செய்தி: நிரல்
ஓகஸ்ட் 13 23:13

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த மைத்திரி உயர் நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரினார்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாகப் பதவிக் காலம் முடிவடைந்துள்ள ஒன்பது மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்துவது குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசித்து வருகிறார். ஜனாதிபதித் தேர்தலை மேலும் பிற்போட்டு அமைச்சர் சஜித் பிரேமதாசவை பொது வேட்பாளராகக் களமிறக்கும் நோக்கிலேயே மாகாண சபைத் தேர்தல்களை நடத்த மைத்திரிபால சிறிசேன முற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஆண்டு முடிவடைவதற்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்த வேண்டுமென சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியிருந்தார்.
ஓகஸ்ட் 12 19:44

செஞ்சோலைப் படுகொலை நினைவுத்தூபியில் பெயர்கள், புகைப்படங்கள் பொறிப்பதற்குத் தடை

(முல்லைத்தீவு, ஈழம்) மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் செஞ்சோலை வளாகத்தின் மீது வான்குண்டுத் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்ட அப்பாவி மாணவிகளின் நினைவாக அமைக்கப்படவுள்ள நினைவுத்தூபியில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் புகைப்படங்களையோ அல்லது அவர்களின் பெயர்களையோ பொறிக்க முடியாதென இலங்கைப் பொலிஸார் தடை விதித்துள்ளனர். இது தொடர்பாக முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிசார் ஏற்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். செஞ்சோலைப் படுகொலையின் பதின்மூன்றாவது ஆண்டு நினைவேந்தல் நாளை மறுதினம் புதன்கிழமை அனுட்டிக்கப்படவுள்ள நிலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் நினைவாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அனுமதியுடன் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.
ஓகஸ்ட் 12 16:09

யூலீயன் அஸாஞ்சே விடுவிக்கப்பட வேண்டும் - ஹற்றனில் போராட்டம்

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர் மீதான இன அழிப்புப் போரில் சர்வதேச சக்திகளின் பங்கு பற்றிய பல இரகசியங்களை வெளிக்கொணர்ந்த விக்கிலீக்ஸ் செய்தி இணையத்தளத்தின் ஸ்தாபகர் யூலீயான் அஸாஞ்சே விடுவிக்கப்பட வேண்டுமெனக் கோரி மலையகத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஹற்றன் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் நான்காவது உலகப் போருக்குத் தயாராகி வருகின்றன. உலக நாடுகளில் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இந்த விபரங்களை வெளியிட்டமைக்காக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டே யூலியான் அஸாஞ்சே கைதுசெய்யப்பட்டு அடைக்கப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஓகஸ்ட் 11 13:26

மன்னார் - பேசாலை மீன்பிடித் துறைமுகம் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டம் பேசாலையில் நிர்மாணிக்கப்படவிருந்த மீன்பிடி துறைமுக நிர்மாணப் பணிகள் பிரதேச மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் அரசியல் செல்வாக்குள்ள சிலர், குறித்த மீன்பிடித் துறைமுகத்தை பேசாலையில் அமைப்பதற்குத் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் மீனவர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக் காரணமாக திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக் கடற்தொழில் அமைச்சு, பேசாலையில் சுமார் நான்காயிரம் கோடி ரூபா பெறுமதியில் மீன்பிடி இறங்குதுறையை அமைப்பதற்குக் கடந்த 2018 ஆம் ஆண்டு திட்டங்களை வகுத்திருந்தது. இதனையடுத்து இந்தத் திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில் மீனவர்களும் அதிகாரிகளும் சந்தித்து உரையாடியிருந்தனர்.
ஓகஸ்ட் 10 16:03

வீடமைப்புத் திட்டத்தில் சிங்கள மரபுரிமைகளுக்கு முதலிடம்

(மன்னார், ஈழம்) வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களில் தமிழர் மரபுரிமைகள் புறக்கணிக்கப்பட்டு, சிங்கள மரபுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அத்துடன் சிங்கள மொழியில் வைக்கப்பட்ட பெயர்கள் அப்படியே தமிழ் மொழியிலும் எழுதப்படுகின்றன. குறிப்பாக, வீடமைப்புத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாச மேற்கொண்டுவரும் வீடமைப்புத் திட்டங்களில் சிங்கள மரபுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு செல்வநகர் பிரதேசத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தில் பௌத்த சிங்கள மரபுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுத் தமிழர் மரபுரிமைகள் வீடமைப்புத் திட்டத்தில் முற்றாகவே புறக்கணிக்கப்பட்டிருந்தன.