புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஈழத் தமிழர்கள் பங்கேற்பதா, புறக்கணிப்பதா?

மீண்டும் மீண்டும் சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும் அரசியல் யாப்பு எதற்கு?

ஒற்றையாட்சியைப் பலப்படுத்தும் கொழும்பின் போக்குக்குத் தமிழர் தரப்புகள் துணைபோவதா?
பதிப்பு: 2020 டிச. 31 21:07
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 02 21:02
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
சர்வதேசச் சமவாயத்தில் கூறப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமை என்ற உறுப்புரையை நீக்கம் செய்து 2007 ஆம் ஆண்டு சமவாயச் சட்டம் என்ற பெயரில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் 56 ஆம் இலக்கச் சட்டமாக இணைத்த ராஜபக்ச அரசாங்கம், தற்போது அந்தச் சமவாயச் சட்டத்தை பயன்படுத்தி ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை முற்றாகவே நிராகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. மைத்திரி ரணில் அரசாங்கம் மேற்கொண்ட புதிய அரசியல் யாப்புக்கான நகல் வரைபில்கூட சமவாயத்தின் உறுப்புரைகள் அனைத்தும் சேர்க்கப்படாதவொரு நிலையில், இலங்கை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்துடன் தற்போது ஆட்சியமைத்துள்ள ராஜபக்ச அரசாங்கம் உருவாக்கவுள்ள புதிய அரசியல் யாப்பில் சுயநிர்ணய உரிமை மீண்டும் மறுக்கப்படும் அபாயம் தெளிவாகவே தெரிகிறது.


 

ஆட்சி உரிமை மறுக்கப்பட்ட நாடொன்றில் வாழும் தேசிய இனங்களை ஒரு தேசமாக அங்கீகரிக்கக் கூடிய முறையிலான சுயநிர்ணய உரிமை குறித்து ICCPR எனப்படும் சமவாயத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுக் கூறப்படவில்லை என்பது வெளிப்படை. இந்தக் கோளாறுகள் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்குத் தமிழர்தரப்பு சுட்டிக்காட்டியிருக்க வாய்ப்பில்லை

ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயம் (International Covenant on Civil and Political Rights- ICCPR) 2007 ஆண்டு 56 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோதே இந்தச் சமவாயச் சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இலங்கை அரசியலமைப்பில் சேர்க்கப்படாமல் சாதாரண இலங்கைச் சட்டங்களில் ஒன்றாகச் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களினால் இணைக்கப்பட்டிருக்கிறது.

ஆறு பகுதிகளாகக் குறைந்தது 37 பக்கங்களைக் கொண்ட ICCPR எனப்படும் இந்தச் சமவாயத்தில் ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களின் சுயநிர்ணய உரிமை (self-determination) அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது பிரதான உள்ளடக்கமாகும். ஆனால் பிரதான உள்ளடக்கங்களைத் தவிர்த்து, அதாவது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டு, இலங்கைக்கு ஏற்ற சில பகுதிகள் மாத்திரமே 56ஆம் இலக்கச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட நாடொன்றில் வாழும் மக்களிடையே இனக் குரோதங்கள், மதங்களிடையேயான வெறுப்புகள் போன்றவற்றை உருவாக்குதல் மற்றும் மனிதகுல விரோதங்களைத் தூண்டுதல் போன்ற குற்றங்களுக்குக் கடும் தண்டனை விதிக்கும் உறுப்புரைகள் ICCPR எனப்படும் சமவாயத்தின் பிரிவு 3(1) இல் உள்ளன.

ஆனால் 56ஆம் இலக்கச் சட்டத்தில் ICCPR எனப்படும் சமவாயத்தை ஏற்றுக் கொண்ட இலங்கை அரசு பிரிவு 3(1) உள்ளிட்ட சில பகுதிகளை மாத்திரமே இணைத்துள்ளது. உறுப்புரை 1 இல் கூறப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் என்ற பகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சமவாயத்தை 2007ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். விவாதம் நடத்தப்படும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவரும் சுயநிர்ணய உரிமைக்கான உறுப்புரிமை நீக்கப்பட்டமை தொடர்பாக உரிய முறையில் சுட்டிக்காட்டவேயில்லை. இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு ஏற்ற முறையிலேயே ICCPR எனப்படும் சர்வதேசச் சமவாயத்தை இலங்கை அங்கீகரிப்பதாக பிரீஸ் அப்போது துணிவுடன் கூறியிருந்தார்.

ஆனாலும் 2010 ஆம் ஆண்டு முதன் முதலாகப் பாராளுமன்றத்திற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் தெரிவான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இது குறித்துப் பேசியிருந்தார். சர்வதேச சமவாயத்தின் உறுப்புரை 1 இல் உள்ளவாறு இலங்கையின் 56 ஆம் இலக்கச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை நீக்கம் செய்யப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிக் கேள்வி எழுப்பியிருந்தார். அதன் பின்னர் அது குறித்த மேலதிக விவாதங்கள் எதனையும் சுமந்திரன் தொடரவில்லை.

2015 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையோடு கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்தின்போதுகூட ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுதியாகச் சொல்லவில்லை.

இனக் குரோதங்களைத் தூண்டுதல், மதங்களிடையே வெறுப்புகளை உருவாக்குதல், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைத் தூண்டுதல் போன்றவற்றுடன் இலங்கைத் தேசிய பாதுகாப்புக்கு எதிரான விடயங்களும் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள பிரிவு 14. 2 இல் ஏற்கனவே கூறப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையோடு கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்தின்போதுகூட ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுதியாகச் சொல்லவில்லை

இந்த நிலையில் ICCPR எனப்படும் சமவாயத்தின் உறுப்புரை 3(1) இல் கூறப்பட்டுள்ள அதே விடயத்தை 56 இலக்கச் சட்டத்தில் சேர்த்துக்கொண்டமை வேண்டுமென்றே ஈழத்தமிழர்களை சர்வதேசச் சமவாயம் ஒன்றின் மூலமாக அச்சுறுத்தும் செயல் எனவும் இதுவரை சுட்டிக்காட்டப்படவில்லை.

ஜெனீவா மனித உரிமைச் சபை 2012 ஆம் ஆண்டு முதன் முதலாக இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தபோது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் நீக்க வேண்டுமெனக் கோரியிருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென 2015 ஆம் ஆண்டின் 30/1 தீர்மானத்திலும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இதனால் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அப்போதைய மைத்திரி- ரணில் அரசாங்கம் வேறொரு புதிய சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போதுகூட ICCPR எனப்படும் சமவாயத்தின் உறுப்புரை 3(1) இல் கூறப்பட்டுள்ள விடயங்கள் அகற்றப்பட வேண்டுமென்றோ அல்லது சர்வதேசச் சமவாயத்தின் உறுப்புரிமை 1 இல் உள்ள சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவில்லை.

ICCPR எனப்படும் சமவாயம் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாடொன்றில் அதன் உறுப்புரிமை 1 இன் பிரகாரம் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டிருந்தால் மாத்திரமே, சமவாயத்தின் பிரிவு 3(1) சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இலங்கை வெறுமனே பிரிவு 3(1) உறுப்புரையை மாத்திரம் அங்கீகரித்திருக்கிறது. சமவாயத்தின் உறுப்புரை 1 இல் கூறப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமை இலங்கைப் பாராளுமன்றத்தில் ஏன் அங்கீகரிக்கப்படவில்லை என்று சர்வதேச நாடுகள்கூட இதுவரை கேட்கவுமில்லை.

சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ள நாடொன்றில், மக்களிடையே இனக் குரோதங்கள் மதங்களிடையேயான வெறுப்புகள் போன்றவற்றை உருவாக்குதல் மற்றும் மனிதகுல விரோதங்களைத் தூண்டுதல் ஆகிய குற்றச் செயல்கள் எழக்கூடாதென்ற நோக்கிலேயே ICCPR எனப்படும் சமவாயத்தின் பிரிவு 3(1) சேர்க்கப்பட்டிருக்கிறது என்ற புரிதல் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருந்தும், இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பைப் பாதுகாத்தலே பிரதான இலக்கு என்ற அடிப்படையில், சமவாயத்தின் உறுப்புரை 1 நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இதனடிப்படையில் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிக்கவும், ஜெனீவா மனித உரிமைச் சபையைத் திருப்திப்படுத்தவும் மைத்திரி- ரணில் அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது.

பாராளுமன்றமே அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டுப் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்துக்காக ஒவ்வொரு தலைப்புகளில் ஆறு உப குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் ஜனாதிபதி, சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், மற்றும் கட்சித் தலைவர்களைக் கொண்ட வழிகாட்டல் குழுவும் அமைக்கப்பட்டிருந்தது.

ஆறு உப குழுக்களும் தத்தமது தலைப்புகளுக்குரிய விதப்புரைகளை சபாநாயகரிடம் கையளித்துமிருந்தனர். அந்த விதப்புரைகளில் என்ன விடயங்கள் உள்ளடங்கியுள்ளன என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் எந்தவொரு விதப்புரைகளிலும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் என்ற விடயம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

குறைந்தபட்சம் ICCPR எனப்படும் சர்வதேச சமவாயத்தின் உறுப்புரிமை 1 இல் கூறப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமையை இலங்கையின் புதிய அரசியல் யாப்பு மூலமாக அங்கீகரித்தல் என்பது கூட உப குழுக்கள் கையளித்திருந்த விதப்புரைகளில் இல்லை என்பதே வெளிப்படை.

ஏனெனில் இலங்கை ஒற்றையாட்சியின் தன்மை மாற்றமடையாமலும், 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரண்டாவது அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள அரச கொள்கைத் தத்துவம் மாறுபடாமலும் புதிய அரசியல் யாப்புக்கான நகல் வரைபு தயாரிக்கப்பட்டிப்பதாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை வழங்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒப்புகொண்டுள்ளதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி இருப்பதாக சம்பந்தன் தமிழ்மக்களுக்கு விளக்கமளிக்கும்போது மார் தட்டியிருந்தார்.

ICCPR எனப்படும் சர்வதேச் சமவாயம் முழுமையாக இலங்கை அரசியல் யாப்பில் இணைக்கப்பட்டிருந்தால், பௌத்த சமயத்துக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுப்பதோ அல்லது இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் அனைத்துச் சமூகங்களும் கட்டுப்பட வேண்டிய வற்புறுத்தலோ இருந்திருக்காது.

சர்வதேச சமவாயத்தைக் கொச்சைப்படுத்தும் முறையிலேயே இலங்கை பாராளுமன்றம் 2007 இல் அதனை அங்கீகரித்துள்ளது என்பதைக்கூட ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளுக்குச் சம்பந்தன் இடித்துரைக்கவில்லை. மாறாக ரணில் மைத்திரி அரசாங்கம் மீதான பொய்யான நம்பிக்கை மாத்திரமே மக்களுக்கு ஊட்டப்பட்டது.

இலங்கை ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ளப்படாத நிலையிலும், 30/1 தீர்மானத்தில் அரசியல் தீர்வுக்கான முயற்சியாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கூறப்பட்டிருப்பதால், தமிழ்த்தேசியக் கட்சிகளும் சர்வதேசச் சமவாயம் குறித்து இம்முறை வெளிப்படுத்த வேண்டும்

தற்போது கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் மைத்திரி- ரணில் அரசாங்கம் தயாரித்த நகல் வரைபின் அடிப்படையில் அல்ல, மீண்டும் புதிதாகவே யாப்புருவாக்க முயற்சி இடம்பெறுகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகளும் தங்கள் நகல் வரைபுகளைக் கையளித்துள்ளன.

அவ்வாறு கையளிக்கப்பட்ட நகல் வரைபுகளில், சுயநிர்ணய உரிமை பற்றி அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தங்கள் நகல் வரைபில் நிச்சயமாகக் குறிப்பிட்டிருப்பர் என்பது கண்கூடு.

ஆனால் இவர்கள் கோருகின்ற சுயநிர்ணய உரிமையின் ஆழம் எந்த அடிப்படையில் என்பதிலேதான் குழப்பம் இருக்கும்.

இருந்தாலும் குறைந்த பட்சம் சர்வதேச சமவாயத்தில் கூறப்பட்டுள்ளவாறான சுயநிர்ணய உரிமை இலங்கையின் 56 ஆம் இலக்கச் சட்டத்தில் நீக்கம் செய்யப்பட்டிருப்பதைக்கூட தங்கள் நகல் வரைபில் இந்தக் கட்சிகள் சுட்டிக்காட்டியிருக்கும் என்று நம்ப இடமில்லை.

சர்வதேசச் சமவாயத்தில் சுயநிர்ணய உரிமை பற்றிக் கூறப்பட்டுள்ள உறுப்புரை 1 இலும் கோளாறுகள் உள்ளன. அது பற்றியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துக் கூறியிருக்க வாய்ப்பில்லை.

குறிப்பாகச் சுயநிர்ணய உரிமை பற்றிக் கூறப்படுகின்ற உறுப்புரை ஒன்றில் ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்கள்கள் (All peoples) என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரு நாட்டில் வாழும் அனைத்துத் தேசிய இனங்களுக்குரிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றோ, தேசிய இனம் ஒன்றைத் தேசமாக ஏற்க வேண்டுமென்றோ குறிப்பிட்டுக் கூறப்படவில்லை.

ஆகவே ஆட்சி உரிமை மறுக்கப்பட்ட நாடொன்றில் வாழும் தேசிய இனங்களை ஒரு தேசமாக அங்கீகரிக்கக் கூடிய முறையில் சுயநிர்ணய உரிமை குறித்து ICCPR எனப்படும் சமவாயத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுக் கூறப்படவில்லை என்பது வெளிப்படை. இந்தக் கோளாறுகள் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருக்க வாய்ப்பில்லை.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் எடுக்கப்படவுள்ள நிலையில், தங்கள் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவும் தமிழ்த்தேசியக் கட்சிகள் தயார்ப்படுத்தி வருகின்றன. தமது பரிந்துரைகளில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது பற்றி இவர்கள் குறிப்பிடுவார்களா என்பதும் சந்தேகமே.

சமவாயம் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அப்போதிருந்தே வாதிட்டு வருகின்றது. இதனால் இந்தப் பொறுப்பு முன்னணிக்குத் தற்போது அதிகமாகவுள்ளது.

இலங்கையில் தேரவாத பௌத்த சமயத்தை மையப்படுத்திய பிக்குமார் சிலரின் ஒருபால் சேர்க்கை (Homosexuality) தொடர்பாக சிங்கள மொழியில் களு மக்கற (Black Dragon) என்ற சிறுகதையை எழுதிய சக்திக சத்குமார என்ற சிங்கள இளைஞன், இந்தச் சமவாயத்தின் பிரிவு 3(1) கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

பௌத்த சமயத்துக்கு எதிராகக் குரோத உணர்வுகளைத் தூண்டும் வகையில் களு மக்கற என்ற குறுந் திரைப்படம் அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியே இவர் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

அப்போது கூர்மை செய்தித் தளத்திற்குக் கருத்து வெளியிட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் நடராஜர் காண்டீபன், ICCPR எனப்படும் சர்வதேசச் சமவாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இலங்கையின் 56 ஆம் இலக்கச் சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான அங்கீகாரத்தை அரசியல் ரீதியிலும் முற்றாக அழிக்கும் நோக்கிலேயே புவிசார் அரசியலை நன்கு திட்டமிட்டுப் பயன்படுத்துகின்றனர்

ஆகவே இந்தச் சமவாயத்தை இலங்கை உரியமுறையில் செயற்படுத்தவில்லை என்பதையும் ஆட்சி உரிமை மறுக்கப்பட்ட தேசிய இனம் ஒன்றைத் தேசமாகவும் அதன் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி்ப்பது குறித்த விடயங்களிலும் சமவாயத்தில் தெளிவின்மை இருப்பது தொடர்பாக முன்னணி ஐ.நாவிடம் எடுத்துரைக்குமா என்பதைப் பொறுத்திருந்தே அவதானிக்க வேண்டும்.

இலங்கை ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ளப்படாத நிலையிலும், 30/1 தீர்மானத்தில் அரசியல் தீர்வுக்கான முயற்சியாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கூறப்பட்டிருப்பதால், தமிழ்த்தேசியக் கட்சிகளும் ICCPR எனப்படும் சர்வதேச சமவாயம் குறித்து இம்முறை வெளிப்படுத்த வேண்டும்.

கோட்டா, மகிந்த. ரணில், சந்திரிகா என்ற தனிநபர் அரசியல் செயற்பாடுகளுக்குள் அமுங்காமல், இலங்கை அரசு என்ற கட்டமைப்பை நோக்கியே செயற்பாடுகள் அமைதல் காலத்தின் அவசியம். ஏனெனில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான அங்கீகாரத்தை அரசியல் ரீதியிலும் முற்றாக அழிக்கும் நோக்கிலேயே புவிசார் அரசியலை நன்கு திட்டமிட்டுப் பயன்படுத்துகின்றனர்.

ICCPR எனப்படும் சர்வதேசச் சமவாயம் ஐக்கிய நாடுகள் சபையினால் 1954 ஆம் ஆண்டு வரையப்பட்டு 1966 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி 74 நாடுகள் அதில் கைச்சாத்திட்டிருந்தன. 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி இது நடைமுறைக்கு வந்தது. ஆனால் இன்று வரை ஆட்சி உரிமை மறுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது பற்றிய தெளிவான திருத்தம் சமவாயத்தில் செய்யப்படவேயில்லை.