நீதியரசர் தனது முடிவை அறிவித்திருக்கிறார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதே பிறழ்வுக்கு பலியாகாது விலகி நடப்பது எவ்வாறு?

ஈழத் தமிழர்கள் கொள்கைத் தெளிவுடன் செயலாற்ற வேண்டிய காலம்
பதிப்பு: 2018 ஒக். 25 01:02
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 08 22:14
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கொள்கை பிறழ்ந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை உச்சாடனம் செய்தவாறு தனது புதிய கட்சி தொடர்பான அறிவித்தலை புதனன்று தந்திருக்கிறார் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன். தாம் பிறழ்த்திய கொள்கையைக்கூடத் தாமே கடைப்பிடிக்காது திரிபுபடுத்தும் தமிழரசுக் கட்சியின் தலைமையை விட நீதியரசர் விக்னேஸ்வரன் ஆயிரம் மடங்கு நேர்மையானவர். ஆகவே தமிழர் தரப்பு அரசியற்கட்சிகளுக்குள் ஒரு நல்ல தலைமை தரவல்ல ஒரு தந்தையாகப் பரிணாமம் பெறும் அவரை மனமார்ந்து வரவேற்கவேண்டியது ஈழத் தமிழ்த் தேசியப் பற்றுள்ள அனைவரதும் கடன். அதேவேளை, நீதியரசரும் தமிழ் மக்கள் பேரவையும் இன்ன பிறரும் சேர்ந்து பிறழ்ந்திருக்கும் கொள்கை என்ன என்பதையும் ஈழத்தமிழ் மக்கள் விளங்கியிருந்தாலே தமது தலைமையை நேர்வழியில் ஆற்றுப்படுத்தமுடியும்.
 
வட மாகாண முதலமைச்சராக நீதியரசர் விக்னேஸ்வரன் தேர்தல் அரசியலுக்குள் பிரவேசித்தபோது அவருக்கிருந்த தமிழ்த்தேசிய அரசியற் புரிதலில் பல கோளாறுகள் இருந்தன.

ஆனால், காலப்போக்கில் தனது அரசியற் புரிதலை மேம்படுத்திக்கொண்டார். விளைவாக, ஒரு நல்ல முதலமைச்சராக அவர் விருத்தி கண்டார்.

இதற்கு அவரது சுயநலம் சாராத பண்பும், நுண்ணறிவாற்றலும், உயரச் சென்றாலும் கடமையுணர்வுடன் நேரம் ஒதுக்கிக் கருமமாற்றும் பொறுப்புணர்வுப் பாங்கும் பேருதவியாகின.

தமிழர் அரசியலில் மாகாணசபை முதலமைச்சராகி மேம்பட்ட ஒருவர் அவர் மட்டுமே.

தற்போது தமிழ்த்தேசியத்தின் அடுத்த கட்டச் சாரதியாகப் பயணிக்கத் தயாராகியிருக்கிறார்.

அவ்வாறு அவர் தயாராக மாட்டாரா என்று ஏங்கிக்கிடந்தவர்கள் பலர். அவர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தியாக அவரது கட்சி அமைப்பதான முடிவு அமைந்திருக்கிறது.

ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஆழமாக அணுகும் ஒரு மனிதர் சாரதியாக வருவது அருமையானதொரு விடயம் அல்லவா.

காலத்தால் குறுகிய பயணமாக இருந்தாற்கூட காத்திரமான பயணமாக அது இருக்கவேண்டும் என்பதே கொள்கை சார்ந்தோர் அனைவரதும் விருப்பு.

ஆக, இந்தப் பயணம் நற்பயணமாக, சிந்தனைத் தெளிவோடு விரைந்து கடமையாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியத்தின் காவலர்களாகத் தங்களை உணர்ந்துகொள்ளும் ஒவ்வொருவரையும் சார்ந்திருக்கிறது.

இதற்கான தெளிவைப் பெற்றுக்கொள்ள அவசியமான விவாதத்துக்கான அடிப்படைகள் சிலவற்றைக் கூர்மை இணையம் இந்தக் கட்டுரையில் முன்வைக்கிறது.

எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில் முன்வைக்கப்படும் இந்தக் கருத்துகளின் தொடர்ச்சி எதிர்வரும் நாட்களிலும் வெளிவரும்.

சமஷ்டித் தீர்வைக் கோரிக்கையாக முன்வைப்பது தமிழ்த் தேசிய நிலைப்பாடு அல்ல

ஈழத்தமிழர்கள் சமஷ்டியைத் தமது கொள்கையாக முன்வைத்த காலம் தமிழர் அரசியற்பாதையில் மலையேறிவிட்டதென்றும் இனிமேல் தமிழர்கள் தமது கொள்கையாகச் சமஷ்டியை முன்வைக்கமுடியாதென்றும் தந்தை செல்வாவின் காலத்திலேயே அறுதியும் இறுதியுமாக முடிவெடுத்தாகிவிட்டது.

தமிழரசுக் கட்சி என்ற ‘பெடரல் பாட்டி’ யைச் சுருட்டிக் கட்டிவைத்துவிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கட்சியைத் தந்தை செல்வா உருவாக்கினார்.

1983 இல் ஆறாம் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தனது பதவியை அறத்தோடும் மறத்தோடும் இராஜினாமாச் செய்தமைக்கும் இதுவே பின்னணி.

பிற்காலத்தில் இந்தியாவின் தூண்டுதலுக்கு ஆளாகி அதே ஆறாம் சட்டத்திருத்தத்துக்கு அடிமையாகப் பிரமாணம் செய்துகொண்டதென்பது அவர் பிறழ்ந்து போன வரலாற்றின் பிறிதொரு அத்தியாயம்.

தனிமனிதர்களாகப் பலர் கொள்கை பிறழ்ந்து போவதைக் கண்டு வந்தது ஈழத் தமிழர் வரலாறு.

ஏன், ஒரு கட்சி பிறழ்ந்த கொள்கை வைத்திருப்பது கூட, ஒருவகையில் சகித்துக்கொள்ளப்படக் கூடியதே.

ஆனால், பிறழ்ந்த கொள்கையை வைத்துக்கொண்டு தங்கள் கட்சியே பேச்சுவார்த்தையில் நேரடியாக ஈடுபடும் ஆணை கொண்ட தமிழ் மக்களின் தலைமை என்று பிரதிக்ஞை தீட்டுவது சாதரண பிறழ்வல்ல, அதல பாதாளப் பிறழ்வாகும்.

இந்தப் பிறழ்வைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009 மே மாதம் வரை செய்யவில்லை.

ஆனால், அதன் பின்னர் பிறழ்வையே கொள்கையாக்கி, அதையே மக்கள் ஆணைபோல பாவனை செய்து, தேர்தல் விஞ்ஞாபனமாக்கியது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு.

விக்னேஸ்வரனும் அதே கொள்கைப் பிறழ்வுப் பொறிக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறார் என்பதை அவரது உரை வெளிப்படுத்தியிருப்பது கவலைக்குரியது.

சமஷ்டி தொடர்பான எந்த நிலைப்பாடு பொருத்தமானது?

தமிழர்கள் தங்கள் கொள்கையாகவோ, மாதிரி யாப்புகளாகவோ சமஷ்டியைச் சித்தரித்துக் கனவு காணுவது அடிப்படையில் வரலாற்றுப் பிறழ்வாகிறது.

ஆனால், அதன் அர்த்தம் சமஷ்டியை நிராகரிப்பது என்றும் பொருள்படாது.

பொருத்தமான தமிழ்த் தேசியப் பொருள்கோடல் என்னவென்றால், சமஷ்டி முறையிலான தீர்வொன்றை இலங்கை அரசு சர்வதேச மத்தியஸ்தத்துடன் முன்வைத்தால் பரிசோதிக்கலாம் என்பதே.

தமிழர்களாக சமஷ்டித் தீர்வை முன்மொழிவது அபத்தமானது.

ஈழத்தமிழர்கள் தமது முழுமையான சுயநிர்ணய உரிமைக்கும் தனித்துவமான இறைமைக்கும் உள்ள அரசியல் மற்றும் நீதி சார்ந்த நிலைப்பாடுகளையே தமது கொள்கைப் பிரகடனமாக உச்சாடனஞ் செய்தல் வேண்டும்.

மற்றெல்லாம் கொள்கை நிலைப்பாட்டுக்கு மட்டுமல்ல வரலாற்றில் பின்னோக்கி நடக்கும் செயல். இது கொடுக்கப்பட்ட உயிர் ஆகுதிகளையும் களங்கப்படுத்துவதாகும்.

ஆறாம் சட்டத்திருத்தம் என்று ஒன்று இருக்கிறது என்பதற்காக கொள்கையை மாற்றுவதும் வரலாற்றில் பின்னோக்கிப் பயணிப்பதும் அரசியல் விபச்சாரம்.

அதேவேளை, ஆறாம் சட்டத்திருத்தத்தை அப்பட்டமாக மீறுகின்ற கொள்கையையும் முன்வைக்கத் தேவையில்லை.

சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட தீர்வு என்று சொல்லிவிடுங்கள். அது போதுமானது.

ஒற்றையாட்சியில் தேர்தல் அரசியற்கட்சிகளின் பேச்சுவார்த்தை தொடர்பான வகிபாகம்

பாராளுமன்றத்திற்கோ, மாகாணசபைக்கோ அல்லது வேறேதும் பதவிக்கோ பிரமாணம் எடுக்கும் நிலையில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல் அரசியலில் ஈடுபடுவோர் அனைவருக்கும் ஏற்படும் நிர்ப்பந்தம் ஒன்று ஆறாம் சட்டத்திருத்தத்துக்கு உட்பட்டுப் பிரமாணம் எடுத்துக்கொள்ளல் என்பதாகும்.

இதனாலேயே இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல் அரசியலில் ஈடுபடும் எந்த அரசியற் கட்சியும் தன்னை ஈழத்தமிழ் மக்களின் அரசியற் தீர்வு தொடர்பாகப் பேச்சுவார்த்தை மேசையில் ஏகபிரதிநிதியாக உருவகம் செய்வது தவிர்க்கப்படவேண்டியது.

இந்தப் பிறழ்வை 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஊடாக மேற்கொண்டது.

உண்மையில் பேச்சுவார்த்தைக்கான ஏகபிரநிதிகள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வரையறைகளுக்கு உட்பட்டவர்களாக இருக்கவே கூடாது.

இது தான் அடுத்த கட்ட ஜனநாயகப் போராட்டத்திற்கான அரசியல் இராஜதந்திரத்தின் அச்சுக்களில் ஒன்று. இதையே சாணக்கியம் என்றும் வருணிக்கமுடியும்.

அப்படியான ஒரு ஏக பிரதிநிதித்துவத்துக்கான ஆணை வழங்கும் உரிமையை வேண்டுமென்றால் ஒரு கட்சி பிரதான கட்சி என்ற அடிப்படையில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல் அரசியலில் இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயக வழிகளுக்கூடாக பிறிதொரு தரப்புக்கு வழங்கலாம்.

அப்படியானதொரு தரப்பு சர்வதேச மட்டத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களாகவோ அவர்களின் புலம்பெயர் வழித்தோன்றல்களாகவோ 2009 இற்குப் பின்னான அரசியல் இராஜதந்திரப் போராட்டத்தின் உத்தியாக அமைவதே பொருத்தம்.

இன அழிப்புக் காரணமாக பாரிய புலப் பெயர்வைச் சந்தித்திருக்கும் தேசிய இனம் என்ற வகையில் ஈழத்தமிழர் தேசத்தின் இணைபிரியா அங்கமே தமிழ் டியாஸ்பொரா எனப்படும் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் என்ற தார்ப்பரியத்தையும் இங்கு நோக்கவேண்டும்.

அந்தச் சக்தியையும் இலங்கை ஒற்றையாட்சித் தேர்தல் சகதிக்குள் ஏற்கனவே சிலர் இழுத்து விட்டுள்ளார்கள். அதன் தொடர்ச்சியையே விக்னேஸ்வரனின் கட்சியும் செய்யவேண்டியதில்லை. அது அரசியற் சாணக்கியமாகாது.

ஆக, இலங்கை ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தேர்தல் அரசியலுக்கு இருக்கவேண்டிய பொருத்தமான வகிபாகத்துக்கு அப்பால் அபரிமிதமான ஆணை இருப்பதாகப் பாவனை செய்வதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் சமைப்பதும் ஈழத்தமிழ்த் தேசியத்தை ஊனப்படுத்தும் செயற்பாடுகளாகும்.

இதையே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் செய்கிறதென்றால், அதற்கு மாற்றாகத் தம்மை நிலைநிறுத்த முற்படுவோரும் அதே பிறழ்வைச் செய்வது அபத்தமானது.

ஆக, பிறழ்வுகளில் இருந்து தெளிவுபெற்று முன்னோக்கிச் செல்லல் என்ற நோக்கிலேயே மேலே குறிப்பிட்ட நிலைப்பாடுகள் எடுத்தியம்பப்பட்டுள்ளன.

விக்னேஸ்வரனின் கட்சியைப் பலப்படுத்துவதற்கான முதற்படி அதைக் கொள்கையைப் பிறழ்வுகளுக்குப் பலியாகாத வண்ணம் சாதுரியமாக அமைத்துக்கொள்வதாகும்.

மற்றையதெல்லாம் இரண்டாம் பட்சமானவை. அவற்றைப் பின்னர் நோக்குவாம்.