இலங்கையில் நீதித்துறையின் பாகுபாடு

சத்குமாரவின் கைதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும்- பொல்காவல நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும்?

கைதானால் தமிழர்களுக்குப் பயங்கரவாதத் தடைச் சட்டமும் சிங்களவர்களுக்கு வேறு சட்டமும்
பதிப்பு: 2019 ஏப். 10 16:03
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 11 15:21
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் தேரவாத பௌத்த சமயத்தை (Theravada Buddhist) மையப்படுத்திய பிக்குமார் சிலரின் ஒருபால் சேர்க்கை (Homosexuality) தொடர்பாக சிங்கள மொழியில் களு மக்கற (Black Dragon) என்ற சிறுகதையை எழுதிய சக்திக சத்குமார என்ற சிங்கள இளைஞன், குருநாகல் மாவட்ட பொல்காவல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக் காவில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் 2007 ஆண்டு 56 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் பிரிவு மூன்றின் கீழ் (International Covenant on Civil and Political Rights) (ICCPR) கைது செய்யப்பட்டே முப்பத்தி மூன்று வயதான சக்திக சத்குமார நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
 
இலங்கைப் பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்துகின்றனர். விகாரை ஒன்றுக்குள் வைத்து பௌத்த குருமார் சிலர் சிறுவர் இளைஞர்களுடன் ஓருபால் சேர்க்கையில் ஈடுபடுவது தொடர்பாகவே சக்திக சத்குமாரவின் களுமக்கற ('Kalu Makara') (Black Dragon) என்ற சிறுகதை சித்தரிக்கின்றது.

பௌத்த சமயத்திற்கும் இலங்கை அரச கட்டமைக்குக்கும் எதிராக கருத்து வெளியிட்டால், ஏதாவது எழுதினால் ஒருவரைக் கைது செய்வற்கான ஏற்பாடுகளை மாத்திரமே ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேசச் சமவாயத்தின் உறுப்புரை 20 இல் கூறப்பட்டுள்ள பகுதியை இலங்கை ஒற்றையாட்சி அரசு ஏற்றுள்ளது.

இந்தச் சிறுகதையினால் அதிருப்தியும் ஆத்திரமுமடைந்த ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட பௌத்த அமைப்புகள், சக்திக சத்குமார சமூக அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றிய நிக்கரவெட்டிய பிரதேச செயலாளர், குருநாகல் மாவட்டச் செயலாளர் ஆகியோரிடம் முறையிட்டன.

ஆனாலும் நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லை. இதனால் பொல்காவல பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர். அதனையடுத்து சக்திக சத்குமார தனது சட்டத்தரணி பி.டபிள்யு.டபிள்யு ரட்னாயக்கேயுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்தார்.

அங்கு விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டு ஏப்பிரல் முதலாம் திகதி பொல்காவல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் பிரிவு முன்றின் கீழ் விசாரணை இடம்பெறுகின்றது.

2007 ஆண்டு 56 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை நாடாளுமன்றத்தால் அங்கீரிக்கப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) பிரிவு 3 (1) இன்படி இனக் குரோதங்களைத் தூண்டுதல் மதங்களிடையே வெறுப்பை உருவாக்குதல், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைத் தூண்டுதல், என்ற உறுப்புரைகள் உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) உண்மையான அடிப்படைக் கோட்பாடுகள், இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 56 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் முழுமையாக உள்ளடக்கப்படவில்லை எனவும் சமவாயத்தில் (ICCPR) கூறப்பட்டுள்ள தமக்கு உரியதான சில உறுப்புரிமைகள் மாத்திரமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி காண்டீபன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இனக் குரோதங்களைத் தூண்டுதல் மதங்களிடையே வெறுப்புகளை உருவாக்குதல் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைத் தூண்டுதல் போன்றவற்றுடன் தேசிய பாதுகாப்புக்கு எதிரான விடயங்களும் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள பிரிவு 14 2/இல் ஏலவே கூறப்பட்டுள்ளது.

ஆகவே இந்த உறுப்புரைகளுடன் சேர்த்து சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) பிரிவு மூன்றும் இலங்கையில் ஒருவருடைய கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதாகவே அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, சிவில் மற்றும் சிவில் மற்றும் சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) பிரகாரம் சத்திக சத்குமாரவை நீதிமன்றம் தடுத்து வைக்க முடியாதென அவரது சட்டத்தரணி ரட்னாயக்கே கூறியுள்ளார்.

ஊடகத்துறை சார்ந்த பிரசுரங்கள், வெளியீடுகள், தொடர்பான விடயங்களில் தமிழர்கள் கைது செய்யப்படும்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும், சிங்களவா்கள் கைது செய்யப்படும்போது சிவில் மற்றும் சர்வதேசச் சமவாயத்தின் படியும் கைது செய்யப்படுவதாகவும் இது புதிய முறையிலான இனரீதியான பாகுபாடு எனவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக் குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் (Penal Code) உள்ள பிரிவு 292 இன் படியும் சக்திக சத்குமாரவுக்கு எதிராக குற்றம் சுமத்த முடியாதெனவும் சட்டத்தரணி ரட்னாயக்கே தெரிவித்துள்ளார்.

ஒருபால் சேர்க்கை தொடர்பாக சிறுகதை எழுதியமை அவருடைய கருத்துச் சுதந்திரம். அது மத நல்லிணக்கத்தை அல்லது மதங்களுக்கிடையே வெறுப்பை உருவாக்கவில்லை என்றும் சட்டத்தரணி ரட்னாயக்கே தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பில் இருந்து வெளிவரும் வார இதழில் ஒன்றில் புலிகளின் மூத்த தளபதி உயிர்நீத்த பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பாக கட்டுரை எழுதியவரின் பெயர் விபரங்களை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள பிரிவு 14-/2 இன் பிரகாரம் குறித்த வார இதழ் ஆசிரியரிடம் இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கோரியிருந்தது.

ஆசிரியர் விபரங்களை வழங்க மறுத்ததால் இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் யாழ் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் பி (B) அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

ஆனாலும் விசாரணையின்போது, இலங்கை நாடாளுமன்றதால் 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) படி எழுத்துச் சுதந்திரம் குறித்த உரிமைகளை யாழ் நீதிமன்றம் எடுத்துக் காண்பித்து, பி (B) அறிக்கையை கடந்த ஐந்தாம் திகதி தள்ளுபடி செய்திருந்தது.

அத்துடன் இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் அரசியல் யாப்பில் உள்ள உறுப்புரை 14 இல் கூறப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தின் (Freedom of Expression) அடிப்படையில் எழுதுவதற்கான உரிமை உண்டு என்பதை யாழ் பிரதான நீதவான் நீதிமன்றம் இலங்கைப் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு அறிவித்துமுள்ளது.

1973 ஆம் ஆண்டு இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் ஐந்தாம் இலக்கச் சட்டத்தின் கீழான 14-10-1981 அன்று வெளியிடப்பட்ட இலங்கை ஒற்றையாட்சி அரச வர்த்தமானி இதழின் இலக்கம் 162- 5/A பிரிவு நான்கில் கூறப்பட்டுள்ள தகவலைப் பாதுகாத்தல், இரகசியம் பேணுதல், உள்ளிட்ட விடயங்கள், குறிப்பாக கட்டுரை அல்லது செய்தியை எழுதியவர் தகவல் மூலத்தை வெளியிட மறுத்தால் அதனைக் கோர முடியாது என்று குறித்த வர்த்தமானி இதழில் கூறப்பட்டுள்ளதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.

கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம், (Freedom of Expression) சுயநிர்ணய உரிமை, சிவில் உரிமை ஆகிய விடயங்கள் இலங்கை நாடாளுமன்றதால் அங்கீகரிக்கப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) அடிப்படைக் கோட்பாடுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் யாழ் நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் சபையின் அந்தச் சமவாயத்தில் உள்ள முழுமையான அடிப்படை விடயங்களையும் எடுத்துக் காண்பித்து அந்த பி அறிக்கையை தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில் சத்திக சத்குமார மீது பௌத்த பிக்குமார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் எந்த அடிப்படையிலானதென்று அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதேவேளை, ஊடகத்துறை சார்ந்த பிரசுரங்கள், வெளியீடுகள், தொடர்பான விடயங்களில் தமிழர்கள் கைது செய்யப்படும்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும், சிங்களவா்கள் கைது செய்யப்படும்போது சிவில் மற்றும் சர்வதேசச் சமவாயத்தின் உறுப்புரை 20இன் படியும் கைது செய்யப்படுவதாகவும் இது புதிய முறையிலான இனரீதியான பாகுபாடெனவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத் பிரிவு 14-/2 இன்கீழ் கைது செய்யப்படும் போது இலங்கைத் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற விடயம் தமிழர்கள் மீது முன்வைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

இதேவேளை, 2007 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டு கையொப்பமிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) அடிப்படைக் கோட்பாடுகள், எதுவுமே இலங்கை நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படாமல் நீக்கம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் இதுவரை ஏன் கேள்வி எழுப்பவில்லை. அல்லது தமிழ்த்தரப்பு இதுவரை ஏன் எடுத்துக் கூறவில்லையென்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும் இந்த விடயம் குறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் கேள்வி எழுப்பியதுடன் அந்த விவகாரம் நின்று விட்டது.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் தாய்ச்சட்டத்தில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயம் (ICCPR) சேர்க்கப்படவில்லை. வெறுமனே சாதாரண சட்டமாகவே இலங்கை நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. அதுவும் அதன் உண்மையான அடிப்படை கோட்பாடு நீக்கம் செய்யப்பட்டே அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது.

சிவில் மற்றும் சர்வதேசச் சமவாயத்தின் பிரகாரம் (ICCPR) இனம் ஒன்றின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல், சிவில் சமூக உரிமைகளுக்கு இடமளித்தல், தன்னுடைய அரசியல் உரிமைகளை தானே தீர்மானிக்கும் உரிமை உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) உறுப்புரை 20இல் கூறப்பட்டுள்ள பகுதி உள்ளிட்ட குறிப்பிட்ட சில விடயங்களை மாத்திரமே இலங்கை அரசாங்கம் ஏற்றுள்ளது.

ஏனெனில் பௌத்த சமயத்திற்கும் இலங்கை அரச கட்டமைக்குக்கும் எதிராக கருத்து வெளியிட்டால், ஏதாவது எழுதினால் அவரைக் கைது செய்வதே அதன் நோக்கமாகும்.

அதேவேளை, அந்தச் சமவாயத்தில் கூறப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமை என்பதைப் பயன்படுத்தி தமிழர்கள் வடக்கு- கிழக்கு இணைந்த சுயாட்சியைக் கோரிவிடுவார்கள் என்ற அச்சத்தினாலேயே சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) முக்கியமான பகுதிகளை இலங்கை அரசாங்கம் நீக்கியிருக்க வேண்டுமென சட்டத்தரணி காண்டீபன் சந்தேகம் வெளியிட்டார்.

இதன் காரணத்தினால் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் தாய்ச்சட்டத்தில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயம் (ICCPR) சேர்க்கப்படவில்லை. வெறுமனே சாதாரண சட்டமாகவே இலங்கை நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. அதுவும் அதன் உண்மையான அடிப்படை கோட்பாடு நீக்கம் செய்யப்பட்டே அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்காலத்தில் வேண்டுமானல் இந்தச் சட்டத்தை இல்லாமலும் செய்ய முடியும்.

எனவே சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயம் (ICCPR) பெயரளவிலேயே இலங்கையில் சட்டமாக்கப்பட்டுள்ளதென்று காண்டீபன் கூர்மைச் செய்தித் தளத்தி்ற்குக் கூறினார்.

ஆகவே ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளதா அல்லது இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையை ஏமாற்றியுள்ளதா என்பது இங்கு பகிரங்கமான கேள்வியாகும்.

பிக்குமாரின் ஓருபால் சேர்க்கைகள் பற்றிய சிறுகதையை எழுதிய சக்திக சத்குமார இலங்கையில் ஐந்து தேசிய விருதுகளைப் பெற்றவர். பல நூல்களையும் எழுதியுள்ளார்.

1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி குருநாகல் வரக்காப்பொல பிரதேசத்தில் பிறந்த சக்திக சத்குமார, இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.