நிரல்
ஜூன் 14 20:13

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் பயங்கரவாதமாம் - மோடி

(வவுனியா, ஈழம்) அப்பாவி உயிர்களைப் பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகத்தை தனது இலங்கை விஜயத்தின் போது பார்த்தததாக, கிர்கிஸ்தான் தலைநகர் கிஸ்கெக் நகரில் இடம்பெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தின் ஆபத்தைத் தடுக்க அனைத்து மனிதநேய சக்திகளும் ஒன்றாக முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது அழைப்பு விடுத்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு நிதி ஆதரவு ஊக்கமளிக்கும் நாட்டைத் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் இந்தப் போரில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை அதிகப்படுத்தி இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை அகற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஜூன் 14 10:46

கிளிநொச்சி மாவட்டத்தில் 332 ஆசிரியர் வெற்றிடங்கள் - வலயக் கல்வி அலுவலகம் தகவல்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரின் பின்னர் தமிழர்களது கல்வி மட்டம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாயிரத்து 77 ஆசிரியர்கள் கடமையாற்றிவரும் நிலையில், தற்போது 332 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை 2010 - 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் வழங்கப்பட்ட புதிய ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக தம்மிடம் ஆவணங்கள் எவையும் இல்லையென கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜூன் 13 15:27

பூகோள அரசியல் போட்டி- மைத்திரி, ரணில் மோதல் உக்கிரம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே உக்கிர மோதல் இடம்பெறுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளை நிறுத்த வேண்டுமென மைத்திரி கேட்டுக்கொண்ட போதும், தொடர்ச்சியாக அந்த அமர்வு நடைபெறுகின்றது. அதனால், அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவிடாமல் மைத்திரிபால சிறிசேன தடுத்ததால், ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை அமைச்சர்களுடன் பேசித் தீர்மானித்து வருகின்றார். இந்த நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தை கூடுவதற்கு மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது.
ஜூன் 12 23:16

வாகரையில் இல்மனையிற் அகழ்வுக்கு எதிராகப் போராட்டம்

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழர் தாயகம் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நாற்பத்து எட்டுக் கிலோமீற்றர் நீளமான கடற்கரையில் இல்மனைற் சட்டவிரோதமாக அகழ்வதற்கு கொழும்பு நிர்வாகம் அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றுள்ளது. மேலும் நூறு மீற்றர் ஆழத்திற்கு இல்மனைற் அகழப்படவுள்ளதாகவும் இதனால் வாகரைப் பிரதேசம் முற்றுமுழுதாக அழிவடையும் நிலை ஏற்படுமென்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்குபற்றியுள்ளனர். இல்மனைற் அகழ்வதை உடனடியாகத் தடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோசமெழுப்பினர்.
ஜூன் 12 10:16

ஸர்க்கான் குறித்து ஜனவரியில் தகவல் வழங்கப்பட்டது-உலமா சபை

(யாழ்ப்பாணம், ஈழம்) ஸர்க்கான் தலைமையிலான தேசிய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு குறித்து பல தட­வைகள் இலங்கைப் பாது­காப்பு உயர் அதிகாரிகளுக்குத் தெரி­வித்­திருந்ததாகவும் ஆனாலும் நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லையென்றும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி இலங்கை நாடாளுமன்றத் தெரி­வுக்­குழு முன்­னி­லையில் வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்தள்ளார். நேற்றுச் செவ்வாய்க்கிழமை அளித்த வாக்குமூலத்தில் ஸஹ்ரான், அவர் சார்ந்த குழுவின் செயற்­பா­டு­கள் எதுவுமே ஏனைய முஸ்லிம் மக்களுக்குத் தொடர்ப்பில்லாதவையெனவும் இலங்கைப் பாதுகாப்புத் தரப்புக்கு கூறியிருந்ததாக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
ஜூன் 11 22:30

கலாசாரத்தை இழக்க முடியது- மகாநாயக்கத் தேரர்களிடம் முஸ்லிம்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல. உலகில் இயங்குகின்ற இஸ்லாமிய இயக்கங்களோடு இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்குத் தொடர்புகள் எதுவுமேயில்லையென அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி முஸ்லிம் அமைச்சர்கள் கண்டி மகாநாயக்கத் தேரர்களிடம் கூறியுள்ளனர். உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற பயங்கரத் தாக்குதலின் பின்னரான சூழலில் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக கருதப்பட்டு இலங்கைப் படையினரால் கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் முஸ்லிம் உறுப்பினர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். கண்டியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் பதவி விலகிய ஒன்பது உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
ஜூன் 10 23:07

விகாரைகள் அமைப்பதை நிறுத்த முடியாது- மனோவிடம் பிக்குமார்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழரின் தாயகமான வடமாகாணம் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பான கலந்துரையாடல் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி பௌத்த குருமார் சிலர் செயற்படுகின்றமை தொடர்பாக பிரதேச மக்கள் அமைச்சர் மனோ கணேசனிடம் முறையிட்டுள்ளனர். கலந்துரையாடலுக்கு முன்னர் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்ற அமைச்சர் மனோ கணேசன், அங்கு நிலமைகளை அவதானித்தார். மனோ கணேசன் அங்கு சென்றதனால் பிக்குமார் சிலர் விசனம் தெரிவித்தனர்.
ஜூன் 10 10:43

நரேந்திர மோடி மாலைதீவுக்குச் சென்று கொழும்பு வந்ததன் பின்னணி

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் நான்கு மணி நேரப் பயணமாகக் கொழும்புக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமியவாதிகளின் பயங்கரத் தாக்குதல்களை தடுப்பதற்கு இலங்கைக்கு இந்தியா உதவியளிக்கும் என்று பகிரங்கமாகவே உறுதியளித்துள்ளர். பூகோள அரசியலில் சிக்குண்டுள்ள இலங்கையில் இஸ்லாமிய இயக்கம் ஒன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளமை அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கே அச்சுறுத்தல் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் நரேந்திர மோடியின் கொழும்புக்கான பயணம் அமைந்துள்ளது. இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மாலைதீவுக்குச் சென்ற நரேந்திர மோடி, மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராகிம் முகமதுவோடு பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட ஆறு ஒப்பந்தங்கைளச் செய்துமுள்ளார்.
ஜூன் 08 23:18

தமிழரோடு முஸ்லிம்கள் மீண்டும் உறவைப் புதுப்பிக்கத் தடையா?

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் முஸ்லிம் மக்களையும் முஸ்லிம் அரசியல்வாதிகளையும் ஈழத் தமிழ் மக்களுடன் இணையவிடாது தடுக்கும் முயற்சிகளில் சிங்கள பௌத்த பேரினவாதம் தீவிரமாகச் செயற்படுவதை கொழும்பில் நடக்கும் அரசியல் நகர்வுகள் எடுத்துக் காண்பிக்கின்றன. அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மறைமுகமாகவும் கூட்டாகவும் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது பேர் பதவி விலகியதாக மகிந்த தரப்பு உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியிருந்தார். இந்த நிலையில மகிந்த ராஜபக்சவை அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய முஸ்லிம் உறுப்பினர்கள் ஒன்பது பேரும் இன்று சனிக்கிழமை சந்தித்துள்ளனர்.
ஜூன் 08 20:39

மைத்திரிக்கு முன்பாக இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரிய மக்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் இல்லாதொழிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் சென்றுலிட்ட நிலையிலும் தமிழ் இனப்படுகொலை குறித்த சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையென்பதைச் சுட்டிக்காட்டி முல்லைத்தீவில் இன்று சனிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவுக்கு வந்தபோது எதிர்ப்பு வெளியிட்டு நடத்திய கவனயீர்ப்புப் போராட்டத்தின்போதே சர்வதேச நீதிகோரி மக்கள் கோசமெழுப்பினர். போரின் போதும் அதன் பின்னரான சூழலிலும் இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எண்ணூற்றி 24 நாட்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.