இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில்

கோட்டாபய போட்டியிடுவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில்- மேதினக் கூட்டத்தில் உரையாற்றுவார்

மைத்திரியை விலக்கிவிட்டு சந்திரிக்காவை தலைவராக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயற்சி
பதிப்பு: 2019 ஏப். 09 18:30
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 09 19:56
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவருவதற்கு முன்னரே சர்வதேச மட்டத்திலான சதி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரைவில் கோட்டாபய ராஜபக்சவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராகப் பிரேரிப்பார் என்றும் அதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள சதி முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்படுமெனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்ச உரையாற்றுவாரென்றும் அன்றில் இருந்து அவருடைய அரசியல் பயணம் ஆரம்பிக்குமெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூறியுள்ளது.
 
அமெரிக்காவில் கோட்டாபயவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து அமெரிக்காவின் டொனாலட் ட்ரம் நிர்வாகம் விலகியுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பம் டொனாலட் ட்ரம் நிர்வாகத்தோடு நெருங்கிய உறவுகளைப் பேணி வருகின்றது.

தற்போது அமெரிக்காவில் உள்ள கோட்டாபய ராஜபக்ச, கொழும்பு திரும்பியதும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோரைச் சந்திப்பாரென ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான, டளஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச ஆகியோரும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர். கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கப் பிரஜா உரிமையை ரத்துச் செய்வதற்கான விண்ணப்பங்களை அமெரிக்கக் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் கையளித்துள்ளதை, டளஸ் அழக பெருமாக இந்தச் செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்ட கருத்துக்கள் மூலம் அறிய முடிகின்றது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளை எதிர்த்துப் போராட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகியுள்ளதாக போராசிரியர் பீரிஸ் கூறினார்.

இதேவேளை. ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை விருப்பத்தை வெளியிடவில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை அறிவிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டபோதும் மகிந்த ராஜபக்ச அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் அதற்கு உடன்படவில்லை. இதனால் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதை அனுமதிக்க வேண்டுமென மகிந்த ராஜபக்ச தரப்பு எதிர்ப்பார்க்கின்றது.

மகாநாயக்கத் தேர்கள் உள்ளிட்ட பௌத்த குருமாரும் அவ்வாறே ஆலோசணை வழங்கியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேனவைத் தவிர்த்துவிட்டு, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கோரியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதை அனுமதிக்க வேண்டுமென மகிந்த ராஜபக்ச தரப்பு எதிர்ப்பார்க்கின்றது. மகாநாயக்கத் தேர்கள் உள்ளிட்ட பௌத்த குருமாரும் அவ்வாறே ஆலோசணை வழங்கியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி விரும்பில்லையென்று தெரிந்தும் மகிந்த ராஜபக்ச தரப்பை தொடர்ந்தும் மைத்திரிபால சிறிசேன ஏன் நம்புகிறாரெனவும் சந்திரக்கா மூத்த உறுப்பினர்கள் சிலரிடம் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

கடந்த ஐந்தாம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நடப்பு நியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பிலும் சந்திரிக்காவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 23 பேர் எதிராக வாக்களிக்கவில்லை.

இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேனவை கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலக்கிவிட்டு மீண்டும் சந்திரிக்காவை தலைவராக நியமிக்க கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

அதேவேளை, நீதியை நிலைநாட்டவே கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னிய நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட ரோய் சமாதானம் என்பவர் கூறியுள்ளார்.

2007 ஆம் ஆண்டு திருமணம் செய்வதற்காக கனடாவில் இருந்து கொழும்புக்கு வந்தபோது கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் மூன்று ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் சட்டத்தரணியைக் கூட சந்திக்க அனுமதிக்கவில்லையென்றும் ரோய் கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி கொழும்பு கல்கிசையில் படுகொலை செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் ஆஹிம்சாவும் அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்திருந்த காலத்தில் அவர் மீது ஆட்களைக் கடத்தல் காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆனாலும் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் இருந்து அமெரிக்காவின் டொனாலட் ட்ரம் நிர்வாகம் விலகியுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பம் டொனாலட் ட்ரம் நிர்வாகத்தோடு நெருங்கிய உறவுகளைப் பேணி வருகின்றது.

2005 ஆண்டு முதல் 2015 ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் திகதி வரை கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்திருந்தார்.