செய்தி: நிரல்
ஜூன் 21 23:04

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணை- மைத்திரி- ரணில் இழுபறி

(வவுனியா, ஈழம்) இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த மூன்று பேர்கொண்ட குழு இதுவரை நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவில்லையென இலங்கை நாடாளுமன்றப் பிரதி சபாநாயகர்,ஆனந்த குமாரசிறி இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் நிமல் லான்சா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே பிரதி சபாநாயகர் இவ்வாறு கூறினார். ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுத் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய ஆணைக்குழுவின் அறிக்கை மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 21 14:33

தேரர்களின் கருத்துக்கள் இன மோதலை உருவாக்கும்- சிவில் அமைப்புகள்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கண்டி மகாநாயக்கத் தேரர்கள் வெளியிடும் கருத்துக்களினால், இன மோதல்கள் ஏற்படலாமென சித்திரவதைகளுக்கு எதிரான பொது அமைப்புகளின் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவில் சமுக செயற்பாட்டாளர்களான பாக்கியஜோதி சரவணமுத்து, ஜெனான் பெரரா ஆகியோர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளனர். முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் உணவுகள் அருந்த வேண்டாமென கண்டி அஷ்கிரிய பீடாதிபதி வரக்காகொட சிறி ஞானரத்ன தேரர் விடுத்த வேண்டுகோளுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள ஜெகான் பெரேரா, தமிழ் முஸ்லிம் மக்களையும் தூண்விடும் நடவடிக்கைகளில் சில குழுக்கள் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார்.
ஜூன் 19 23:02

அமைச்சர்களாகப் பதவியேற்பு- ரணிலின் பிரித்தாளும் தந்திரம்!

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கைத் தீவில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினவாதிகளினால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும், இலங்கை இராணுவச் சோதனைக் கெடுபிடிகளுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இருந்து ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களும் கூட்டாகத் தமது பதவிகளில் இருந்து விலகினர். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் ஹபீர் காசிம், கட்சியின் மூத்த உறுப்பினர் அப்துல் ஹலீம் ஆகிய இருவரும் இன்று புதன்கிழமை மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். கட்சி வேறுபாடுகளின்றி சமுகத்தின் பலத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தவே கூட்டாக அமைச்சுப் பதவியில் இருந்து விலகியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அப்போது கூறியிருந்தார்.
ஜூன் 19 16:12

அமெரிக்காவுக்கும் நெருக்குதலா? பொம்பேயோவின் வருகை ரத்து

(வவுனியா, ஈழம்) இலங்கையுடன் செய்யவுள்ள சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா தொடர்ச்சியாக கலந்துரையாடி வரும் நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோ, (US Secretary of State Mike Pompeo) கொழும்புக்கு பயணம் செய்வாரென எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத நெருக்கடிகளினால் பொம்பேயோவின் இலங்கைப் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. பொம்பேயோவின் இலங்கைப் பயணம் ஆபத்தானதென்று மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்றுச் செய்வ்வாய்க்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். மகாநாயக்கத் தேரர்களும் சோபா ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
ஜூன் 17 11:13

யாழ்ப்பாணம் - மணியந்தோட்டம் வேளாங்கன்னி மாதா சொரூபம் உடைத்து வீதியில் வீசப்பட்டுள்ளது

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் மதத்தின் பெயரால் அநீதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தலைநகர் கொழும்பு உட்பட கிழக்கு மாகாணத்திலும் கிறிஸ்தவ மக்களை இலக்கு வைத்து பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் - மணியந்தோட்டம், வேளாங்கன்னி மாதா சொரூபம் அடையாளந் தெரியாதவர்களால் உடைத்து வீதியில் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித்தளத்திற்குத் தெரிவித்தார்.