2015 ஆம் ஆண்டின் பின்னரான சூழலில் இலங்கையில்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் - பின்னணியில் அமெரிக்கா, ஆனால் திசை திருப்புகிறார் விமல் வீரவன்ச

இந்தியாவும் பச்சைக்கொடி- ராகுல் காந்தி பிரதமராகப் பதவியேற்றாலும் கொள்கையில் மாற்றமில்லை
பதிப்பு: 2019 மார்ச் 19 22:34
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 20 09:27
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#presidentialelection
#Candidate
#Colombo
#America
#Mahindarajapaksha
#Gotabajarajapaksha
நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்படுவாரென செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்காவே அதன் பின்னணி எனவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே அமெரிக்காவின் நண்பன் என்றும் பிரதமருக்குரிய அலரி மாளிகையில் அமெரிக்காவின் மிலேனியம் சவால் அமைப்பின் அலுவலகம் செயற்படுவதாகவும் மகிந்த தரப்பு உறுப்பினர் விமல் வீரவன்ச இலங்கை நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அமைச்சர் சாகல ரத்நாயக்க மறுத்துள்ளார்.
 
இன்று செவ்வாய்க்கிழமை, இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச, அமெரிக்காவுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நெருங்கிய தொடர்பைப் பேணுவதாகக் கூறினார்.

பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, ரணில் விக்கிரமசிங்கவையும் அவரது அரசாங்கத்தையும் அமெரிக்கா ஆதரித்தது உண்மை. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான அமெரிக்கா, ராஜபக்ச குடும்பத்தையே விரும்பியது என்பதும் வெளிப்படை.

அத்துடன் கொழும்பு துறைமுகத்தில் இருந்து திருகோணமலை வரை, 200 கிலோ மீற்றர் தூரத்துக்கு விசேட பொருளாதார வலயம் அமைக்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், குற்றம் சுமத்தினார்.

ஆனால், இதனை மறுத்த அமைச்சர் சாகல ரட்னாயக்கா, அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்புகள், உடன்படிக்கைகள் எதுவுமே இல்லையெனக் கூறினார்.

அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், இலங்கையில் அரசியல் மாற்றம் ஒன்றை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வரவேற்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

மகிந்த ராஜபக்ச அணிக்கு அமெரிக்கா ஆதரவு கொடுப்பதை திசை திருப்பவே விமல் வீரவன்ச, ரணில் விக்கிரமசிங்கவின் அலரிமாளிகையில் அமெரிக்க முகவர் அமைப்பின் அலுவலகம் இயங்குவதாகக் கூறினார் என்றும் அந்த வட்டாரங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ச எதிர்க்கட்சிகளின் வேட்பாளராகப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சுடன் மகிந்த ராஜபக்ச சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச கொழும்பில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்கா அதனை வரவேற்கும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா ஏலவே கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுமிருந்தார்.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவதன் பின்னணியில் அமெரிக்காவின் இரகசிய நகர்வு உள்ளதா என்ற கேள்வியுடன் எமது கூர்மை செய்தித் தளத்தில் கடந்த ஆண்டு யூன் மாதம் செய்திக் கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து கடந்த ஆண்டு டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்க நிர்வாகம் விலகியிருந்தது. மனித உரிமை மீறல் குறித்து இஸ்ரேல் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை மனித உரிமைச் சபை முன்வைப்பதாகக் கூறி ஆத்திரமடைந்த நிலையிலேயே அமெரிக்கா வெளியேறியிருந்தது.

இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்றாலும் இலங்கையில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதில் இந்தியாவுக்குப் பிரச்சினை இருக்காது.

அத்துடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்தும் விலகவுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

இதன் பின்னணியில் இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து இலங்கை அரசு என்ற கட்டமைப்பையும் அதன் முப்படைகளையும் விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையில் ராஜபக்ச குடும்பம், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துடன் நெருங்கிய உறவைப் பேண ஆரம்பித்திருந்தது.

ஏறத்தாள ஒரு வருடத்தின் பின்னரான நிலையிலேதான் கோட்டாபய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளருக்குப் பொருத்தமானவர் என்ற முடிவுக்கு மகிந்த ராஜபக்ச வந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் அமெரிக்க ஆதரவுடன் குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் ஆதரவுடன் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வருகின்றார் என்பது உறுதிப்படுத்தப்பட்டால், பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற முடியாது என்ற அடிப்படையில் விமல் வீரவன்ச, அமெரிக்காவுடன் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்புபடுத்தி அதுவும் நாடாளுமன்றத்தில் பேசியதாக அவதானிகள் கூறுகின்றனர்.

பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, ரணில் விக்கிரமசிங்கவையும் அவரது அரசாங்கத்தையும் அமெரிக்கா ஆதரித்தது உண்மை. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான அமெரிக்கா, ராஜபக்ச குடும்பத்தையே விரும்பியது என்பதும் வெளிப்படை.

இந்தியாவில் நரேந்திரமோடி அரசாங்கத்திற்கும் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்துக்கும் உள்ள உறவு நிலையும் மற்றுமொரு காரணமாகும்.

இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்றாலும், இலங்கையில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகிப்பதில் இந்தியாவுக்குப் பிரச்சினை இருக்காது.

ஏனெனில் தற்போது நரேந்திர மோடி அரசாங்கம், இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் கையாளும் அதேவகையான இராஜதந்திரத்தையே ராகுல் காந்தியும் பின்னபற்ற நேரிடலாமென அவதானிகள் கருதுகின்றனர்.

ஏலவே காங்கிரஸ் பின்பற்றிய அதே கொள்கையைத் தான் இலங்கை விவகாரத்தில் நரேந்திரமோடி அரசாங்கமும் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்தது என்பதும் கண்கூடு.

எனவே, இதன் பின்னணியிலேதான் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக மகிந்தவினால் அறிவிக்கப்படுவார் என்ற செய்தியும் கடந்த 16 ஆம் திகதி கசியவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.