சீன - இலங்கைப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்துக் கேள்வி எழுப்பாத சிங்களக் கட்சிகள், பௌத்த மகாநாயக்கத் தேரர்கள்

அமெரிக்காவுக்கு எழுந்துள்ள சந்தேகம் - மகிந்த அணியோடும் பேச்சு

பயிற்சிக்காகச் சீனாவுக்குப் பயணம் செய்யவுள்ள இலங்கைப் படை அதிகாரிகள் குழு
பதிப்பு: 2019 மே 28 10:31
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 24 15:15
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#China
#Srilanka
#lka
#SOFA
#America
#Maithripalasrisena
#MahindaRajapaksha
சீன-இலங்கை பாதுகாப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கான முன்நகர்த்தல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் முழமையாக வெளிப்படுத்தப்படவில்லையென கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா,ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுடன் செய்யப்படுகின்ற ஒப்பந்தங்களின் பிரதிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது வழமை. குறிப்பாக ஜே.வி.பி அந்த விடயத்தில் கடும் பிடியாகவே இருக்கும். ஆனால் சீனாவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்து கொண்ட முன் நகர்த்தல் ஒப்பந்தம் குறித்து ஜே.வி.பியோ, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியோ இதுவரை கேள்வி எழுப்பவில்லை.
 
அந்த ஒப்பந்தத்தின் பிரதியைக் கூட நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரவுமில்லை. இது தொடர்பான தனது சந்தேகத்தை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக இராஜதந்திரி ஒருவர் கேட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

சீன - இலங்கைப் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாகக் கேள்வி எழுப்பாத சிங்கள அரசியல் கட்சிகள், பௌத்த மகாநாயக்கத் தேரர்கள் எதற்காக அமெரிக்காவுடன் செய்யப்படவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்துச் சந்தேகிக்கின்றனர் என்பது தொடர்பாக அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் விசனமடைந்துள்ளனர்.

அடிப்படையில் சீனாவுடனான உறவைப் பிரதான சிங்களக் கடும்போக்குக் கட்சிகள் விரும்புவதாகவும் ஒப்பாசாரத்துக்காகவே அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவைப் பேணுவதாகவும், அமெரிக்க இராஜதந்திரி நாசூக்காகவும் கடும் தொனியிலும் கூறினார் என்றும் அந்த அமைச்சர் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் செய்யவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் சென்ற வியாழக்கிழமை கண்டிக்குச் சென்று மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

இலங்கையின் இறைமைக்கும் இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மைக்கும் பாதிப்பு ஏற்படாதெனவும் அமெரிக்கத் தூதுவர் பௌத்த மகாநாயக்க தேரர்களிடம் உறுதியளித்துமிருந்தார்.

இந்த நிலையில், சீன - இலங்கைப் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாகக் கேள்வி எழுப்பாத சிங்கள அரசியல் கட்சிகள், பௌத்த மகாநாயக்க தேரர்கள் எதற்காக அமெரிக்காவுடன் செய்யப்படவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்துச் சந்தேகிக்கின்றனர் என்பது தொடர்பாக அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் விசனமடைந்துள்ளனர்.

மகாநாயக தேரர்களின் கடும் எதிர்ப்பினாலேயே மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக அமெரிக்கத் தூதரகம் கருதுகின்றது. ஆனாலும் தங்களுடன் நெருக்கமாகச் செயற்படும் கோட்டாபய ராஜபக்சவும் அவருடைய சகோதரரான மகிந்த ராஜபக்சவின் அரசியல் அணியும் ஏன் இந்த விடயத்தில் மௌனமாக இருக்கின்றன என்பது தொடர்பாகவும் அமெரிக்கத் தூதரகம் சந்தேகம் எழுப்பியுள்ளது.

எனினும், இந்தச் சந்தேகங்களின் மத்தியிலும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட குழுவினருடன் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தொடர்ச்சியாகப் பேசி வருவருகின்றார்.

கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கப் பென்ரகனோடு கூடுதல் உறவுகளைக் கொண்டுள்ளார். மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் அதாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் அவர் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடவுள்ளார். அதற்கு அமெரிக்காவும் தற்போதைக்கு மறைமுக ஆதரவு வழங்கியுமுள்ளது.

எனவே மகிந்தவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள மைத்திரிபால சிறிசேன எதற்காக இலங்கையுடன் செய்யப்படவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை எதிர்க்கின்றார் என்பது குறித்தே அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிங்கள அரசியல் தலைவர்களிடையே உள்ளகப் போட்டிகள், கட்சி அரசியல் பூசல்கள் இருப்பதாகக் கூறினாலும் சீன - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்த விடயத்தில் இணங்கிச் செல்லும் அளவுக்கு ஏன் அமெரிக்கா - இலங்கைப் பாதுகாப்பு ஒப்பந்த விவகாரத்தில் ஒழித்து விளையாடுகின்றனர் என்பது குறித்தும் அமெரிக்கத் தூதரகம் குழப்பமடைந்துள்ளது.

இது தொடர்பாகவே மகிந்த ராஜபக்ச அணியோடு அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பேசி வருகின்றனர். ஆனாலும் இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லையென அமெரிக்கத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள அரசியல் தலைவர்களிடையே உள்ளகப் போட்டிகள், கட்சி அரசியல் பூசல்கள் இருப்பதாகக் கூறினாலும் சீன - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்த விடயத்தில் இணங்கிச் செல்லும் அளவுக்கு ஏன் அமெரிக்கா - இலங்கைப் பாதுகாப்பு ஒப்பந்த விவகாரத்தில் ஒழித்து விளையாடுகின்றனர் என்பது குறித்தும் அமெரிக்கத் தூதரகம் குழப்பமடைந்துள்ளது.

எவ்வாறாயினும் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் போக்குகளில் அமெரிக்க அதிகரிகள் சந்தேகம் கொண்டுள்ளதாகவே கொழும்பில் உள்ள தூதரகத்தின் அரசியல் நகர்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன.

இலங்கையில் ஆட்சியை மாத்திரம் கைப்பற்றுவதற்கும் ஈழத் தமிழரின் தமிழ்த் தேசியக் கோட்பாட்டை நசுக்குவதற்கும் நிதியைப் பெறுவதற்கும் மாத்திரமே சிங்கள அரசியல் தலைவர்கள் தங்களை நாடுகின்றனரோ என்ற சந்தேகம் கூட அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் தற்போது எழ ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவின் சமீபகாலச் சந்தேகங்கள் இதனையே காண்பிப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.

1995ஆம் ஆண்டு சந்திரிக்கா தலைமையிலான பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமெரிக்காவுடன் ஆரம்ப ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது.

அதேபோன்று மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போதும் 2007 ஆம் ஆண்டும் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தம் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது. அதேவேளை, இலங்கைப் படையினருக்கான பயிற்சிகள் தகவல் பரிமாற்றங்கள் துறைமுகப் பயன்பாடுகள், ஆயுதப் பயிற்சிகள் கடற்பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன திடீரெனப் பிரதமராக்கியபோதும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் இந்த ஒப்பந்தம் குறித்து மகிந்த ராஜபக்சவுடனும் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்திருந்த ஹேமசிறி பெர்ணாண்டோவுடன் கலந்துரையாடியிருந்தனர்.

அதேவேளை, சீனாவுடன் கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை முப்படையினர் உள்ளடங்கிய குழு ஒன்று மேலதிகப் பயிற்சிக்காகச் சீனாவுக்குச் செல்லவுள்ளது.

அடுத்த வாரம் சீனாவுக்குச் செல்லவுள்ள இலங்கை இராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு முழுமையான பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது. குறிப்பாக கடற் பாதுகாப்பு, நவீன தொழில் நுட்ப ஆயுதங்களை கையாளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் சீனாவில் வழங்கப்படவுள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

ஆனால் இந்தப் பயிற்சிகள் எவ்வளவு காலவரையறையைக் கொண்டதெனக் கூறப்படவில்லை. முதற்கட்ட பயிற்சி நிறைவடைந்தவுடன் மற்றைய குழு சீனாவுக்குச் செல்லும் என்றும் இலங்கை முப்படைத் தகவல்கள் கூறுகின்றன.

சீன - இலங்கைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்வதற்கான முன் நகர்த்தல் ஒப்பந்தம் ஒன்று சென்ற 14 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோருக்கிடையே பீஜிங்கில் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.