செய்தி: நிரல்
ஓகஸ்ட் 31 23:15

மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு நடத்த முடியாது

(மன்னார், ஈழம்) ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாதென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்ததேசப் பிரிய கொழும்பில் இன்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென ஏற்கனவே இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில் மகிந்த தேசப்பிரிய தேர்தலை நடத்த முடியாதெனத் தற்போது கூறியுள்ளார். எல்லிபட்டி பிரதேச சபைத் தேர்தலை ஒக்ரோபர் மாதம் நடத்த வேண்டுமென இலங்கை உயர் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் இதனாலேயே மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாதெனவும் அவர் கூறுகின்றார்.
ஓகஸ்ட் 31 16:01

பொத்துவில் கரையோரப் பிரதேசத்தில் விகாரை- ரத்தன தேரர் பார்வையிட்டார்

(அம்பாறை, ஈழம்) கிழக்கு மாகாணம் அம்பாறை பொத்துவில் கரையோரப் பிரதேசத்தில் இலங்கை ஒற்றை ஆட்சி அரசினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை மற்றும் அதனை அண்மித்துக் காணப்படும் புராதன சின்னங்களை இலங்கை நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் பார்வையிட்டுள்ளார். இது பௌத்த பூமி என்று கூறிய அத்துரலியே ரத்தன தேரர், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பௌத்த சமயத்தைப் புறக்கணித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தினார். நேற்று வெள்ளிக்கிழமை அம்பாறைக்குச் சென்ற தேரர், எழுபத்தியிரண்டு ஏக்கர் காணி பௌத்த விகாரைக்காக அடையாளம் காணப்பட்டிருந்தது என்றும் ஆனால் தற்போது 14 ஏக்கர் காணி மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஓகஸ்ட் 30 22:04

வெளிநாட்டுத் தூதரகங்களில் மகஜர் கையளிப்பு- மைத்திரி- ரணில் மீது குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையெனக் கண்டித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களிடம் மனித உரிமைச் செயற்பாட்டாளர் பிற்றோ பெர்ணாண்டோ மகஜர் கையளித்துள்ளார். காணாமல் போனோரை நினைவு கூரும் சர்வதேச நாளான இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதரகங்களில் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து, இன்று பத்து ஆண்டுகள் சென்றுவிட்ட பின்னரான சூழலிலும் இலங்கை அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அக்கறையீனமாகச் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஓகஸ்ட் 30 14:39

சர்வதேச நீதி கோரி தாயகப் பிரதேசங்களில் போராட்டங்கள்

(கிளிநொச்சி. ஈழம்) காணாமல் ஆக்கப்பட்டோரை நினைவு கூரும் சர்வதேச நாளான இன்று வெள்ளிக்கிழமை இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் போராட்டங்களை நடத்தியுள்ளது. வவுனியா பன்றிக்கெய்த குளம் பிள்ளையார் ஆலயத்தில் காலை 10.30க்குத் தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்ட உறவினர் சங்கப் பிரதிநிதிகள், பின்னர் ஆலய முன்றலில் இருந்து ஓமந்தை இறம்பைக்குளம் வரை பேரணியாகச் சென்றனர். வடமாகாணத்தில் உள்ள பொது அமைப்புகள் அனைத்தும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டன. கிழக்கு மாகாணம் அம்பாறை கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்தில் பூசைகளுடன் ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பேரணி கல்முனை பிரதான வீதியூடாகக் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை சென்றது.
ஓகஸ்ட் 30 11:47

ரணிலுடன் 22 வெளிநாட்டுத் தூதுவர்கள் உரையாடல்

(வவுனியா, ஈழம்) இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகங்களின் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் இழுபறி நிலையை எதிர்நோக்கியுள்ளது. கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முடியாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார். இந்த நிலையில், கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்தித்துப் பேசியுள்ளனர். கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் ரவி கருணாநாயக்காவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இராப்போசன விருந்துபசாரம் ஒன்றில் இந்த உரையாடல் இடம்பெற்றது.
ஓகஸ்ட் 29 17:42

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவது தொடர்பாக ஆலோனை!

(வவுனியா, ஈழம்) இலங்கையில் தற்போது பிரதான அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஆலோசித்துள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அவருடைய கட்சித் தலைமைப் பதவிக்கும் ஆபத்தை விளைலிக்கக் கூடுமென கட்சி ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் சஜித் பிரேமதாசவுக்கு இடமில்லை என்பதில் உறுதியாக இருப்பதால் ஜனாதிபதித் தேர்தலையும் பிற்போட்டால் சற்று நிம்மதியாக இருக்குமென ரணில் விக்கிரமசிங்க ஆலோசிப்பதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஓகஸ்ட் 28 23:02

மீளக் குடியேறாத குடும்பங்களையும் வாக்காளர்களாகப் பதிவு செய்ய ஏற்பாடு

(மன்னார், ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான வட மாகாணத்தில் போரினால் இடம் பெயர்ந்து இதுவரை மீளக்குடியமர்த்தப்படாத குடும்பங்களையும் வாக்காளர்களாகப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்கழுவின் ஆலோசணைகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் குறிப்பிடத்தக்களவு மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டனர். எனினும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நிலக்கன்னி வெடி அகற்றப்படாமையினாலும் அவர்களின் சொந்தக் கிராமங்களை இலங்கைக் கடற்படையினரும், இராணுவத்தினரும் ஆக்கிரமித்துள்ளதாலும் மீளக் குடியேற்றப்படவில்லை.
ஓகஸ்ட் 28 14:04

காணிகளைக் கையளிக்குமாறு கோரி கிளிநொச்சி, முல்லைத்தீவில் போராட்டம்

(கிளிநொச்சி. ஈழம்) இலங்கைப் படையினரால் கிளிநொச்சி மாவட்டத்தில் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாகக் கையளிக்குமாறு வலியுறுத்தி இன்று புதன்கிழமை முற்பகல் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காலை 9.30க்கு கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக போராட்டம் ஆரம்பமாகிது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மாவட்டச் செயலகம் வரை பேரணியாகச் சென்றனர். 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இன்று வரையான பத்து ஆண்டுகள் சென்ற நிலையிலும் இலங்கை இராணுவம் காணிகளைக் முழுமையாகக் கையளிக்கவில்லையென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தினர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
ஓகஸ்ட் 27 22:50

ஜனாதிபதி பெயரளவில்- அதிகாரம் பிரதமருக்கே என்கிறார் மைத்திரி

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பாகத் தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியான பின்னரே வேட்பாளர் நியமனம் குறித்துப் பேசவுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். அங்கு விளக்கமளித்த மைத்திரிபால சிறிசேன 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பிரதமருக்கே அதிகளவு அதிகாரங்கள் உண்டு என்றும் அதனால் பிரதமர் பதவி தொடர்பாகவே முக்கியமாகப் பேச வேண்டும் எனவும் கூறினார்.
ஓகஸ்ட் 27 21:47

போராடிக் களைத்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப் பிரதிநிதிகள் பலர் உயிரிழப்பு

(கிளிநொச்சி. ஈழம்) இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பலர் தமது பிள்ளைகள், கணவன்மார் மீண்டும் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு போராடி எதுவிதமான பலன்களும் இன்றி மரணித்துள்ளதாக சங்கத்தின் பிரதிநிதிகள் கூறுகின்றனர். இதுவரை 48 முதல் ஐம்பது பேர்வரை உயிரிழந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அதேவேளை வேறு சிலர் விபத்துக்களுக்கு உள்ளாகி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை முல்லைத்தீவைச் சேர்ந்த தந்தை ஒருவர் கொழும்புக்குச் சென்று திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவருடைய மனைவி படுகாயமடைந்துள்ளார்.