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ரகுராம் நெதர்லாந்துத் தூதுவர் ஜோன்னே டோர்னிவேர்ட் உள்ளிட்ட குழுவிடம் கூறியுள்ளார்.

அதேவேளை, ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான அறிக்கை மீது எதிர்வரும் 20ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மேலும் இரண்டு வருடகால அவகாசத்தைக் கோரவுள்ளது.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தவும் அதற்கு இலங்கை அரசாங்கம் மனித உரிமைச் சபையுடன் இணைந்து செயலாற்றும் என்றும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வாக்குறுதியளிக்கவுள்ளனர்.

ஜெனீவாவுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கடந்த புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்திலும் அறிவித்துள்ளார்.

இந்த வாக்குறுதிக்குப் பக்கபலமாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பங்காளியாக இணைத்துள்ளது. இதனை ஜெனீவா மனித உரிமைச் சபையும் வரவேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே, தமிழ் இனப்படுகொலைகள் பற்றிய விசாரணைகள், அரசியல் விடுதலைக்கான இருதரப்புப் பேச்சுகள் அனைத்தும் நீக்கம் செய்யப்படும் நிலை ஏற்படலாம் என யாழ் மறை மாவட்ட அருட்தந்தை ஒருவர் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையுடன் தொடர்ந்து நெருக்கமான உறவைப் பேணுமாறும், இலங்கையில் என்ன நடக்கிறதெனக் கண்காணிக்குமாறும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர், சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.

தற்போது ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரில் அவர் சமர்ப்பிக்கவுள்ள இலங்கை குறித்த அறிக்கையின் வரைபு இலங்கை அரசின் பதிலைப் பெறுவதற்காக இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்ட பின்னர், நேற்று வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

இலங்கையில் சித்திரவதை, போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமை போன்றவற்றைப் புரிந்தவர்களுக்கு எதிராக சர்வதேச நியாயாதிக்கத்தைப் பயன்படுத்தி சர்வதேச நாடுகள் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்த அறிக்கையில் ஆணையாளர் பரிந்துரை செய்துள்ளார்.

மனித உரிமை விடயங்களில் இலங்கையின் அரசு சிறிதளவு முன்னேற்றம் கண்டுள்ளபோதிலும், நிலைமாறு கால நீதி குறித்த விடயத்தில் தாமதம் நிலவுவதாகவும், கால அட்டவணை இன்றி இலங்கை செயற்படுவது அதற்கு ஒரு முக்கிய காரணமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் பொறுப்புக் கூறல் தொடர்பான சிறப்பு நீதிப் பொறிமுறையை அமைப்பதற்கான திட்டம் எதையும் இலங்கை அரசு வெளியிடவில்லையெனவும், மாறாக அத்தகைய பொறிமுறை தேவையற்றதென ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் கூறியுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

போரின் இறுதிக் காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென அவர் குறை கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தை முடிந்தவரை சமாளித்துச் செயற்படும் அரசியல் உத்தி ஒன்றையே தமிழ்ப் பிரதிநிதிகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் கையாண்டு வருகின்றமை தற்போது வெளிப்படையாகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ரீதியிலான கருத்தறியும் கலந்துரையாடல்கள் என்பவற்றுக்கு போதுமான அரசியல் ஆதரவு வழங்கப்படவில்லையெனவும், பொறுப்புக் கூறலுடனும், மீளிணக்கத்துடனும் அவை போதுமான அளவு தொடர்புபடுத்தப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முன்னேற்றம் போதுமான அளவு இடம்பெறாதமையால், இலங்கை குறித்த விடயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் கட்டாயமாக தொடர்ந்து ஆராயப்படவேண்டுமென மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

காணிகளின் ஒப்படைப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டம், அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் சட்டம், திருகோணமலை மாணவர்கள் ஐந்து பேரின் படுகொலை உட்பட்ட முக்கியமான மனித உரிமை மீறல் வழக்குகள், கடந்த ஆண்டின் முற்பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை என்பன குறித்தும், கடந்த ஒக்ரோபரில் ஆரம்பமாகி டிசம்பர் வரை நீடித்த அரசியல் குழப்பம் குறித்தும் இந்த அறிக்கையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஈழத் தமிழர்களின் சுயாட்சி அதிகாரங்கள் தொடர்பான விதப்புரைகள் எதுவுமே ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அறிக்கையில் கூறப்படவில்லை.

வெறுமனே போரின் பக்கவிளைவுகள் தொடர்பாக மாத்திரமே அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தேர்தல் அரசியலில் வெற்றிபெற்று இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் பதவிகளைப் பெறும் நோக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுவது போன்று ஏனைய தமிழ்க் கட்சிகளும் தற்போது சிந்திக்க ஆரம்பித்துள்ளன.

ஜெனீ்வா மனித உரிமைச் சபையின் மூலமான ஈழத் தமிழ் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை சில தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

ஆக, இலங்கை அரசாங்கத்தை முடிந்தவரை சமாளித்துச் செயற்படும் அரசியல் உத்தி ஒன்றையே தமிழ்ப் பிரதிநிதிகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் கையாண்டு வருகின்றமை தற்போது வெளிப்படையாகின்றன.

தமிழ் இனப் படுகொலை எனவும் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிப் பொறிமுறை அவசியம் எனவும் வடமாகாண சபையில் இரண்டு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தன.

அந்தத் தீர்மானங்களை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதுவரை ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு அனுப்பி வைக்கவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அந்த இரண்டு தீா்மானங்களையும் அப்போது வரவேற்றிருந்தது. ஆனால் இதுவரை அந்த இரண்டு தீர்மானங்களையும் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லையென குற்றச்சாட்டுக்களும் எழாமலில்லை.

இந்த நிலையில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனீவாவுக்குச் சென்றுள்ளார்.