செய்தி: நிரல்
செப். 10 23:07

சுயாட்சி வழங்க முடியாது. ஜே.பி.வி வேட்பாளர் கூறுகிறார்

(மட்டக்களப்பு, ஈழம்) வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு சமஸ்டித் தீர்வை வழங்க முடியாதென மக்கள் விடுதலை முன்னணியெனப்படும் ஜே.வி.பியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி என்ற இயக்கத்தில் அங்கம் வகிக்கும் பொது அமைப்புக்கள், சிறிய கட்சிகள மற்றும் கல்வியாளர்கள் எனப் பலர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று மக்களைச் சந்தித்து உரையாடியிருந்தனர். அதன்போது வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சி முறையை ஜே.வி.பி வழங்குமெனக் கூறியிருந்தனர். இதனால் அதன் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் கேட்டிருந்தனர்.
செப். 10 10:30

ரணில், சஜித் முரண்பாடு- ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின் கீழ்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் நேற்றுத் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானி இதழில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவே பதவி வகிக்கிறார். இந்த நிலையில் இலங்கை ஊடகத்துறை அமைச்சின் கீழ் இதுவரைகாலமும் செயற்பட்டு வந்த மூபவாஹினிக் கூட்டுத்தாபனம் திடீரெனப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை தொடர்பான காரணங்கள் எதுவுமே கூறப்படவில்லை.
செப். 09 22:06

சத்துருக்கொண்டான் படுகொலைகளுக்கு நீதிகோரிய மக்கள்

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி, கொக்குவில் போன்ற கிராமங்களில் இலங்கை இராணுவத்தினராலும் ஆயுதக்குழுக்களினாலும் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையின் 29 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. ஆண்கள். பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என நூற்றி 86 தமிழர்கள் அடித்தும் வெட்டியும் கொலை செய்யப்பட்டிருந்தனர். 1990 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. அதனை நினைவு கூர்ந்து சத்துருக்கொண்டான் சந்தியில் உள்ள நினைவுத் தூபியில் நிகழ்வுகள் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
செப். 09 18:38

நீர்பாசனத் திணைக்களக் கட்டடத்தில் இராணுவம்- விவசாயிகள் பாதிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு தரவை பகுதியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் விவசாய நீர்பாசனத் திணைக்களகத்திற்குச் சொந்தமான அலுவலகத்தைக் கையளிக்காமல் தங்கள் சொந்தத் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும் சிரமத்தின் மத்தியில் தமது சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாக விவசாய அமைப்புக்கள் தெரிவி்த்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான் கமநல நிலையத்திற்குரிய சுமார் 25 விவசாய அமைப்புக்களில் ஆயிரத்தி 500 விவசாயிகள் பயன்படுத்தும் விவசாய நீர்ப்பாசன திணைக்களகத்தின் அலுவலகக் கட்டடமே இராணுவ உயர் அதிகாரியின் தங்குமிடமாக பயன்படுத்தப்படுகின்றது.
செப். 09 14:57

சர்ச்சைக்குள்ளன ஆனந்த சங்கரி தனது காணிகளை மக்களிடம் பகிர்ந்தளித்தார்

(முல்லைத்தீவு, ஈழம்) முல்லைத்தீவு சுதந்திரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தனக்குச் சொந்தமான இருபது ஏக்கர் காணியை போரால் பாதிக்கப்பட்டுக் காணிகள் இல்லாத மக்களிற்குப் பகிர்ந்தளிக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி புதுக்குடியிருப்புப் பிரதேசச் செயலாளர் எம் பிரதீபன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்தின்போது கடுமையான எதிர் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளான ஆனந்த சங்கரி, இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினராகவும் நீண்டகாலம் பதவி வகித்திருந்தார். 2004 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தனியாகச் செயற்படுத்தி வரும் நிலையில் தனக்குச் சொந்தமான காணிகளைப் பகிர்ந்தளிக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
செப். 08 22:10

மைத்திரி- சஜித் தொலைபேசி உரையாடல்- ரணில் அதிருப்தி

(வவுனியா, ஈழம்) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளதாக அதன் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆறாம் திகதி வெள்ளிக்கிழமை அறிவித்த பின்னர் அதிருப்தியடைந்துள்ள கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச, மாற்று நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் கூட்டணியில் இணைந்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சஜித் போட்டியிடுவாரென ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் சஜித் பிரேமதாசாவுடன் உரையாடியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் அணியில் இணையுமாறு மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
செப். 07 23:05

ஈழத் தமிழர் மரபுரிமைக் கைத்தொழில் உற்பத்திகள்- கிளிநொச்சியில் கண்காட்சி

(கிளிநொச்சி, ஈழம் ) வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் போருக்குப் பின்னரான நிலையில், உள்ளூர் வளங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அதிகளவாகக் காணப்பட்டாலும் அவற்றை ஊக்குவிப்பதற்குப் போதிய ஏற்பாடுகள் இல்லையெனக் குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. வடமாகாண சபை 2013 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதன் முதலாக செயற்பட ஆரம்பித்ததும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. இலங்கை அரசாங்கமும் திட்டமிட்ட முறையில் வடக்குக்- கிழக்கு உற்பத்திப் பொருட்களை கொழும்புக்கும் வெளிநாடுகளுக்கும் கணிசமான அளவு ஏற்றுமதி செய்து வருகின்றது.
செப். 06 21:53

ரணில் வேட்பாளராக அறிவிப்பு- மைத்திரி- சஜித் புதிய அரசியல் கூட்டு?

(வவுனியா, ஈழம்) நடைபெறவுள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த அறிவிப்பை ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார். கட்சியில் இருந்து போட்டியிட வேறு மூத்த உறுப்பினர்கள் யாரும் சவால் விடுத்தால் அது குறித்து கட்சியின் மத்திய குழுவில் பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார். ஆனால் இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் சஜித் பிரேமதாசவின் கூட்டங்களுக்கு அதிகளவு மக்கள் வருவதால் அவரையே வேட்பாளராக நியமிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.
செப். 06 16:16

பூநகரி பல்லவராயன்கட்டுச் சோலைப் பிரதேச மக்களின் பரிதாபம்

(கிளிநொச்சி, ஈழம் ) வடமாகாணம் கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட பல்லவராயன்கட்டுச் சோலைக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வந்தனர். போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமது கிராமங்களில் மீள் குடியேறினர். ஆனால் பத்து வருடங்கள் சென்ற நிலையிலும் இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாக அவர்கள் முறையிட்டுள்ளனர். கொழும்பில் உள்ள இலங்கை அரச அதிகாரிகள் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருவதாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று ஒழுங்கு செய்த மக்கள் கருத்து கேட்கும் நிகழ்சியில் இவ்வாறு மக்கள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து வசதிகள் இல்லையெனவும் மக்கள் குறை கூறினர்.
செப். 06 13:30

வரட்சியால் கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடித் தொழில் பாதிப்பு

(கிளிநொச்சி, ஈழம் ) வடமாகாணத்தில் தொடர்ச்சியாக நிலவும் கடும் வரட்சியினால் விவசாயச் செய்கைகளும் நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகளும் பெரும் பாதிப்பை எதிர்நோக்குகின்றன. குறிப்பாகக் கிளிநொச்சியில் நிலவும் கடும் வரட்சியினால் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வரட்சி நிலை தொடருமானால் நன்னீர் மீன்பிடி முற்றாகப் பாதிக்கப்படுமென மீனவர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். கடந்தகாலங்களில் இவ்வாறு மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கடும் வரட்சி நிலவுவதால் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவக்குடும்பங்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மீனவர்கள் ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டவர்கள்.