செய்தி: நிரல்
ஜூலை 18 23:44

தேர்தல்கள் நெருங்கும்வேளையில் மீண்டும் அரசியல் யாப்புத் திருத்தங்கள் பற்றிய பேச்சுக்கள்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில் மீண்டும் புதிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான பேச்சுக்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் ஆரம்பித்துள்ளதாக கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இது குறித்து இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சம்பந்தன் பேசியிருந்தார். முதல்கட்டமாக இலங்கை நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து விவாதம் நடத்துமாறு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது குறித்து சம்பந்தன் உரையாடியுள்ளார்.
ஜூலை 18 05:36

மைத்திரிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை ஒன்றை இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடவடிக்கைகளைத் தடுக்கத் தவறியமை, 19 ஆவது அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறிச் செயற்படுகின்றமை போன்ற பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுக்கள் பிரேரணையில் முன்வைக்கப்படுமென கட்சித் தகவல்கள் கூறுகின்றன. பிரேரணையில் உள்ளடக்கப்படவுள்ள குற்றங்கள் குறித்த சட்ட வியாக்கியானங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சட்ட வல்லுநர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர்.
ஜூலை 15 19:55

தேவதாசன் வெலிக்கடைச் சிறையில் உண்ணாவிரதம்

(வவுனியா, ஈழம்) இடதுசாரி இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு தமிழ் அரசியலை முன்னெடுத்தவரும், இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான கனகசபை தேவதாசன், இன்று திங்கட்கிழமை அதிகாலை முதல் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். 62 வயதுடைய தமிழ் அரசியல் கைதியான தேவதாசன், தனக்கு வழங்கப்பட்ட ஆயுள்த் தன்டனைக்கு எதிராக கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு வசதியளிக்குமாறு கோரியே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
ஜூலை 15 11:09

மகாவலி அபிவிருத்தி- கொக்குத் தொடுவாய்க் காணிகள் அபகரிப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணம் முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய்ப் பிரதேசத்தில் உப உணவுப் பயிர்ச் செய்கைக்காக வழங்கப்பட்ட சுமார் இருநூறு ஏக்கருக்கும் அதிகமான காணிகளை இலங்கை வன வளத் திணைக்களம் இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் அபகரித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். 1981 ஆம் ஆண்டு இந்தக் காணிகள் வழங்கப்பட்டிருந்தன. கொக்குத் தொடுவாய் பிரதேசத்தில் உள்ள குஞ்சுக்குளம், கோட்டக்கேணி, குளத்துச் சோளகம், காயாவடிக் குளம் ஆகிய பகுதிகளில் உப உணவுப் பயிற்செய்கைக்காக வழங்கப்பட்ட காணிகளையே தற்போது தமக்குரியவையென கொழும்பில் உள்ள இலங்கை வன வளத் திணைக்கள் கூறுகின்றது.
ஜூலை 15 09:54

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை மைத்திரி வெளியிட வேண்டும்!

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுவதை மேலும் தாமதிக்க முடியாதென இலங்கை சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு ஏலவே தெரிவித்திருந்தது. ஆனாலும் அது பற்றிய அறிவிப்புகள் எதுவும் இல்லாத நிலையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் இன்னமும் ஒன்றரை மாதத்திற்குள் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய அறிவிப்பை மைத்திரிபால சிறிசேன வெளியிட வேண்டும் என்றும், இல்லையேல் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவே வெளியிடுமெனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.