பேரம் பேசும் அரசியலை சிவில் சமூக அமைப்புகள் ஊக்கப்படுத்தக் கூடாது

மஹிந்த பிரதமரானமை அராஜகம் என்றால், தமிழர்களின் 70 ஆண்டுகால போராட்டத்தை அழித்தமை எந்த வகையான ஜனநாயகம்?

ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேள்வி தொடுக்க விரும்பாத தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
பதிப்பு: 2018 நவ. 04 00:48
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 05 08:11
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி இராணுவ ரீதியான புரட்சிக்கு அல்லது வன்முறைகளாக மாறிவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அவதானமாகவே இருக்கின்றன. பிரதமர் பதவி மாற்றம் தொடர்பான சர்ச்சைக்கு இலங்கையின் அரசியல் யாப்பு அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்றன. அதுவும் அமெரிக்கா இரண்டு தடவை அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசியல் யாப்பை கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் கூறியுள்ளார்.
 
அதேவேளை, மைத்திரிபாலவின் கண்மூடித்தனமான செயற்பாடுகள் இலங்கையில் வன்முறையை உருவாக்கிவிடலாம் என ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தனது ருவிற்றர் பதிவில் கூறியுள்ளார்.

புதிய அரசியல் யாப்புக்கான நகல் சட்ட வரைபை நிறைவேற்ற கூட்டு எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அதற்காக மஹிந்த ராஜபக்சவோடு சம்பந்தன் பேச்சு நடத்த வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தாரே?

ஆகவே, கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஏற்பட்ட அரசியல் நெருக்கடி இராணுவ ரீதியான புரட்சியாக அல்லது வன்முறைகளாக மாறிவிடக் கூடாது என்பதில் மாத்திரமே அக்கறையுடன் செயற்படுகின்றனர்.

ஆனால், இனப்பிரச்சினைக்கான நிரந்த அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களில் அக்கறையில்லை என்பதையே இந்த நாடுகள் வெளியிடும் அறிக்கைகள் கோடிட்டுக் காண்பிக்கின்றன.

இந்த நிலையிலேதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவை வழங்கியுள்ளதா என்ற கேள்விகள் எழுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது மஹிந்தவுக்கோ ஆதரவு வழங்குவதாக இருந்தால் ஈழத் தமிழர்களின் இறைமை, சுயநிர்ணயம் சார்ந்த பல நிபந்தனைகளை விதிக்குமாறு சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

தமிழ் சட்டத்தரணிகள் பேரவை, தமிழ் சிவில் சமூக அமைப்பு, யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், பசுமை எதிர்காலத்துக்கான நிலையம், வடமராட்சிக் கிழக்கு பிரஜைகள் குழு ஆகிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் உருவாக்கப்பட்டபோது கண்ணை மூடிக்கொண்டு நிபந்தனைகள் எதுவுமேயின்றி சம்பந்தன் ஆதரவு வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போதைய நெருக்கடியிலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு வழங்கிய ஆதரவு தொடர்பாக வெளிப்படைத் தன்மையுடன் செயற்படத் தவறியுள்ளதாகவே அவதானிகள் கருதுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ச பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட முறைமை ஜனநாயக விரோதமானது என்றும் அராஜகம் என்றும் சம்பந்தன் கூறியிருக்கிறார்.

அப்படியானால் கடந்த 70 ஆண்டுகாலமாக விடுதலைக்காக அரசியல் உரிமைப் போராட்டத்தை நடத்தி வரும் தமிழ்ச் சமூகம் மீது இலங்கை அரசு என்ற கட்டமைப்பு மேற்கொண்ட ஜனநாயக விரோத மற்றும் அராஜக செயற்பாடுகள் குறித்து சம்பந்தன் கூறுவது என்ன?

நல்லாட்சி என தங்களைத் தாங்களே கூறிக் கொண்டு 2015 இல் ஆட்சிக்கு வந்த மைத்திரி - ரணில் அரசாங்கம் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டியிருந்ததா?

புதிய யாப்புக்கு எதிராகப் பேச வேண்டாம். ஏனெனில் மைத்திரி - ரணில் அரசாங்கம் கவிழ்ந்துவிடும். இதனால் மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார் என சம்பந்தன் கடந்த ஆண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் தற்போது மஹிந்தவே பிரதமராகிவிட்டார்.

இலங்கை இராணுவத்தின் உதவியுடன் புத்தர் சிலை வைத்தல், காணி அபகரிப்பு மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமை போன்ற போரின் பக்கவிளைவுகளுக்கு தீர்வு காணும் விடய்தில் கூட ஜனநாயக அணுகுமுறைகளை மைத்திரி - ரணில் அரசாங்கம் கையாண்டதா?

வடபகுதியில் காணிகள் கையளிக்கப்பட்டன. ஆனால் கைளிக்கப்பட்ட காணிகள் பலவற்றில் இலங்கை இராணுவம் மீண்டும் முகாம்களை அமைத்துள்ளது.

அதேவேளை, இலங்கை அரசாங்க சேவைப் பரீட்சையில் தமிழர்கள் கூடுதலாக சித்தியடைந்தமையினால் அந்தப் பரீட்சை முடிவுகளை அரசாங்கம் இரத்துச் செய்தமை தவறு என்று ஜே.வி.பி.உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்காவே இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

ஆகவே அந்தப் பரீட்சை இரத்துச் செய்யப்பட்டமை எந்த வகையான ஜனநாயகம்? ஒரு இனத்திற்கு எதிரான அநீதியில்லையா?

இப்படி பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ள அவதானிகள், ரணில் விக்கிரசிங்கவுக்கு வழங்கிய ஆதரவை ஏன் வெளிப்படைத் தன்டையுடன் செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிப்பதற்கு முன்னர், வாக்களித்த வடக்கு - கிழக்கு மக்களைச் சந்தித்தார்களா? மாகாண சபைகள் கலைக்கப்பட்டாலும் அதன் உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் அல்லது குறைந்த பட்சம் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுடனானவது கலந்துரையாடி முடிவெடுத்தார்களா?

யாரோடு பேசி முடிவெடுத்தார்கள்? சரி ஆதரவு வழங்குவதற்காக ரணிலுக்குக் கொடுக்கப்பட்ட நிபந்தணைகள்தான் என்ன? அந்த நிபந்தனைகளை ஏன் குறைந்த பட்சம் ஊடகங்களுக்கு வழங்கவில்லை?

புதிய அரசியல் யாப்புக்கான நகல் சட்ட வரைபை நிறைவேற்ற கூட்டு எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அதற்காக மஹிந்த ராஜபக்சவோடு சம்பந்தன் பேச்சு நடத்த வேண்டும் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தாரே?

அப்படியானால் தற்போது மஹிந்த பிரதமராகத் தெரிவாகியுள்ளார் எனவும் ஆகவே புதிய யாப்பை நடைறைப்படுத்த மஹிந்தவின் பிரதமர் பதவி இலகுவாகிவிட்டது என சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியிருக்கலாமே? அதற்கு ரணிலையும் ஆதரவு வழங்குமாறு சம்பந்தன் கேட்டிருக்கலாமே?

புதிய யாப்புக்கு எதிராகப் பேச வேண்டாம். ஏனெனில் மைத்திரி - ரணில் அரசாங்கம் கவிழ்ந்துவிடும். இதனால் மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார் என சம்பந்தன் கடந்த ஆண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் தற்போது மஹிந்தவே பிரதமராகிவிட்டார்.

புதிய அரசியல் யாப்புக்கான நகல் வரைபை தமிழரசுக் கட்சியில் சம்பந்தன், சுமந்திரன் ஆகிய சிலரைத் தவிர வேறு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் யாருமே, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அந்த வரைபை நிராகரித்தே விட்டது.

எனவே மஹிந்த ராஜபக்ச தற்போது எப்படி மீண்டும் ஆட்சிக்கு வந்தார்? அவர் ஆட்சிக்கு வந்ததன் நோக்கம், பின்னணி என்ன என்பது குறித்து சம்பந்தன் ஏதாவது அலசி ஆராய்ந்து பார்த்தாரா? மக்களுக்குத் தெளிபடுத்தினாரா? அல்லது மக்களின் அபிப்பிராயங்களைக் கேட்டாரா?

2002 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்டு புலிகள் அந்தப் பேச்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது தடைவித்தது.

ஜனநாயக நீரோட்டத்தில் புலிகள் இணைய வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியிருந்தது.

ஆனால், 2018 ஆம் ஆண்டு இலங்கை அரசு ஜனநாயக வழியில் செயற்பட வேண்டும் எனவும் இலங்கை அரசியல் யாப்பின் படி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை விட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான கடந்த ஒன்பது அண்டுகளில் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றி எதுவுமே பேசப்பட்வில்லை.

எனவே குறைந்த பட்சம் சமஸ்டித் தீர்வையாவது இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றித்தின் அந்த அறிக்கையில் ஒரு வார்த்தையேனும் வெளிவரவில்லையே?

ஆகவே இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எழுப்பிய கேள்வி என்ன?

ஆக, இலங்கையின் தென்பகுதியில் இராணுவ புரட்சியோ, வன்முறைகளோ வந்துவிடக் கூடாது என்பதிலும் தமது பூகோள அரசியல் வியூகங்களுக்கு ஏற்ப இலங்கை அரசியல் சூழல் அமைந்திருக்க வேண்டும் என்பதில் மாத்திரமே மேற்குலக நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கவனமாக உள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

எனவே இன்னமும் காலம்போகவில்லை. வடக்கு - கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி முறை குறித்து ரணில், மைத்திரி, மஹிந்த மற்றும் வேறு சிங்கள அரசியல் தலைவர்கள் இணங்கியே ஆகவேண்டும் என்றும், இல்லையேல் கொழும்பு அரசியல், இப்படியான முரண்பாடுகள் சதித் திட்டங்களுக்குள்ளே அமுங்கித்தான் போகும் என்ற எச்சரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமல்ல ஏனைய தமிழ்க் கட்சிகளும் பகிரங்கமாகவே வெளிப்படுத்த வேண்டும்.

மாறாக இரகசிய உடன்படிக்கைகள், பேச்சுகள் ஆரோக்கியமற்றவை. 2004 ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாக சபைக்கான வரைபு ஒன்றை தமிழ்த்தரப்பு முன்வைத்தபோது, கொழும்பில் அரசியல் நெருக்கடி திட்டமிடப்பட்ட முறையில் உருவாக்கப்பட்டிருந்தது. ரணில் அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டமையும் ஞாபகமிருக்கலாம்.

எனவே, சுயாட்சிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள அனந்தி சசிதரன். தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை உருவாக்கியுள்ள முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும் இங்கு கூறப்பட்ட விடயங்களை கருத்தில் எடுப்பது நல்லது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ரணில், மஹிந்த, மைத்திரி. சந்திரிக்கா என்று எட்டிப் பிடித்துக் குதிரையோடும் அரசியல் வரலாறுகளை இனியாவது விலக்கிவிட வேண்டும்.

நெல்சன் மண்டேலா பாணியிலான தியாக அரசியல் செயற்பாடுகளுக்குத் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தயாராக வேண்டும் என்பதையே கொழும்பு அரசியல் நெருக்கடி தமிழர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடம்.

அதேவேளை, கொழும்பு அரசியல் நெருக்கடிகளை முன்நிறுத்திப் பேரம் பேசும் அரசியலுக்கு ஊக்குவிக்காமல், ஈழத் தமிழர்களின் சுயாட்சிக்கான அங்கீகாரத்தை கோருவதையே சிவில் சமூக அமைப்புகளும் வலியுறுத்த வேண்டும்.

பௌத்த கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்திய இலங்கையின் அரசியல் யாப்புக்குள் நின்று கொண்டு தமிழ்த்தேசியப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியாது என்பதற்குத் தற்போதைய அரசியல் நெருக்கடி கடைசி உதாரணம்.

1948 ஆம் ஆண்டில் இருந்து இவ்வாறான உதாரணங்கள் பல்வேறு வடிங்களில் வந்துபோயுள்ளன. ஆகவே பட்டறிவு தமிழர்களுக்குத் தாராளமாகவே இருக்கின்றது. செயாலாக்கமே முடக்கப்பட்டிருக்கிறது. முடக்கிவைத்திருப்பது சர்வதேச சமூகமே. முடக்கப்படுவதற்குத் துணைபோயிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

காலத்துக்குக் காலம் நடிகர்கள் மாறுவதுபோல சர்வதேச சமூகத்தின் அரசியற் பாம்பாட்டிகள் வருவார்கள். அறிக்கைகள் விடுவார்கள். பின்னர் மறைந்து விடுவார்கள்.

ஆனால், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அவ்வாறு பொறுப்பற்று இருக்கமுடியுமா என்ற கேள்வி மேலேழுவது நியாயமானதே.

சர்வதேச சமூகம் என்ன சொல்கிறது என்பது அல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்திற்கு என்ன சொல்கிறது என்பதே முக்கியமானது.