நிரல்
ஓகஸ்ட் 05 16:05

வவுனியாவில் மூன்று கிராம மக்கள் ஒருவேளை உணவுக்குப் பெரும் அவதி

(வவுனியா, ஈழம்) வவுனியா - வெண்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணாட்டி, பரமனாலங்குளம், கணேசபுரம் ஆகிய மூன்று கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் நூற்று எழுபத்தைந்து தமிழ்க் குடும்பங்கள் ஒருவேளை உணவிற்கு வழியின்றிப் பெரும் அவலத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் கண்ணாட்டிப் பங்குத் தந்தை அன்ரனி சோசை தெரிவித்துள்ளார். குறித்த மூன்று கிராமங்களையும் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் 1990 ஆம் ஆண்டு நிகழ்ந்த இராணுவ நடவடிக்கைகளினால் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து, தற்போது மீள்குடியேறி வாழ்ந்து வரும் நிலையில் நிரந்தர வருமானமின்றி ஒருவேளை உணவுக்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே இந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு உதவியளிக்குமாறு அருட்தந்தை அன்ரனி சோசை கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓகஸ்ட் 03 11:27

வல்வைப் படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் அனுட்டிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறைப் பகுதியில் அப்பாவிப் பொதுமக்கள் 72 பேர் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட வல்வைப் படுகொலையின் முப்பதாம் ஆண்டு நினைவேந்தல் நேற்று வெள்ளிக்கிழமை அனுட்டிக்கப்பட்டது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை தினத்தன்று இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்ட பொது மக்களை நினைவுகூர்ந்து வல்வெட்டித்துறைப் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், வல்வெட்டித்துறை நகரில் நினைவேந்தல் நடைபெற்றது.
ஓகஸ்ட் 02 21:00

மடு தேவாலயப் பெருநாளுக்கு மக்களின் வருகையில் வீழ்ச்சி

(மன்னார், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் மடு மாதா ஆலய ஆடிப் பெருநாளுக்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம், கொழும்பு உள்ளிட்ட சிங்களப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வருகை தரவில்லையென ஆயர் கூறியுள்ளார். மடு மாதா திருத்தலத்தின் இவ்வருட ஆடி மாதப் பெருநாள் கடந்த யூன் மாதம் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. யூலை மாதம் 2 ஆம் திகதி மடுத்திருப்பதியின் இறுதி நாள் உற்சவம் ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.
ஓகஸ்ட் 02 11:41

மட்டக்களப்பு - காத்தான்குடியில் வீடுவீடாகச் சென்று விபரங்களைச் சேகரிக்கும் பொலிஸார் - நெருக்கடியில் மக்கள்

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் கொழும்பிலிருந்து சென்றுள்ள இலங்கைப் பொலிஸார், வீடு வீடாகச் சென்று குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பான விபரங்களைச் சேகரிப்பதாக தமிழ் நெற் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் மண்முனைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள தமிழ் மக்களது வீடுகளுக்குச் செல்லும் பொலிஸார், குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பான விபரங்களைச் சேகரிப்பதுடன், பொலிஸார் வீடுகளுக்குச் செல்லும்போது ஒவ்வொரு வீட்டுத் தலைவர்களும் வீட்டில் இருக்க வேண்டும் எனவும் அவர்களால் நிரப்பப்படும் விண்ணப்பத்தில் வீட்டுத் தலைவர்கள் கையொப்பமிட வேண்டும் எனவும் வலியுறுத்துவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளதாக தமிழ் நெற் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 02 10:15

சஜித் பிரேமதாச மைத்திரியுடன் இணையும் சாத்தியம்!

(வவுனியா, ஈழம்) இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலையீடுகள் அதிகரித்துள்ளதால் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளிடையே குழப்பங்கள், முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சி ஏனைய சிறிய பத்துக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கத் தயாராகவுள்ளது. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு ஆதரவான கட்சிகளை இணைத்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. புதிதாக உருவாக்கப்படவுள்ள முன்னணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
ஓகஸ்ட் 01 23:38

பௌத்தமயமாக்கப்படுகின்றது தமிழர் தாயகம் - தடுத்து நிறுத்தாவிட்டால் நல்லூரிலும் விகாரை- ரவிகரன் எச்சரிக்கை

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வளங்கள் உட்பட மக்களது பூர்வீக நிலங்களும் இலங்கையில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்களால் சூறையாடப்பட்டுவரும் நிலையில், இந்த நிலை இவ்வாறு தொடருமாக இருந்தால் தமிழர்களின் கலாசார நகரமான யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெகு விரைவில் விகாரை அமைக்கப்படும் நிலை உருவாகும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஓகஸ்ட் 01 23:37

மைத்திரியால் பதவி உயர்வு பெற்ற இராணுவ அதிகாரியின் வழக்கு - சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல்

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணம் - நாவற்குழியில் 1996 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் 24 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். அந்த 24 பேரில் மூன்று இளைஞர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட மூன்று இளைஞர்களின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான குமாரவடிவேல் குருபரன், எஸ்.சுபாசினி ஆகியோரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் படம் எடுத்துள்ளனர். இரகசியமாகப் புகைப்படம் எடுத்தவர்களை குருபரன் அடையாளம் க்ண்டுள்ளார்.
ஓகஸ்ட் 01 23:08

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் அனுட்டிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான ஊடகவியலாளர்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது படுகொலைகளுக்கான நீதி இதுவரை நிலைநாட்டப்படாத நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் அனுட்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்கள் நினைவுத் தூபியில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின்போது நினைவு தூபிக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஓகஸ்ட் 01 11:05

மகாநாயக்கத் தேரர்களைத் திருப்திப்படுத்தும் வேட்பாளர் தெரிவுகள் - பின்னணியில் அமெரிக்கா!

(யாழ்ப்பாணம், ஈழம்) பௌத்த மகாநாயக்கத் தேரர்களையும் பௌத்த குருமாரையும் திருப்திப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளர்களையே பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் தெரிவு செய்ய முற்படுகின்றன. மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்திருந்த அமெரிக்கா, தற்போது பௌத்த குருமாரின் விருப்பங்களுக்கு மாறாகச் செயற்பட விரும்பாத நிலையில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் பௌத்தகுருமாரின் விருப்பங்களுக்குரிய ஜனாதிபதி வேட்பாளர்களை தெரிவு செய்வதில் ஆர்வம் காண்பிப்பதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி ஏற்கனவே சிங்கள பௌத்தர்களின் வாக்குகளை மாத்திரமே நம்பிச் செயற்படுன்றது.
ஜூலை 31 06:36

பௌத்த சிங்கள மக்கள் இல்லாத கிளிநொச்சி - இரணைமடுவில் சிங்கள தற்காப்புக்கலைக் கிராமம் உருவாக்கம்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் இலங்கை இராணுவம் முனைப்பாக செயற்பட்டுவரும் நிலையில் தமிழர் தாயகத்தின் மையப்பகுதியான கிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தினால் சிங்கள தற்காப்புக் கலை கிராமம் உருவாக்கப்பட்டு கடந்த வாரம் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பௌத்த பிக்குவின் ஆசீர்வாதத்துடன் இரணைமடுவில் அமைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தின் அருகில் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.