தலைக்கு 25 மில்லியன் டொலர் விலையுடன் அமெரிக்காவால்

தேடப்படும் இஸ்லாமிய அரசின் சூட்சுமதாரி வீடியோவில் தோற்றம்

பின்னிணைப்பிலேயே இலங்கைத் தாக்குதல் பற்றி சிலாகித்துள்ளார்
பதிப்பு: 2019 ஏப். 30 20:16
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 30 22:07
Abu Bkar Al Baghdadi
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#AbuBakral-Baghdadi
#Syria
#Srilanka
#EasterAttackSl
ஒசாமா பின் லாடனுக்குப் பின் அமெரிக்காவால் வேட்டையாடப்படும் முதலாம் நம்பர் இலக்கு இஸ்லாமிய அரசு என்ற குழுவின் தலைவனாகத் தன்னைத் தானே 2014 இல் பிரகடனப்படுத்திக்கொண்டவர் அபூ பக்கர் அல் பக்டாடி ஆவார். ஈராக்கைச் சேர்ந்த 48 வயது நிரம்பிய இவர் 2014 இல் ஒரு வீடியோவில் தோன்றினார். ஐந்து வருடங்களின் பின் முதன்முறையாக இந்தத் திங்கட்கிழமையன்று, குறிப்பாக இலங்கையில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, அல் பக்டாடியின் காணொளி ஒன்று மீண்டும் வெளியாகியுள்ளமை உலகச் செய்திகளின் இன்றைய தலைப்பாகியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன் தன்னை இஸ்லாமிய அரசின் தலைவனாக வீடியோவில் வெளிப்படுத்திய அல் பக்டாடி, பொதுவாக பின் லாடனைப் போல பகிரங்கமாகத் தனது முகத்தை அடிக்கடி பிரபலப்படுத்துவதில்லை.
 
ஒரு படைக் கட்டுமானத்தைக் கட்டி மரபு வழிப் போரை மத்திய கிழக்கிலும், பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கு நாடுகளிலும் வழிநடத்திவந்த பக்டாடி, 2011 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவால் தேடப்படுபவர்.

இவரது தலைக்கு அமெரிக்கா அறிவித்திருக்கும் விலை 25 மில்லியன் டொலர்கள். 2016 இலும் 2017 இலும் பக்டாடி கொல்லப்பட்டு விட்டதாகப் பல ஊகங்கள் வெளிப்பட்டிருந்தன.

தற்போது, இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை முழுமையாகத் துவம்சம் செய்துவிட்டதாக அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகள் பிரகடனம் செய்து ஒரு சில கிழமைகளுக்குள், பக்டாடி பகிரங்க வீடியோ ஒன்றில் மீளவும் தோன்றியிருக்கிறார்.

அல் பக்டாடி
வீடியோவில் வெளிப்பட்டிருக்கும் அல் பக்டாடி. அவருக்கு அருகில் பழைய AK-74 கலாசினிக்கோவ் ரக துப்பாக்கி. இதைப் போன்ற ஒரு துப்பாக்கியோடுதான் பின் லாடனின் வீடியோக்களும் முன்பு வெளியாகியிருந்தன. படம் அசோசியேட்டட் பிறஸ்

இந்தப் புதிய வீடியோவில் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ஒலிப்பதிவில் மாத்திரமே இலங்கைத் தாக்குதல் பற்றி பக்டாடி சிலாகித்திருக்கிறார்.

எனவே இது பின்னிணைப்பு என்று குறித்த வீடியோவைப் பார்வையிட்ட பிரித்தானியாவில் இருந்து இயங்கும் பிரபல சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்றில் கடமையாற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு விளக்கினார்.

இலங்கையில் நடாத்தப்பட்ட தாக்குதல் தனது இறுதிக் கட்டுப்பாட்டுப் பகுதியாக சிரியாவின் கிழக்கு நகரான அல் பகூஸில் போர் புரிந்து மடிந்த தனது அமைப்பின் சகோதரர்களுக்கான பழிவாங்கல் என்று பின்னிணைப்பு ஒலிப்பதிவில் பக்டாடி பெருமை பேசியிருக்கிறார்.

அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டதை பக்டாடி குறிப்பாகச் சுட்டிப் பேசியிருக்கிறார்.

இந்த வீடியோ பதிவாக்கப்படும் போது இலங்கை தொடர்பான தாக்குதற் திட்டம் பற்றிய அறிவு பக்டாடிக்கு இருந்திருக்கவில்லை என்றும் இந்த வீடியோவை விளங்கிக்கொள்ளலாம் என்று காணொளியைப் பார்வையிட்ட ஊடகவியலாளர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

Map Syriya
(அல் பக்டாடியின் இஸ்லாமிய அரசு இறுதியாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தரைப்பகுதி. படம்: சி.பி.சி கனடா)

இலங்கைத் தீவை மட்டுமல்ல உலகையே அதிரவைத்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தொடர் தாக்குதல்களின் உள்ளூர் ஏவற்கொலையாளியான ஸாஹ்ரான் ஹாசீம் தனது முகத்தைக் காட்டி ஏற்கனவே வெளியிட்டிருந்த காணொளியில், இஸ்லாமிய அரசின் சர்வதேசத் தலைவன் எனத் தன்னையே வெளிப்படுத்திக் கொள்ளும் அல் பக்டாடிக்கு விசுவாசமாகச் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டிருந்தது தெரிந்ததே.