போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்ந்தும் நிர்க்கதி- ஆனால்

வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் தங்கவைத்தமைக்கான காரணம்?

வலுக்கும் எதிர்ப்பு அலை, இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
பதிப்பு: 2019 மே 23 10:32
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மே 23 20:13
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#pakistan
#Afghanistan
#Refugee
#Srilanka
#Jaffna
#Vavuniya
#lka
#Easterattacklka
#Northernprovince
தமிழினஅழிப்பு போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதும், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த நிலங்களில் மீளக்குடியேற முடியாது நிலமீட்பு பேராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இலங்கையில் தஞ்சமடைந்துள்ள வெளிநாட்டு அகதிகளை வடமாகாணத்தில் தங்கவைக்கும் திட்டத்திற்கு தொடர்ந்தும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுவருகின்றது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளை வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்கவைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நகரசபை மண்டபத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன், குறித்த கலந்துரையாடலை அடுத்து குறித்த அகதிகள் வவுனியாவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மாவட்ட அதிபருக்கான மகஜர் மேலதிக அரச அதிபர் தி.திரேஷ்குமாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
 
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளான நிலையில் இலங்கையில் தஞ்சமடைந்தோர் நீர்கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து அவர்கள் தங்குவதற்கு இடமின்றி கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

இதனையடுத்து, கடந்த மாதம் 23 ஆம் திகதி தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சுமார் 550 பேரை பஸ்யால அஹமதியா முஸ்லிம் சமூக நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும், மக்களின் எதிர்ப்பினால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

இதனையடுத்து குறித்த அகதிகளை தமிழர் தாயகமான வடமாகாணத்தின் வவுனியாவில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உட்பட தமிழ் மக்கள் பலரும் கடும் எதிர்ப்பு வெளியிட்ட போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் ஆதரவு வழங்கினர். அத்துடன் இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கடந்த 8 ஆம் திகதி வவுனியாவுக்கு சென்று அங்கு சென்று கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இதனையடுத்து கடந்த 17ஆம் திகதி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் சிலர் வவுனியா பூந்தோட்டம் முகாமிற்கு அனுப்பப்பட்டனர்.

இவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் பொறுப்பேற்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றார்.

எனினும் ரட்ணஜீவன் ஹூலின் இந்த நடவடிக்கை தவறானதெனவும், தனிப்பட்ட ஒருவர் அகதிகளை வீட்டில் தங்க வைப்பதால் சமூகப் பிரச்சனைகள் எழக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், எனவே உடனடியாக அவர்களை மீண்டும் வவுனியாவுக்கு அனுப்பிவைக்குமாறு வடமாகாண ஆளுநர் மற்றும் பொலிஸார் தெரிவித்ததை அடுத்து அவர்கள் உடனடியாக மீண்டும் வவுனியாவுக்கு அனுப்பப்பட்டனர்.

எனினும் இந்த அறிவுறுத்தல்களை ஏற்க முடியாது என ரட்ணஜீவன் ஹூல் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா - பூந்தோட்டம் முகாமிற்கு செல்ல முற்பட்ட தேரர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த அகதிகளை வவுனியா - பூந்தோட்டம் முகாமில் தங்க வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று பிற்பகல் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றதாக கூர்மையின் வவுனியா செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, வெளிநாட்டு அகதிகள் வவுனியாவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரை கையளிக்கும் நோக்கில், நகரசபை உறுப்பினர்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்ற போதிலும் அங்கு அரசாங்க அதிபர் இல்லாத காரணத்தினால் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமாரிடம் மகஜரைக் கையளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வவுனியா - மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் மகஜரை கையளிப்பதற்காக சென்ற போதும், பிரதி பொலிஸ் மா அதிபர் அங்கிருக்காதமையினால் மற்றுமொரு அதிகாரியிடம் மகஜரை கையளித்ததாக உறுப்பினர்கள் கூர்மை செய்தித்தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.

இதேவேளை நகரசபை எல்லைக்கு உட்பட்ட அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா - பூந்தோட்டம் முகாமிற்கு சென்ற உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு முகாமிற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், அங்கு அதிகளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததுடன் வீதிக்கு குறுக்காக லொறியொன்றும் நிறுத்தப்பட்டிருந்ததாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

தற்போது வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளை அங்கு குடியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, இந்த நடவடிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

வடமாகாணத்தில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் அகதிகளைத் தங்கவைப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாதென வலியுறுத்திய அவர், இலங்கையின் ஏனைய பாகங்களில் அகதிகளைத் தங்கவைக்காமை ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன் கடந்த 10 வருடங்களாக தமது சொந்த நிலத்தை இலங்கை இராணுவத்திடமிருந்து மீட்டுத்தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் மக்கள் குறித்து அலட்டிக்கொள்ளாத ஒற்றையாட்சி அரசாங்கம், வெளிநாட்டு அகதிகளை தமிழர் தாயகத்தில் குடியேற்றுவதற்கு முனைப்புடன் செயற்படுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தநிலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது ருவிட்டர் பக்கத்தில், எனது தமிழ் சகோதரர்களுக்கு மீண்டும் ஒரு கோரிக்கை. இதை நாம் தான் கூடுதலாக விளங்கிக் கொள்ளலாம். எமது மக்கள் இலங்கையில் துன்புறுத்தலுக்கு அஞ்சி பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். எம் வாசற்படியிலிருந்து இந்த ஏதிலிகளைத் துரத்தி நன்றி கெட்ட சமூகம் என்ற பெயரைப் பெற்றுக் கொள்ளாதீர்கள் எனத் தெரிவித்து குறித்த அகதிகளைக் குடியேற்றும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியிருந்தார்.

எனினும் இலங்கை ஜனாதிபதியின் சட்டத்தரணி சுமந்திரன் கடந்த 10 வருடங்களாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் மீது காட்டாத கரிசனையை இந்த வெளிநாட்டு அகதிகள் மீது காட்டுவது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எது எவ்வாறிருப்பினும், கடந்த 30 வருடத்துக்கும் மேலாக போரால் பாதிக்கப்பட்ட மக்களது காணிகள் இலங்கை இராணுவத்தினாலும், இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்களாலும் அபகரிக்கப்பட்டு வருவதனால் தமிழ் மக்கள் ஏதிலிகளாகவே உள்ள நிலையில், தமிழ் மக்களது பகுதிகளில் வெளிநாட்டு அகதிகளை தங்கவைப்பது தமிழர் தாயகத்தில் தமிழர்களது இருப்பை மேலும் கேள்விக்கு உள்ளாக்கும் செயற்பாடாகவே உள்ளது.