செய்தி: நிரல்
ஜூலை 11 23:22

ரணில் எழுத்தில் உத்தரவாதம்? சம்பந்தன் பகிரங்கப்படுத்தவில்லை

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசில் பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது. தமிழரசுக் கட்சியை தலைமையாகக் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்ததாலேயே ரணில் அரசாங்கம் காப்பாற்றப்பட்டதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியுள்ளார். ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. வாக்கெடுப்பு நடைபெற்றவேளை இவர்கள் சபையை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.
ஜூலை 11 16:39

ஆறுமுகன் தொண்டமானின் ஏற்பாட்டில் புதிய அரசியல் கூட்டணி

(வவுனியா, ஈழம்) வடக்கு கிழக்கு, மாகாணங்களையும் கொழும்பை மையப்படுத்திய மேல் மாகாணம் மற்றும் மலையகம் ஆகியவற்றை உள்ளடக்கி பிரதேச வேறுபாடுகள் இன்றி புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது. மலையகத் தமிழர்களின் அரசியல் மற்றும் தொழிற் சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பழம்பெரும் கட்சியான தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், ஏனையவர்களோடு சேர்ந்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளுதல் என்ற உடன்பாட்டில், இதற்கான ஒப்பந்தங்களும் ஏனைய சிறிய கட்சிகளோடு கைச்சாத்திடப்பட்டுள்ளன.
ஜூலை 10 23:23

நாவற்குழி விகாரை திறப்பு- வழக்கை வாபஸ் பெற்றது பிரதேச சபை

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகம் வடமாகாணம் யாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் கட்டப்பட்ட விகாரை எதிர்வரும் 13 ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. நாவற்குழி சம்புத்தி சுமன விகாரைத் திறப்பு விழா எனப் பெயரிடப்பட்ட அழைப்பிதழ் கொழும்பில் உள்ள பிரமுகர்களுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் 2010 ஆம் ஆண்டு முதன் முதலாக மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நாவற்குழிப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றது. ஆரம்பத்தில் 45 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.
ஜூலை 10 09:36

மன்னாரில் முஸ்லிம்களின் வீட்டுத் திட்டத்தில் தலையிடும் இலங்கை இராணுவம்

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டத்தில் கடந்த கால யுத்த நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிய தமிழ்பேசும் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளில் இலங்கை ராணுவம் தலையிடுவதாக முறையிடப்பட்டுள்ளது. சமீபகாலமாக மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு, முசலி மற்றும் மடு பிரதேச செயலகப் பிரிவுகளில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு, புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் சர்வதேச தன்னார்வ அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இடம்பெயர்ந்தவர்களுக்கான புதிய வீட்டுத்திட்டத்திலேயே இலங்கை இராணுவம் தலையிட்டு பல்வேறு குளறுபடிகளை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை 09 23:19

ஷரியா பல்கலைக்கழகத்தை மூடு- கொழும்பில் ஆர்ப்பாட்டம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் மூன்றாவது சிங்கள அரசியல் சக்தியாக விளங்கும் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பியால் இயக்கப்படும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், இலங்கைப் பொலிஸார், கண்ணீர்புகை பிரயோகமும், நீர்தாரை பிரயோகமும் செய்தனர். இதனால் பெருமளவு மாணவர்கள் சிதறியோடினர். சிலருக்குக் காயங்களும் ஏற்பட்டன. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏஎம். கிஸ்புல்லாவின் தனிப்பட்ட முயற்சியால் கட்டப்பட்டுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைவாத ஷரியாச் சட்டத்திற்கு அமைவாகவும் அந்தச் சட்டத்தின் அடிப்படையில் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளவும் ரணில் தலைமையிலான அரசாங்கம் அனுமதித்துள்ளதாகக் குற்றம் சுமத்தி மாணவர்கள் கோசம் எழுப்பினர்.
ஜூலை 09 11:27

மாணவர்கள் கடத்தல்- படைத்தளபதிகளிடம் விசாரணை தாமதம்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் தலைநகர் கொழும்பு தெகிவளை, கொட்டாஞ்சேனைப் பிரதேசங்களில் இருந்து ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொருபேரை திருகோணமலைக்குக் கடத்திச் சென்று, பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரி, இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இலங்கைக் குற்றத் தடுப்புப் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அனுர சேனநாயக்கா உண்மைகளை மூடி மறைத்த குற்றச்சாட்டின் பின்னணியில் சட்டத்தரணி சவேந்திர பெர்ணாண்டோ செயற்பட்டுள்ளதாகவும் அவர் மீது விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
ஜூலை 08 23:25

பிரேரணைக்கு முஸ்லிம் உறுப்பினர்கள் எதிராக வாக்களிப்பர்

(மட்டக்களப்பு, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் முன்னணி எனப்படும், ஜே.வி.பி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படுமென இலங்கை நாடாளுமன்றச் செயலாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை தடுக்கத் தவறியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி உறுப்பினர் விமல் ரட்னாயக்கா தெரிவித்தார்.
ஜூலை 08 14:11

கடும் வறட்சி- பூநகரி, வாகரைப் பிரதேசங்களில் கூடுதல் பாதிப்பு

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடும் வறட்சி நிலவுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டுள்ளனர். கிளிநொச்சி. பூநகரி, மட்டக்களப்பு வாகரைப் பிரதேசங்களில் கடும் வறட்சி நிலவுவதாகக் கூறப்படுகின்றது. கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் வறட்சியினால் 3326 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களில் 491 விவசாயக் குடும்பங்கள் இருப்பதாகவும் பூநகரிப் பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார். கடும் வறட்சி காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடமாகாணத்தில் பூநகரி பிரதேசமே வறட்சியினால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசம் எனவும் அவர் கூறியுள்ளார். நிவாரணங்களை வழங்க நிதியில்லை எனவும் அவர் கூறினார்.
ஜூலை 08 10:47

முஸ்லிம்களின் புதிய அரசியல் கூட்டணி

(வவுனியா, ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளனர். முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையே வேறுபாடுகள் இருந்தாலும் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒன்றித்துச் செயற்படுவது தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகள் கொழும்பில் ஆலோசித்துள்ளனர். சகல முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மூத்த உறுப்பினர்களும் எதிர்வரும் வியாழக்கிழமை ஒன்றுகூடி ஆராயவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தகவல்கள் கூறுகின்றன. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் பங்குகொள்ளவுள்ளனர்.
ஜூலை 07 22:50

இலங்கை சிங்கள இராச்சியம் - பிக்குகள் மீண்டும் அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கையை சிங்கள இராச்சியமாக்குவதற்கு பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பௌத்த பிக்குகளின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுபல சேனவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், சிங்கள இராச்சியத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கை சிங்களவர்களின் நாடு தமிழ் மக்கள் கோபிக்கக்கூடாது என்று இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய பொதுபல சேனவின் பொதுச் செயலாளர் அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார். சிங்களவர்கள் கள்ளத் தோணியில் வந்தவர்கள் அல்ல. சிங்கள மக்களே இந்த இலங்கையின் சொந்தக்காரர்கள் என்று ஞானாசார தேரர் சூழுரைத்தார்.