வடக்கு - கிழக்கில் 2009 ஆம் ஆண்டின் பின்னரான பாதுகாப்பற்ற சூழலில் யாழ் பல்கலை

மாணவர்களின் விடுதலைக்கு மேற்குலகம் பொறுப்புக் கூற வேண்டும்

சட்ட விளக்கம் கொடுக்காமல் அரசியல் பிரச்சினையாகவே நோக்க வேண்டும்
பதிப்பு: 2019 மே 10 14:45
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 11 04:35
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#LTTE
#Jaffna
#PTI
#Universityofjaffna
#UOJ
#Easterattacksl
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக தெளிவான விளக்கம் தரப்படவில்லையென இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர். இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டபோதும் அந்தச் சட்டத்தின் எந்தப் பிரிவின் அடிப்படையில் என்ன குற்றத்திற்காக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பது தொடர்பாக இலங்கைப் பொலிஸார் எதுவுமே கூறவில்லையென சக மாணவர்களும் தெரிவிக்கின்றனர். அதேவேளை, இதனைச் சட்ட விடயமாகப் பார்க்காமல் ஈழத் தமிழர்களின் அரசியல பிரச்சினையாகவே நோக்க வேண்டுமென அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் விளக்கம் நீதிமன்றத்திற்கு அவசியமே இல்லையென சட்டவல்லுநர்களும் கூறுகின்றனர்.
 
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை இலங்கைப் படைகளின் ஜெனரல் கமால் குணரட்ண தனது றோட் ரூ நந்திக்கடல் (Road to Nanthikkadal) என்ற நூலில் பிரசுரிக்க முடியுமென்றால், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அலுவலகத்தில் பிரபாகரனின் படம் இருந்ததில் என்ன தவறென்று அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இலங்கை அரசு என்னோடுதான், உன்னோடுதான் என்று நம்பிக்கொண்டு ஒருவருக்கொருவர் மல்லுக்கட்டி, அதற்காக பல பில்லியன் ரூபாய்களையும் அள்ளிவாரிக்கொடுத்துக் கொண்டிருக்கின்றன இந்த மேற்குலக நாடுகள் - அவ்வாறே சீனாவும் இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு உதவியளிக்கின்றன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைப் படையினராலும் இலங்கைப் பொலிஸாராலும் கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண பிரதான நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இரு மாணவர்களும் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதால், இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் அது குறித்து பரிசீலிக்கின்றது. எனவே பிணை வழங்க முடியாதெனக் கூறி யாழ் நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.

சென்ற எட்டாம் திகதி நீதவான் பீற்றர் போல், பிணை வழங்க மறுத்திருந்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சட்டத்துறைத் தலைவர் குமாரவேல் குருபரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகளான மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஸ் ஆகியோர் மாணவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இதேவேளை,விடுதலைப் புலிகளை இல்லாதொழிக்க உதவி செய்த அமொிக்கா, இந்தியா போன்ற நாடுகள், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலிலும் விடுதலைப்புலிகளுக்குத் தடை விதிக்கின்றது.

ஆனால் போர்க்குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் எதற்கும் இலங்கை அரசாங்கமோ இலங்கைப் படையினரோ இதுவரையும் பொறுப்புக்கூறவேயில்லை. அது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் மீதும் மேற்குலகம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவேயில்லை.

மாறாக புலம்பெயர் நாடுகளில் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட ஈழத் தமிழர்கள் பலரையும் முன்னாள் போராளிகள் சிலரையும் கைதுசெய்வது, விசாரணை நடத்துவது போன்ற செயற்பாடுகளில் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் ஈடுபடுகின்றன.

இதன் காரணத்தினாலேதான் இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இன்னமும் நீக்கவில்லை. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தியே இரு மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுமுள்ளனர். அத்தோடு இலங்கைத் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் இலங்கை அரசாங்கம் காரணம் கூறுகின்றது.

ஆகவேதான் கொழும்பில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதரங்களுக்குச் சென்று தமிழ்ப் பிரதிநிதிகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் இலங்கை அரசு மீது மேற்குலகம் கடும் நடவடிக்கை எடுத்திருந்தால், நிச்சயமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் பயன்படுத்தித் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை தொடருவதற்கு வாய்ப்புகள் இருந்திருக்காதென அவதானிகள் கூறுகின்றனர்.

போரை இல்லாதொழிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு உதவியளித்த அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு, அதன் பின்னர் பத்து ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையிலும் நிரந்தரமான அரசியல் தீர்வுகள் எதுவுமே இல்லாத நிலையில், தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு தொடர்ச்சியாக மேற்கொள்ளும் அடக்குமுறை தெரியாதா என்று மாணவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

தமிழ்ச் சட்டத்தரணிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் இந்த விடயத்தை எடுத்துக் கூற வேண்டுமென பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் இராஜரட்னம் கிரிஷாந் கோரியுள்ளார்.

அதேவேளை, விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காகவே போராடுகின்றனர் என்பதை அறிந்தும், அப்போதைய அரசியல் காரணங்களினால் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் புலிகளை பயங்கரவாத அமைப்பாகக் கருதித் தடை செய்திருந்தன.

ஆனால், தடை விதிக்கப்பட்ட பின்னரும் கூட புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் இயற்கையாக மரணிக்கும் வரை பிரித்தானியாவில் தங்கியிருந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தார்.

புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்று தெரிந்திருந்தும், அவர்களின் போராட்டம் நியாயமானது என்ற காரணத்தின் அடிப்படையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க அன்டன் பாலசிங்கத்துக்கு பிரித்தானிய அரசு மறைமுகமாக அனுமதியளித்தது என்றே தமிழ் மக்கள் அன்று நம்பினர்.

கொழும்பில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதரங்களுக்குச் சென்று தமிழ்ப் பிரதிநிதிகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென யாழ் பல்கலைக்கழக மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் இலங்கை அரசு மீது மேற்குலகம் கடும் நடவடிக்கை எடுத்திருந்தால், நிச்சயமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் பயன்படுத்தித் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை தொடருவதற்கு வாய்ப்புகள் இருந்திருக்காதென அவதானிகள் கூறுகின்றனர்.

பூகோள அரசியலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிறுவதற்கான ஆதரவையே இலங்கை அரசு என்ற கட்டமைப்பு வலுவாக்கி வருகின்றது. அதற்காகவே அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குப் பன்முகப்பட்ட முகங்களையும் இலங்கை அரசு காண்பிக்கிறது.

ஏன் பாக்கிஸ்தானோடும் இலங்கை உறவு வைத்துள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளிடம் தேவையான பணத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது இலங்கை.

ஆனால் இலங்கை அரசு என்னோடுதான், உன்னோடுதான் என்று நம்பிக்கொண்டு ஒருவருக்கொருவர் மல்லுக்கட்டி, அதற்காக பல பில்லியன் ரூபாய்களையும் அள்ளிவாரிக்கொடுத்துக் கொண்டிருக்கின்றன இந்த மேற்குலக நாடுகள்- அவ்வாறே சீனாவும் இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு உதவியளிக்கின்றன.

ஆனால், இலங்கைத் தீவில் மற்றுமொரு தேசிய இனத்தின் அடையாளங்களையும் இருப்பையும் அழிப்பதற்கே அந்த உதவிகள் பயன்படுகின்ற என்பதை மேற்குலக நாடுகளும் இந்தியா சீனா ஆகிய நாடுகளும் புரிந்துகொள்வதாக இல்லை. அல்லது தெரிந்தும் தெரியாமலே இருக்கின்றன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பிருந்தே இலங்கையின் அணுகுமுறை இதுதான்.