எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டம்

ஜெனீவாவை மடைமாற்றிய ரணிலின் சர்வகட்சி மாநாடு

உள்ளகப் பொறிமுறைக்கும் பதின்மூன்றுக்கும் இணங்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
பதிப்பு: 2022 டிச. 17 12:12
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 19 10:59
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஜெனீவா மனித உரிமைச் சபையின் மார்ச் மாத அமர்வு ஆரம்பமாவதற்கு இன்னமும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், இலங்கை தொடர்பாக ஆணையாளர் தயாரிக்கவுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டு மேலதிக முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படும். இப் பின்னணியிலேதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி மாநாட்டைச் சென்ற செவ்வாய்க்கிழமை நடத்தியிருக்கிறார். ஈழத்தமிழர் விவகாரத்தை ஒட்டுமொத்த இலங்கை மக்களின் மனித உரிமைப் பிரச்சினையாக 2015 இல் ரணில் மடைமாற்றியிருந்தார். தற்போது ரணில் முழு அதிகாரம் படைத்த ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், 2015 இன் நீட்சியாகவே இச் சர்வகட்சி மாநாட்டையும் வடக்கு மாகாண உறுப்பினர்களுடன் பேச்சு என்ற நகர்வையும் நோக்க முடியும்.
 
புதின் மூன்று ஆரம்பப் புள்ளி என்பது ஈழத்தமிழர்களுக்குச் சர்வதேச நீதி கிடைக்காது என்பதற்கான வாசகங்களே தவிர வேறெதுவுமில்லை. இதனைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புரிந்துகொண்டாலும், அதற்கு மேல் ஒரு அடியேனும் நகர முடியாத அளவுக்குத் தமிழ்த்தேசிய அரசியல் விடுதலையில் அவர்களுக்கு உணர்வும் அக்கறையும் இல்லை

இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்பது அமெரிக்க - இந்திய அரசுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் விருப்பம். அதற்கேற்பவே ஈழத்தமிழர்கள் விவகாரம் கையாளப்பட்டும் வருகின்றது.

அதற்கு வசதியாகவே ரணில் விக்கிரமசிங்கவைச் சர்வதேசம் பல வடிங்களில் சித்தரிக்கின்றது. அதனைச் சாதகமாக்கியே இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தோற்றப்பாட்டை உருவாக்கும் நோக்கில் சர்வகட்சி மாநாட்டை ரணில் செவ்வாய்க்கிழமை நடத்தியிருக்கிறார்.

இனப்பிரச்சினை என்பதை ஒட்டுமொத்த இலங்கை மக்களின் நல்லிணக்கச் செயற்பாடாகவும், இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் விவகாரமாகவும் 2015 இல் மைத்திரி - ரணில் அரசாங்கத்தின்போது சுருக்கப்பட்ட ஒரு சூழலில், தற்போது ரணில் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பது இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குப் பெரும் சந்தர்ப்பமாகியுள்ளது.

இந்த வாய்ப்புக்களை ரணில் இரண்டு வகையாகப் பயன்படுத்துகிறார். ஒன்று, இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பைத் தொடர்ந்து பேணி சிங்களக் கட்சிகள் மற்றும் பௌத்த அமைப்புகளின் எதிர்ப்பின்றி பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்துடன் ஈழத்தமிழர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருதல்.

இரண்டாவது அமெரிக்க - இந்திய அரசுகளின் புவிசார் நலன்கள் மற்றும் இந்த நாடுகளின் நலனுக்குப் பாதிப்பில்லாத முறையில் சீனாவிடம் உதவிகளைப் பெறுவது, குறிப்பாக இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் இலங்கை சிறிய நாடாக இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தை அதிகரித்துச் சர்வதேசத்தின் செல்லப்பிள்ளையாக இலங்கையை வைத்திருப்பது.

இந்த இரு உத்திகளையும் ரணில் மிக நுட்பமாகக் கையாளுகிறார் என்பது தெரிகிறது.

அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் உடன்பாடாகவும் செல்லப்பிள்ளையாகவும் இருக்க வேண்டுமென்ற ரணிலின் உத்தி, ஈழத்தமிழர் விவகாரத்தை மையமாகக் கொண்டது என்பதில் சந்தேகமேயில்லை.

கட்சி அரசியல் ரீதியாக சிங்கள அரசியல் பிரதிநிதிகள் முரண்பட்டாலும், ஈழத்தமிழர் விவகாரம் மற்றும் சர்வதேச உதவிகள் ஆகியவற்றைப் பெறுவதில் ஒருமித்த குரலில் செயற்படுவதால். ரணிலின் இந்த இரண்டு வகையான உத்திக்கு இலங்கையில் ஆதரவு அதிகரிக்கும் சூழல் அதிகமாகவே உண்டு.

குறிப்பாக மார்ச் மாத ஜெனீவா அமர்வில் இலங்கை குறித்த தீர்மானம் இலங்கையைப் பாராட்டியும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுக்கு அனைத்துத் தரப்பும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்படலாம். அப்படியொரு அறிக்கை ஜெனீவாவில் இருந்து வெளிவர வேண்டும் என்பதை சஜித் பிரேமதாசவும் விரும்புகிறார்.

ஏனெனில் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றிய சஜித், இலங்கையின் இறைமை பற்றியும் சர்வதேச ஒத்துழைப்புகள் குறித்தும் எடுத்துரைத்திருக்கிறார். ஜே.வி.பிகூட இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புத் தொடர வேண்டும் என்பதையே விரும்புகின்றது.

ஆகவே இந்த இடத்தில் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த்தரப்பை நோக்கி வகுக்கும் வியூகம், ஜெனீவா அமர்வுக்கு முன்னதாக சிங்களக் கட்சிகளின் ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும் என்பது வெளிப்படை. சில சமயங்களில் தேர்தல் ஒன்று நடைபெற்று வேறு சிங்களக் கட்சிகள் ஆட்சியமைத்தாலும், ரணில் வகுத்த மேற்படி இரண்டு வகையான உத்திகளையும் புதிதாகப் பதவிக்கு வரும் அரசாங்கம் தொடர்ந்து செயற்படுத்தும் என்பதில் ஐயமேயில்லை.

ஏனெனில் கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலுக்குப் பின்னரான சூழலில் சர்வதேசத்தின் இலங்கைக்கான ஒத்துழைப்பு என்பது தனிப்பட்ட முறையில் சிங்கள ஆட்சியாளர்களை மையமாகக் கொண்டதல்ல. அது இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்புக்குரியதாகவே நோக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க தமிழ்த்தரப்பை நோக்கி வகுக்கும் வியூகம், ஜெனீவா அமர்வுக்கு முன்னதாக சிங்களக் கட்சிகளின் ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும் என்பது வெளிப்படை. சில சமயங்களில் தேர்தல் ஒன்று நடைபெற்று வேறு சிங்களக் கட்சிகள் ஆட்சியமைத்தாலும், ரணில் வகுத்த உத்திகளைப் பதவிக்கு வரும் புதிய அரசாங்கம் தொடர்ந்து செயற்படுத்தும் என்பதில் ஐயமேயில்லை

அதாவது எவர் ஆட்சி அமைத்தாலும் ஜெனீவா மனித உரிமைச் சபை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் பரிந்துரைகளை அந்த இலங்கை அரசு என்ற கட்டமைப்பு செயற்படுத்த வேண்டும் என்ற பொறிமுறை ஒன்றையே சர்வதேச சமூகம் தற்போது வகுத்துள்ளது.

சர்வதேசத்தின் இலங்கைக்கான ஒத்துழைப்பும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகளும் இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் உரியதென வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சென்ற புதன்கிழமை ரொய்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருக்கிறார்.

ஏழு தசாப்தங்களில் இலங்கை சந்தித்துள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி எரிபொருள் உணவு தட்டுப்பாடுகளிற்கு வழிவகுத்ததன் காரணமாகவே சிங்கள மக்கள் குழப்பமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற போராட்டங்களினால் ஜூலை மாதம் கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து அகற்றப்பட்டார். நாற்பது தசம் ஆறு பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு மேலதிக நிதி உதவி அவசரமாக தேவைப்படுகின்றது.

ஆனால் கடன் மறுசீரமைப்பு விடயத்திலும் சில பரிந்துரைகளை இலங்கை நிறைவேற்றத் தவறுவதாலும் ஒப்புக் கொண்ட நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியமும் தயக்கம் காண்பிக்கின்றது.

இந்த இடத்திலேதான் சர்வதேச நாணய நிதியத்தின நிதி உதவிக்கும் அப்பால் ஏனைய நாடுகளிடம் இருந்தும் நிதி உதவியை எதிர்பார்ப்பதாக அமைச்சர் அலி சப்ரி கூறுகிறார். அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகளிடம் இருந்து நான்கு அல்லது ஐந்து பில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாகவும் அலி சப்ரி ரொய்ட்டருக்கு தெரிவித்தார்.

அதிகளவு கடன்களை வழங்கிய சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளிடமிருந்தும் தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்தும் கடன் மறுசீரமைப்புத் தொடர்பான உத்தரவாதங்களை பெறுவதற்கான முயற்சிகளிலும் இலங்கை ஈடுபட்டுள்ளதாக டெயிலி மிரர் நாளிதல் கூறுகின்றது.

ஆகவே இவ்வாறான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலேதான் ரணில் விக்கிரமசிங்க ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க அல்லது தீர்வு பற்றிய பேச்சுக்களைக் கையில் எடுத்து இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையைச் சர்வதேசத்துக்குக் காண்பிக்க முற்படுகிறார்.

அதன் மூலமே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வையும் காண முடியும் என்ற புரிதலையும் சிங்களக் கட்சிகள் மத்தியில் பரப்புரை செய்கிறார்.

ரணிலின் இந்த முயற்சிக்கு சஜித் உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சி சிங்கள அரசியல் பிரதிநிதிகள் மறைமுகமாக ஆதரவு கொடுக்க விரும்புகின்றனர். ஏனெனில் இலங்கைக்கான சர்வதேச ஒத்துழைப்பு என்பது தனியே ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது வேறு சிங்கள கட்சித் தலைவர்களுக்கோ உரியதல்ல என்ற உறுதியான புரிதல் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்க இந்திய அரசுகள் இந்த விடயத்தில் பிடியாக நிற்கின்றன. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் இலங்கையோடு அந்த நிலைப்பாட்டில்தான் செயற்பட்டு வருகின்ற என்பதை கோட்டாபயவின் பதவி விலகலுக்குப் பின்னரான சர்வதேசக் காய் நகர்த்தல்கள் சிங்களக் கட்சித் தலைவர்களுக்குப் புரிய வைத்திருக்கின்றன.

இப் பின்னணியிலேதான் ஈழத்தமிழர் விவகாரத்தைப் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்துடன் முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிக்குப் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் முரண்பாட்டில் உடன்பாடாக ஒத்துழைக்கின்றன.

வடக்குக் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டிய அவசியம் பற்றி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குத் தனிப்பட்ட சந்திப்பில் கூறியுள்ள நிலையில், அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகப் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது பற்றியும் இடித்துரைத்திருக்கிறார்.

இந்திய மத்திய அரசும் ஆரம்பப் புள்ளி என்ற கருத்தை ரணிலிடம் தெளிவாகக் கூறியிருக்கிறது. ஆகவே 2012 ஆம் ஆண்டில் இருந்து ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஒவ்வொரு அறிக்கைகளிலும் வலியுறுத்தப்பட்டு வந்த பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமுல்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கிறது.

பதின்மூன்று ஆரம்பப் புள்ளி என்ற கதை தமிழ்த்தரப்புக்குச் சொல்லப்பட்டாலும், இதுதான் முழுமையானதும் இறுதியானதுமான அரசியல் தீர்வு என்று இந்தியாவுக்கும் ரணில் உள்ளிட்ட சிங்கள ஆட்சியாளர்களுக்கும் நன்கு தெரியும்.

இந்தியாவுக்கு முன்னுரிமை என்ற இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மாற்றம் இதன் பின்னணியிலேயே அமைந்திருக்கிறது.

ஆனால் தனது புவிசார் அரசியல் - பொருளாதார நலன் சார்ந்து பதின் மூன்று என்பதை இந்தியா அழுத்தினாலும், இலங்கை அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துமா இல்லையா என்பதில் இந்தியாவுக்கு கரிசனை இருக்க வாய்ப்பில்லை.

வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிக் கட்டமைப்புத்தான் நிரந்த அரசியல் தீர்வு என்பதிலும், இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்றும் ஒருமித்த குரலில் கூறுவதற்குத் தயங்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இன்று இந்தியா மற்றும் சிங்கள ஆட்சியாளர்கள் விரும்பிய தீர்வுக்கு நிபந்தனைகள் இன்றி உடன்பட்டுள்ளது

ஏனெனில் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்ற கதையை 2009 இற்குப் பின்னரான சூழலில் கிளப்பியது இந்தியாதான். அதனையே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட சிங்கள அமைச்சர்கள் சிலரும் தற்போது ஊதிப் பெருப்பித்துள்ளனர்.

ஆகவே இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அமெரிக்க இந்திய அரசுகளின் புவிசார் அரசியல் - பொருளாதார நலன்கள் ஆகியவற்றைச் சிங்கள ஆட்சியாளர்கள் மிக நுட்பமாகப் பயன்படுத்தி ஈழத்தமிழர் விவகாரததை உள்ளக விவகாரமாகவும், இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள்ளும் தற்போது முடக்கிவிட்டனர் என்பது பகிரங்கமாகியுள்ளது.

இலங்கை விவகாரத்தை உள்ளக விவகாரமாகவும், போர்க்குற்ற விசாரணையை உள்ளகப் பொறிமுறைகள் ஊடாகவும் முன்னெடுக்கலாம் என்ற கோணத்தில் மார்ச் மாதம் வெளிவரவுள்ள ஜெனீவா அறிக்கை மிகத் தெளிவாக அமையும் என்பதும் வெளிப்படை.

ஆகவே வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிக் கட்டமைப்புத்தான் நிரந்த அரசியல் தீர்வு என்பதிலும், இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்றும் ஒருமித்த குரலில் கூறுவதற்குத் தயங்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இன்று இந்தியா மற்றும் சிங்கள ஆட்சியாளர்கள் விரும்பிய தீர்வுக்கு நிபந்தனைகள் இன்றி உடன்பட்டுள்ளது.

புதின் மூன்று ஆரம்பப் புள்ளி என்பது ஈழத்தமிழர்களுக்குச் சர்வதேச நீதி கிடைக்காது என்பதற்கான வாசகங்களே தவிர வேறெதுவுமில்லை. இதனைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புரிந்துகொண்டாலும், அதற்கு மேல் ஒரு அடியேனும் நகர முடியாத அளவுக்குத் தமிழ்த்தேசிய அரசியல் விடுதலையில் அவர்களுக்கு உணர்வும் அக்கறையும் இல்லை.

பாரம்பரியக் காணி அபகரிப்பு உள்ளிட்ட தமிழர்களின் அன்றாடப் பிரச்சினைகள் என்பது போரின் பக்க விளைவுகள்.

ஆனால் அந்தப் பக்கவிளைவுகளுக்குரிய தீர்வை இலங்கை அரசாங்கத்துடன் பேசித் தீர்க்க வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கூறுவது வேடிக்கை.

ஏனெனில் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு நிரந்த அரசியல் தீர்வு முழுமையாக முன்வைக்கப்பட்டால் அதற்குரிய தீர்வுகள் எட்டப்படும். அதற்கேற்ப கோரிக்கைகளைக் கூடுதலாகவும் முழுமையாகவும் முன்வைக்க வேண்டும்.

அத்துடன் இன அழிப்புக்கான சர்வதேச நிதியை உரிய முறையில் கோரினால் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய உண்மைகள் வெளிப்படும். சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரமும் இயல்பாகவே நியாயப்படுத்தப்படும்.

ஆனால் இவற்றை ஜனநாயக வழியில் அணுகுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வலு இல்லை. மாறாக யதார்த்தமாகப் பேச வேண்டும், நடைமுறைச் சாத்தியமானதைக் கோர வேண்டும் என்று கூறி மக்களின் உணர்வுகளை மடைமாற்றுகின்றனர்.

அவ்வாறு கூறுவது தங்களின் இயலாமை என்பதைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அறியாதவர்களும் அல்ல.

தேர்தல் அரசியல், இந்தியாவின் ஆலோசனைக்குக் கீழ்படிதல் மற்றும் தனிப்பட்ட சலுகைகளை எதிர்பார்ப்பது போன்ற அற்பசொற்ப ஆசைகளுக்குச் சில தமிழ்ப் பிரதிநிதிகள் அடிமைப்பட்டிருக்கின்றனர் என்பதைக் கணக்கிட்டே சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையாண்டு வருகின்றனர்.

இதற்கு ரணில் மிகப் பொருத்தமானவராக அமைந்திருக்கிறார் என்பது கண்கூடு.

ஆகவே கட்சி அரசியலைக் கடந்து சிவில் சமூக அமைப்பு ஒன்று ஜனநாயக வழியில் முழுநேரப் பணியில் ஈடுபடுமானால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அர்த்தமேயில்லாத இணக்க அரசியல் செயற்பாடுகளுக்கு முடிவு கட்டலாம். தனிநபர் அரசியல், கூட்டுப் பொறுப்பற்ற தன்மை போன்றவற்றையும் இல்லாதொழிக்கலாம்.

ஈழத் தமிழர்களுக்கான உறுதியான தலைமை யார் என்பதை வரலாறு அடையாளமிடும் காலம் இது.