நிரல்
ஒக். 14 16:37

கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு சிவில் அமைப்புகள் கண்டனம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பாகக் கேள்வி எழுப்பிக் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்த சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொட ஆகிய இருவருக்கும் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பாகத் தனிநபர்கள் 165 பேரும் 21 மனித உரிமை மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் கையெழுத்திட்டு ஊடக அறிக்கையொன்றை இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளன. நீதிமன்றத் தீர்ப்பில் குறித்த மனு ரத்துச் செய்யப்பட்டபோதும் மனுவைத் தாக்கல் செய்த இருவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
ஒக். 13 16:08

அம்பாறை மாவட்டத்தில் பதின்நான்கு தமிழ்க் கிராமங்கள் அழிப்பு

(கிளிநொச்சி. ஈழம்) கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியிருப்பதாக அகில இலங்கைப் பொது ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகப் பேசுவதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் முன் வருவதில்லை என்றும் அவர் கூறினார். அம்பாறை மாவட்டத்தில் பதின்நான்கு தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் லோகநாதன் கூறினார். கிளிநொச்சியில் நேற்றுச் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திற்கான அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இடம்பெற்றது. நிகழ்வின் நிறைவில் ஊடகங்களிற்கு அவர் கருத்து வெளியிட்டார்.
ஒக். 12 23:03

கொக்குவில் பிரம்படியில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களின் நினைவேந்தல்

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் திகதி செய்யப்பட்ட பின்னர் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அமைதிப்படை என்ற போர்வையில் வந்த இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் அதிகமான பொது மக்களைக் கொலை செய்த 32 ஆவது ஆண்டு நிறைவு இன்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. துப்பாக்கியால் சுட்டும், உயிருடன் வீதியிலும் ரயில் தண்டவாளத்திலும் குப்பறப் படுக்க வைத்துக் கவச வாகனங்களினால் நசித்தும் மக்கள் கொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்ட மக்களைப் பிரதேச மக்கள் இன்று நினைவு கூர்ந்தனர்.
ஒக். 12 15:35

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பேன்- நவசமாஜக் கட்சி வேட்பாளர் நந்திமித்திர

(மட்டக்களப்பு, ஈழம்) வடக்குக் கிழக்குப் பிரதேசங்கள் இணைக்கப்பட்ட சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் அதிகாரம் ஈழத் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அந்த உரிமையை தான் அங்கீகரிப்பேன் என்று நவசமாஜக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெத்தேகம நந்திமித்திர தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் இனவாதக் கருத்துக்கள் திட்டமிடப்பட்டு பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். எவ்வாறாயினும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் எனவும் காணி- பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டுமென்றும் பெத்தேகம நந்திமித்திர கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஒக். 11 22:40

எல்பிட்டியப் பிரதேச சபையை மகிந்த அணி கைப்பற்றியுள்ளது

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தென் பகுதியான காலி மாவட்டத்தில் உள்ள எல்பிட்டியப் பிரதேசச் சபையை மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜனப் பெரமுனக் கட்சி கைப்பற்றியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை தேர்தல் இடம்பெற்றது. முடிவுகள் இன்று இரவு வெளியாகின. முப்பத்து ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட எல்பிட்டியப் பிரதேச சபையை ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி இருபத்து மூவாயிரத்து 72 வாக்குகளைப் பொற்று 17 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஒக். 11 18:26

சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கத் தயாராக வேண்டும் - ஆய்வாளர் ஜோதிலிங்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தைப் பொது வேட்பாளராகக் கருதி மக்களை வாக்களிக்க வைப்பது குறித்து சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டுமென அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.ஆ. ஜோதிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். சிவாஜிலிங்கம் தொடர்பாக எதிர்மறைக் கருத்துக்கள் இருக்கின்றன. ஆனாலும் அது பற்றிய விமர்சனங்களைத் தற்போதைக்குக் கைவிட்டு சிவாஜிலிங்கத்தை ஒரு குறியீடாகக் கருதி வாக்களிப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும் என்றும் ஜோதிலிங்கம் கூறினார். சிங்களக் கட்சிகளின் இரு பிரதான வேட்பாளர்களையும் தமிழ் மக்கள் நம்பத் தயாராகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஒக். 11 10:01

சஜித் பிரேமதாசவின் உரையில் இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி எதுவுமேயில்லை

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றது. நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் பல இலட்சம் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சியின் மூத்த உறு;ப்பினர்கள் பலரும் கூட்டத்தில் உரையாற்றினர். வேட்பாளர் தெரிவின்போது சஜித் பிரேமதாசவுக்கு எதிராகச் செயற்பட்ட ரவி கருணாநாயக்க, சரத் பொன்சேகா உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக பெருந்திரளான மக்கள் வாகனங்களில் காலி வீதியூடாக காலி முகத்திடலை வந்தடைந்தனர்.
ஒக். 10 13:48

சர்வதேச உத்தரவாதமின்றி சிங்களப் பேரினவாதத் தலைவர்களோடு பேரம் பேச முடியாது- அனந்தி சசிதரன்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத்தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சி அரசு தொடுத்திருக்கும் போரின் வடிவம் காலத்துக்குக் காலம் மாறி வருகிறது. புதிய, புதிய வடிவங்களில் அந்தப் போர் தொடர்ந்து கொண்டிருப்பதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதற்கான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள இனவாத சக்திகளுக்குள்ளே ஒரு சிக்கலான போட்டியை சர்வதேசச் சக்திகள் தோற்றுவித்துள்ளன. எனவே, சிங்களத் தரப்புகளுடன் அல்ல, சர்வதேசத் தரப்புகளிடமே தமிழர்களின் பேரம்பேசும் அரசியலின் குறி இருக்கவேண்டும் என்கிறார் அனந்தி.
ஒக். 09 23:47

வெற்றியடைந்த மறு நாள் சிறையில் உள்ள இராணுவத்தினர் விடுவிக்கப்படுவர்- கோட்டா அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள், இராணுவச் சிப்பாய்கள் அனைவரையும் அடுத்த நாள் விடுதலை செய்யவுள்ளதாக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இன்று புதன்கிழமை தெரிவித்தார். அவருடைய முதலாவது தேர்தல் பிரச்சாரம் அனுராதபுரத்தில் இன்று மாலை இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் இலங்கை இராணுவத்தினரைப் பலப்படுத்தினார். ஆனால் 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கம், இலங்கை இராணுவத்தை சர்வதேச அரங்கில் காட்டிக்கொடுத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
ஒக். 09 10:10

கோட்டாபயவின் குடியுரிமைப் பிரச்சினை- மனுத் தாக்கல் செய்த இருவருக்கும் கொலை மிரட்டல்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமைச் சர்ச்சை தொடர்பாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த சட்டத்தரணி காமினி வியாங்கொட, (Gamini Viyangoda) பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர (Prof. Chandraguptha Thenuwara) ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜகபக்சவுக்கு எதிராக எழுத்தாணை மனுத்தாக்கல் (Certiorari writ) செய்த இருவருக்கு எதிராகவும் சமூக ஊடகங்கள் மூலமாக அவதூறு விளைவிப்பதாகவும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காமினி வியாங்கொட, சந்ரகுப்த தேனுவர ஆகிய இருவரும் நேரடியாகச் சென்று இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளனர்.