2009 ஆம் ஆண்டின் பின்னரான சூழலில்

நடப்பு ஆண்டின் ஜெனீவாத் தீர்மானம் இலங்கை அரசாங்கத்துக்கே சாதகம்- மனித உரிமைச் சபையின் பலவீனம்

கண்காணிப்பு அலுவலகம் ஒன்றை அமைக்கும் விடயத்திலும் தோல்வி
பதிப்பு: 2019 மார்ச் 27 10:38
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 27 18:50
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் புதிதாக எந்தவொரு மாற்றங்களும் செய்யப்படவில்லை. மாறாக 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த விடயங்களையே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செய்து முடிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையில் கூட போர்க்குற்ற விசாரணைக்கான சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறை நீதிக்கட்டமைப்பு உருவாக்கக்பட வேண்டுமெனத் தெளிவாகக் கூறப்படவில்லை. ஆகவே இந்த ஆண்டு ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தெளிவற்றதும் தமிழ்த்தரப்பை சமாளிப்பதற்கும் ஏற்ற முறையில் அமைந்துள்ளதாகவே அவதானிகள் கூறுகின்றனர்.
 
இந்த நிலையில் கலப்புமுறை நீதிக் கட்டமைப்பை நிராகரித்தமைக்கு ஜே.வி.பி. உள்ளிட்ட சிங்களக் கட்சிகள் இலங்கை அரசாங்கத்தை வரவேற்றுள்ளமை எந்த அடிப்படையிலானது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இலங்கை அரசியல் யாப்பில் சர்வதேச நீதிக்கட்டமைப்பை உருவாக்க இடமுள்ளதென்று சுமந்திரன் உறுதியாக நம்புவதால், ரணில் விக்கிரமசிங்கவின் செல்வாக்கின் அடிப்படையில் இலங்கை உயர் நீதிமன்றத்திடம் ஆலோசணை பெற முடியுமா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த ஆண்டுக்கான ஜெனீவாத் தீர்மானத்தில் சொல்லப்படாத கலப்புமுறை நீதிமன்ற முறையை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததாக கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள ஆங்கில நாளேடுகளும் கூறுகின்றன.

அப்படியானால் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த 30/1 தீர்மானத்தையே, இலங்கை அரசாங்கம் இம்முறை நடைபெற்ற ஜெனீவாத் தீர்மானத்தில் நிராகரித்துள்ளதா என்றும் கேள்விகள் எழாமலில்லை.

30/1 தீர்மானத்தின் பிரகாரம் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்புமுறை நீதிக்கட்டமைப்புத் தொடர்பாகக் கூறப்பட்டிருந்தது. ஆகவே இந்தத் தீர்மானத்தையே இலங்கை அரசாங்கம் நிராகரித்ததா என்பது குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன.

அப்படியானால் இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் பெறுமதியென்ன? இது குறித்து மனித உரிமைச் சபையின் ஆணையாளர் கூட்டத் தொடரின் முடிவில் எதுவுமே கூறவில்லை.

இலங்கை அரச பிரதிநிதியாக ஜெனீவாவுக்குச் சென்ற வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன. கலப்புமுறை நீதிக்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நேரடியாகவே நிராகரித்துள்ளார்.

அத்துடன், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளும் ரோம் உட்னடிக்கையிலும் கைச்சாத்திட முடியாதெனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் மனித உரிமைச் சபை இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டது என்ற முடிவுக்கே வரமுடியுமென அவதானிகள் கூறுகின்றனர்.

30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜெனீவா மனித உரிமைச் சபையின் கண்காணிப்பு அவலுவலகம் ஒன்றை கொழும்பில் அமைக்க வேண்டுமென ஆணையாளர் விடுத்த வேண்டுகோளைக் கூட இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டாக இல்லை. (அதனைக் கூட தீர்மானத்தில் உருப்படியாகச் சொல்லவுமில்லை)

ஆகவே இம்முறை ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விடயங்கள் அனைத்தும் பெறுமதியற்றது எனவும் இலங்கை அரசாங்கத்திற்கே சாதகமானது என்றும் அவதானிகள் கூறுகின்றனர்.

ஆனால் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புமுறை நீதிக்கட்டமைப்பு அமைக்கப்பட்டு போர்க்குற்ற விசாரணை இடம்பெறுமென கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் மீண்டும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கலப்பு முறை நீதிக்கட்டமைப்பை உருவாக்க இலங்கை அரசியல் யாப்பில் இடமிருப்பதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

எனினும் இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புமுறை நீதிக் கட்டமைப்பை உருவாக்க முடியாதென அமைச்சர் திலக் மாரப்பன ஜெனீவாவில் அடித்துக் கூறியுள்ளார்.

அதுவும் ஜெனீவாவில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கூறியுள்ளார். அவ்வாறு கலப்பு முறை நீதிக்கட்டமைப்பை உருவாக்க வேண்டுமானால் இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவை என்றும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆகவே கலப்புமுறை நீதிக்கட்டமைப்பு விவகாரத்தில் அமைச்சர் திலக் மாரப்பன கூறுவதை மக்கள் நம்புவதா அல்லது சுமந்திரன் சொல்வதை நம்புவதா என்பது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

அப்படியானால், இலங்கை அரசாங்கம் தனது அரசியல் யாப்பு விதிகளையே மீறுவதாகக் கூறி சுமந்திரனால் பகிரங்கமாகவே குற்றம் சுமத்த முடியுமா? அல்லது ரணில் அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கி வரும் செல்வாக்கின் அடிப்படையில், கலப்புமுறை நீதிக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்க இலங்கை அரசியல் யாப்பில் இடமுள்ளதாக என்று இலங்கை உயர் நீதிமன்றத்தில் ஆலோசணை பெற முடியுமா?

ஏனெனில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரத்தில் சுமந்திரன் இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றிபெற்றிருந்தாக தமிழரசுக் கட்சி மார்தட்டியிருந்தது.

அந்தத் தீர்ப்பின் பின்னர் இலங்கை நீதித்துறை சுயாதீனமானது என்று கூறி சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் நம்பிக்கையும் வெளியிட்டிருந்தனர்.

ஆகவே இலங்கை அரசியல் யாப்பில் சர்வதேச நீதிக்கட்டமைப்பை உருவாக்க இடமுள்ளதென்று சுமந்திரன் உறுதியாக நம்புவதால், ரணில் விக்கிரமசிங்கவின் செல்வாக்கின் அடிப்படையில் இலங்கை உயர் நீதிமன்றத்திடம் ஆலோசணை பெற முடியுமா என்று கேள்விகள் எழுவதிலும் நியாயங்கள் உண்டு.

ஆனால், இலங்கை உயர் நீதிமன்றம் சிங்கள மக்கள் விவகாரத்தில் நீதியாகச் செயற்படுகின்றது எனவும் தமிழர்கள் விவகாத்தில் மாத்திரமே பௌத்த தேசியவாதக் கண்ணோட்டத்தில் தீர்ப்புகளை வழங்குவதாகவும் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவேல் குமரகுருபரன் ஏலவே கூறியிருந்தார்.

எவ்வாறாயினும் ஈழத் தமிழர் விவகாரம் ஜெனீவா மனித உரிமைச் சபையைக் கடந்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டுமென்றே தமிழ்த் தரப்பு எதிர்பார்க்கின்றது.