எழுபது ஆண்டுகால அரசியல் விடுதலைப் போராட்டத்தில்

வடக்குக் கிழக்கின் எல்லையைத் தீர்மானித்த தமிழ்த் திருச்சபை

ஆயர் இராயப்பு ஜோசப் காலமாகவில்லை, காலம் ஆனார்
பதிப்பு: 2021 ஏப். 02 18:44
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 03 21:44
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் ஆயர் இராயப்பு ஜோசப் மரணிக்கும் வரையும் அதன் பின்னரான சூழலிலும் தமிழ்க் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்களிப்பு முக்கியமானதொன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சமய அடிப்படையில் வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சமூகத்திற்குள் சிங்கள ஆட்சியாளர்களினால் உருவாக்க முற்பட்ட பிரித்தாளும் தந்திரங்களை அறிந்து, அதனைப் புறம்தள்ளிச் சமயங்களைக் கடந்து ஈழத்தமிழ்ச் சமூகமாக வடக்குக் கிழக்கில் கத்தோலிக்கத் திருச்சபையும் ஏனைய சில கிறிஸ்தவ சபைகளும் செயற்பட்டிருந்ததை மறுப்பதற்கில்லை.
 
மடு தேவாலயத்தை அநுராதபுரம் மறை மாவட்டத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பதில் கொழும்பை மையமாகக் கொண்ட கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை மறைமுகமாக விரும்பியிருந்தவொரு சூழலில், 1981 ஆம் ஆண்டு மன்னார் தனித் தமிழ் மறை மாவட்டமாகப் பிரிக்கப்படமையானது பெரும் வரப்பிரசாதமாகும்

இன்றுவரைகூட அந்த ஒற்றுமை தொடர்கின்றது. சைவ சமயம் (இந்து சமயம் அல்ல) தமிழர்களின் அடிப்படைப் பண்பாட்டு மரபு என்று தமிழ்க் கத்தோலிக்க மக்கள் ஏற்றுக் கொண்டதொரு  பின்புலத்தை உணர்ந்து கொண்ட ஆயர் இராயப்பு ஜோசப் வியாழக்கிழமை காலை உயிர் துறக்க அன்று மாலை, சைவ சமயச் சித்தாந்தத்தை ஆய்வு செய்த அருட்தந்தை மரிய சேவியர் அடிகளாரும் இயற்கையெய்தியமை பெரும் துயரமாகும்.

1992 ஆம் ஆண்டு யூன் மாதம் இராயப்பு ஜோசப் மன்னார் மறை மாவட்டத்தின் ஆயராகப் பதவியேற்றபோது இரண்டாவது ஈழப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. போரின் மத்தியிலும் பதவியேற்பு வைபவம் அப்போதைய யாழ் ஆயர் தியோகுப்பிள்ளை மற்றும் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் தலைமையில் மன்னார் மடு தேவாலயத்தில் நடைபெற்றது. பதவியேற்றபின்னர் மக்களுடன் பேசிய ஆயர் இராயப்பு ஜோசப், நிரந்தர அரசியல் தீர்வின் அவசியம் தொடர்பான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

யாழ் மறை மாவட்டத்துடன் இணைந்திருந்த மன்னார் பிரதேசம் 1981 ஆம் ஆண்டு தனி  மறை மாவட்டமாக உருவாக்கப்பட்டதன் நோக்கத்தைச் சரியான முறையில் நெறிப்படுத்தியவர் ஆயர் இராயப்பு ஜோசப். அப்போதைய யாழ் ஆயர் தியோகுப்பிள்ளை உள்ளிட்ட ஆயர்கள், அருட்தந்தையர்களின் கூட்டு முயற்சியின் காரணமாகவே மன்னார் தனித் தமிழ் மறைமாவட்டமாக உருவானது.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்களினால் அப்போது கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயராக இருந்த மார்க்கஸ் பெர்ணாண்டோ, யாழ் ஆயர் தியோகுப்பிள்ளையுடன் கடுமையாக முரண்பட்டிருந்தார். இதன் பின்புலங்களை தர்க்கரீதியாக உணர்ந்து செயற்பட்டவர்தான் ஆயர் இராயப்பு ஜோசப்.

இலங்கைத் தீவில் பிரித்தானியரின் ஆட்சியின்போதே கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மறை மாவட்டம் அம்பாறை மாவட்டம் அடங்கலாகத் தனித்துச் செயற்பட்டிருந்தது. அப்போது அது முற்று முழுதாகத் தமிழ் மறை மாவட்டமாகவே இருந்தது. 1893 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் திருகோணமலை மறை மாவட்டம் உருவானது. ஆயர் இக்னேசியசு கிளெனி திருகோணமலை மறைமாவட்டத்தின் பெயரை மாற்றினார். அதன்படி, 1967 ஒக்டோபர் 23 ஆம் திகதி திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டம் எனப் பெயரிடப்பட்டது.

1975 டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டுப் புதிதாக அமைக்கப்பட்ட அநுராதபுரம் மறை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதனால் மன்னார் பிரதேசமும், குறிப்பாக மடு தேவாலயம், அநுராதபுரம் மறை மாவட்டத்திற்குள் சென்றுவிடுமோ என்றதொரு ஐயம் தமிழ்க் கத்தோலிக்க மக்களிடம் அன்று எழுந்தது.

அந்த இடத்திலேதான் அப்போது யாழ் ஆயராக இருந்த தியோகுப்பிள்ளை இராஜதந்திரமாகச் செயற்பட்டு 1981 ஆம் ஆண்டு மன்னார் மறை மாவட்டத்தை உருவாக்கினார். தனது கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் மறை மாவட்டப் பகுதியை தனியான மறைமாவட்டமாக உருவாக்க முற்பட்டபோது ஆயர் தியோகுப்பிள்ளை கடும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தார். 

அதாவது இன ரீதியாகத் தியோகுப்பிள்ளை செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டுக்கள் கொழும்பை மையமாகக் கொண்ட கத்தோலிக்கத் திருச்சபையினால் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அது சமயப் பணி மாத்திரமே என்ற அடிப்படையில் அந்த விவகாரத்தைச் சாதுரியமாகக் கையாண்டவர் ஆயர் தியோகுப்பிள்ளை.

நடந்தது போர் அல்ல தமிழ் இன அழிப்புத்தான் என்ற ஆயரின் கூற்று, சமயங்களைக் கடந்து ஈழத்தமிழர்கள் தனித்த ஒரு தேசம் என்பதையே அடையாளப்படுததியிருக்கிறது. அது சுயநிர்ணய உரிமைக்கும் வலுச்சேர்த்திருக்கிறது

மன்னார் மறை மாவட்டத்தின் முதலாவது ஆயராக தோமஸ் சௌந்தரநாயகம் பதவியேற்றபோது கலந்துகொண்ட இராயப்பு ஜோசப் (அப்போது அருட்தந்தை) ஆயர் தியோகுப்பிள்ளையின் கனவுகளை தோமஸ் சௌந்தரநாயகம் நிறைவேற்றுவார் என்று நாசூக்காகக் கூறியதோடு, சமயங்களைக் கடந்து கத்தோலிக்கத் திருச்சபை, தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபடும் என்று கூறியிருந்தார். அந்தக்காலத்தில் ஈழவிடுதலையெனக் கூறிப் போராடிய சில இயங்கங்களின் செயற்பாடுகளையும் அவர் விமர்சிக்கத் தவறவில்லை.

1992 ஆம் ஆண்டு மன்னார் மறை மாவட்டத்தின் ஆயராகப் பதவியேற்ற பின்னரான சூழலில் வடக்குக் கிழக்கை மையமாகக் கொண்டு தமிழ்க் கத்தோலிக்கத் திருச்சபையின் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த ஆயர் இராயப்பு ஜோசப், ஏனைய கிறிஸ்தவ சபைகளின் ஆயர்கள் மற்றும் தலைமைக் குருக்களுடன் உறவுகளைப் பேண ஆரம்பித்தார். அந்த அணுகுமுறை ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமை நோக்கிலானதெனலாம்.

இவ்வாறானதொரு நிலையில் திருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்டத்தை 2005 ஆம் ஆண்டு பிரிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளில் வடக்குக் கிழக்கு ஆயர்கள் மேற்கொண்ட கூட்டு முயற்சி வெற்றியடைந்தது.

இதன்படி, 2012 ஆம் ஆண்டு யூலை மாதம் 3 ஆம் திகதி மட்டக்களப்பு மறை மாவட்டம் திருகோணமலை மறை மாவட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டுத் தனி மறை மாவட்டமாக பாப்பரசரினால் அறிவிக்கப்பட்டது. அதன் முதலாவது ஆயராக ஜோசப் பொன்னையா செப்ரெம்பர் மாதம் பதவியேற்றார்.

அதன்படி திருகோணமலை மறை மாவட்டம் தனி மாவட்டமாகச் செயற்பட ஆரம்பித்தது. திருகோணமலை-மட்டக்களப்பு ஆயராகப் பதவி வகித்திருந்த கிங்ஸிலி சுவாம்பிள்ளை திருகோணமலை மறை மாவட்டத்தின் ஆயராகத் தொடர்ந்து பதவி வகித்தார். தற்போது நோய்ல் இம்மானுவெல் திருகோணமலை ஆயராகவுள்ளார்.

மட்டக்களப்பு தனி மறை மாவட்டமாகச் செயற்பட ஆரம்பித்ததும் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியிருந்த ஆயர் இராயப்பு ஜோசப், வடக்குக் கிழக்கில் தமிழ்க் கத்தோலிக்கத் திருச்சபை தற்போது நான்கு மறை மாவட்டங்களைக் கொண்டிருக்கிறது என்றார்.

அதாவது அவருடைய அந்தக் கருத்தின் தொனி, வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்தின் எல்லை தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதையே மறைமுகமாக வெளிப்படுத்தியிருந்தது.

1975 டிசம்பர் மாதம் திருகோணமலை-மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டுப் புதிதாக அமைக்கப்பட்ட அநுராதபுரம் மறைமாவட்டத்தில் சேர்க்கப்பட்டபோது, தமிழ்ப் பிரதேசங்கள் ஏன் சிங்கள மறை மாவட்டத்துடன் இணைய வேண்டுமென அப்போது தமிழ்க் கத்தோலிக்க மக்களுக்கு ஏற்பட்டிருந்த உணர்வைப் புரிந்துகொண்டதன் அடிப்படையில், ஆயர் இராயப்பு ஜோசப் செயற்பட்டிருந்தமையே அந்தத் தொனியின் வெளிப்பாடு எனலாம்.

குறிப்பாக மடு தேவாலயத்தை அநுராதபுரம் மறை மாவட்டத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பதில் கொழும்பை மையமாகக் கொண்ட கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை மறைமுகமாக விரும்பியிருந்தவொரு சூழலில், 1981 ஆம் ஆண்டு மன்னார் தனித் தமிழ் மறை மாவட்டமாகப் பிரிக்கப்பட்டமையானது பெரும் வரப்பிரசாதமாகும்.

ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் ஆயர்களும் தமிழ் அருட் தந்தையர்களும் வெளிப்படையாகவும் அரசியல் ரீதியாகவும் அது பற்றி வெளிப்படையாக உரிமைகோரவேயில்லை

ஏனெனில் சமயச் செயற்பாடுகளில் அரசியல் இருக்கக் கூடாதென்பது அவர்களின் அடிப்படைப் பண்பு. மன்னார், மட்டக்களப்பு மறை மாவட்டங்கள் தனிமறை மாவட்டங்களாக உருவாக்கப்பட்டமையானது கத்தோலிக்கத் திருச்சபையின் தமிழ் மக்களுக்கான அடுத்தகட்ட சமயச் செயற்பாடாக மாத்திரமே வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் சார்ந்து கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையோடு அவ்வப்போது கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும், சமயப் பணிகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி அதன் மூலம் வடக்குக் கிழக்கு மக்களின் தனித்துவத்தையும் மேற்படுத்திய பெருமை தமிழ் ஆயர்களுக்கு உண்டு

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் சார்ந்து கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையோடு அவ்வப்போது கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும், சமயப் பணிகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி அதன் மூலம் வடக்குக் கிழக்கு மக்களின் தனித்துவத்தையும் மேம்படுத்திய பெருமை தமிழ் ஆயர்களுக்கு உண்டு.

குறிப்பாக ஆயர் இராயப்பு ஜோசப் அந்தப் பணியைச் செவ்வனே நிறைவேற்றியிருந்ததால் அவருடைய மரணச் செய்திக்குச் சிங்கள, ஆங்கில ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்திருந்தன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வடக்குக் கிழக்கில் உருவான அரசியல் நிலைமையைத் துணிவோடு கையாண்ட ஆயர் இராயப்பு ஜோசப். சமயப் பணியைக் கடந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றும் விடயத்திலேயே முன் நின்று செயற்பட்டிருந்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் இளைஞர், யுவதிகளின் நிலைமை பற்றி கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு எடுத்துக் கூறியதோடு இந்தச் செயற்பாடு தமிழ் இன அழிப்பு என்பதையும் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

கொழும்பில் நடைபெற்ற கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்கள் மாநாட்டில்கூட தமிழ் மக்களின் அவலங்களை வெளிப்படையாகக் கூறியதோடு, நிரந்தர அரசியல் தீர்வை அதாவது ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இயல்பாகவே விட்டு விடுவதற்கு என்ன பிரச்சினை என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஆயர் இராயப்பு ஜோசப் சமயப் பணிகளைவிட பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கொண்டு வரும் முயற்சியிலே அதிகம் அக்கறை செலுத்தியிருந்தார்.

இந்திய மத்திய அரசு இனியாவது ஈழத்தமிழ் மக்களின் நலன்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென ஆயர் இராயப்பு ஜோசப் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரிடம் கேட்டிருந்தார். பல கடிதங்களை அனுப்பியிருந்தார். இந்திய மத்திய அரசு மீது ஈழத்தமிழர்கள் தொடர்ந்தும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று நேர்காணல் ஒன்றில் ஆயர் கூறியிருந்தார்.

வெளிநாட்டு இராஜதந்திரிகளைப் பகைத்துக் கொண்டு ஆயர் இராயப்பு ஜோசப் கருத்து வெளியிடுபவர் அல்ல. மாறாக சிங்கள ஆட்சியாளர்கள் கடந்த எழுபது ஆண்டுகளாக மேற்கொண்ட தமிழ் இன அழிப்புப் பற்றிய விபரங்களை பகிரங்கமாகவும் துணிவோடும் மன்னார் பிரதேசத்தில் இருந்தே வெளிப்படுத்தியிருந்தார்.

1981 ஆம் ஆண்டு மன்னார் மறை மாவட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்திருந்த அப்போதைய பிரதமர் அமரர் பிரேமதாசா, ஆயர் தியோகுப்பிள்ளையோடு முரண்பட்டிருந்தார்.

கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் மார்க்கஸ் பெர்ணாண்டோவுடன் தியோகுப்பிள்ளை எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்து தனித்துவமாகச் செயற்பட்டிருந்தார். அன்றைய இந்த வரலாறுகளை ஆழமாகப் புரிந்து கொண்டவர் ஆயர் இராயப்பு ஜோசப்.

சமயங்கள் வேறாக இருந்தாலும் தமிழர்களாக ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தில் பலமான நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் அவர் ஸ்கைப் மூலம் வெளியிட்ட கருத்துக்கள் கோடிட்டுக் காண்பித்திருக்கின்றன.  

நடந்தது போர் அல்ல தமிழ் இன அழிப்புத்தான் என்ற ஆயரின் கூற்று, சமயங்களைக் கடந்து ஈழத்தமிழர்கள் தனித்த ஒரு தேசம் என்பதையே அடையாளப்படுத்தியிருக்கிறது. அது சுயநிர்ணய உரிமைக்கும் வலுச்சேர்த்திருக்கிறது.

ஆயர் இராயப்பு ஜோசப் காலமாகவில்லை, காலம் ஆனார்.