இனப்பிரச்சினைத் தீர்வுக்காக 1987 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட

மாகாண சபைகளுக்கு ஆபத்து-13 ஆவது திருத்தச் சட்டம் கைவிடப்படலாம்

ஜனாதிபதித் தேர்தலா? நாடாளுமன்றத் தேர்தலா? முரண்பாட்டிலும் உடன்படும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள்
பதிப்பு: 2019 ஏப். 18 16:10
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 19 00:03
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா என்பது ஆலோசித்து வருகின்றது. பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் அதனை விரும்புகின்றன. ஆனால் 2016 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அஙீகரிக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி எந்தத் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும். முதலில் மாகாண சபைத் தேர்தல்களே நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கான காலம் பிந்தியுள்ளதாகவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் சட்டச் சிக்கல் இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இலங்கைச் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஏலவே கடிதம் அனுப்பியுள்ளார்.
 
தேர்தலை நடத்த வேண்டுமானால் சிறப்புப் பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எதுவுமேயில்லாத அரைகுறை அரசியல் தீர்வு என்று கூறப்படும் மாகாண சபை முறையைக் கைவிட உத்தேசிக்கப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்ற பேச்சைக் கைவிட்டு நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் காலம் தாமதித்தாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து உயர் நீதிமன்றத்திடம் சட்ட வியாக்கியாணம் கேட்டுமாறும் மஹிந்த தேசப்பரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சென்ற ஐந்தாம் திகதி கடிதம் எழுதியுமிருந்தார்.

ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதிலேயே இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்துவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இந்த இரண்டு தேர்தல்களிலும் ஏதாவது ஒன்றை முதலில் நடத்த வேண்டும் என்பதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் எதிர்ப்பார்ப்பு என்றும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை இந்தக் குழப்பங்களை சாதகமாகப் பயன்படுத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையை இலங்கை அரசாங்கம் அப்படியே கைவிட திட்டமிடுவதாகவும் அதனை பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் விரும்புவதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

1987 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாதென தமிழ்க் கட்சிகள் அன்று கூறியிருந்தன. அதற்காக இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் நிராகரித்தன.

எனினும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட வேண்டிய கட்டாயம் தமிழ்த் தரப்புக்கு ஏற்பட்டிருந்தது. ஆனாலும் இது இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் பல தடவை கூறிவிட்டார்.

எனினும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் இன்று பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் இதுவரை எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை.

இந்த நிலையில் எந்த அதிகாரங்களுமே இல்லாத அரைகுறை அரசியல் தீர்வு என்று கூறப்படும் மாகாண சபை முறையைக் கூட கைவிட உத்தேசிக்கப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்ற பேச்சைக் கைவிட்டு நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தன்னை வேட்பாளராக நியமிக்க வேண்டுமென மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பார்த்திருந்தார்.

அந்த அடிப்படையிலேயே கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி எதிர்க்கட்சியில் இருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டு, அவர் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பதவியேற்றிருந்தது.

எனினும் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியையடுத்து ஐம்பத்தி ஒரு நாட்களின் பின்னர் மீண்டும் பிரதமாரக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச வேட்பாளர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கொள்ளையளவில் கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போர் நீடித்து வருகின்றது.

ஆகவே இவ்வாறானதொரு நிலையில் நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தி, பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவையும் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவையும் நியமிக்கும் திட்டம் ஒன்று உள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இந்தத் திட்டம் குறித்து மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களோடு: ஆலோசித்து வருகின்றார். ஆனாலும் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அதற்கு விரும்பவில்லையெனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான குடியுரிமை குறித்த சட்டச் சிக்கல் நீடித்தால், மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நியமித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியையும் இணைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆலோசிப்பதாகக் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரேநேரத்தில் நடத்தக் கூடிய வாய்ப்புகள் இல்லையெனவும் அது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசணையைப் பெறவேண்டிய தேவையுள்ளதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.