நிரல்
நவ. 07 10:02

எஸ்.பி.திஸாநாயக்காவுடன் வாக்குவாதப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு- இருவர் காயம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாகப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவின் மெய்ப்பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்து தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா கினிகத்தேனை பொல்பிட்டியப் பிரதேசத்தில் நேற்றுப் புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட பின்னர் சென்று கொண்டிருந்தபோது அவரது வாகனத்தைச் சிலர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
நவ. 06 18:43

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி துண்டுப் பிரசுரம்

(கிளிநொச்சி. ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்குக் கிழக்கு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி தமிழ் ஊடகவியலாளர்களினால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இன்று புதன்கிழமை கிளிநொச்சி, வவுனியா. மன்னார் ஆகிய பிரதேசங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் போராட்டம் இடம்பெற்றது. யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் பலர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியில் இருந்து இன்று வரை நீதியான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று தமிழ் ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தினர். கடந்த முப்பது வருடங்களாக தமிழ் ஊடகத்துறை பல்வேறு அச்சுறுத்தல்களையும் நெருக்குவாரங்களையும் எதிர்கொண்டு வருகின்றது.
நவ. 06 10:52

மூத்த பத்திரிகையாளர் பெருமாள் காலமானார்- ஊடகவியலாளர்கள் உட்படப் பலரும் அஞ்சலி

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழ் இதழியல் துறையின் மூத்த பத்திரிகையாளர் சின்னக்கண்ணு பெருமாள் எண்பத்து ஆறாவது வயதில் நேற்றுச் செய்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். இலங்கைத் தீவின் இரத்தினபுரியில் 1933 ஆம் ஆண்டு பிறந்த பெருமாள், கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராகத் தனது பத்திரிகைத்துறையை ஆரம்பித்தார். மாணவராக இருந்தபோதே இதழியல்த் துறையில் ஆர்வம் கொண்ட பெருமாள், மாணவப் பருவத்திலேயே பல ஆக்கங்களை வீரகேசரியில் எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் 1961 ஆம் ஆண்டு முதல் உதவி ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.
நவ. 06 10:15

மூன்று கட்டப் போரை நடத்தியது நானே- சந்திரிகா கூறுகிறார்

(வவுனியா, ஈழம்) சஜித் பிரேமதாச சிறந்ததொரு வேட்பாளர் அவருக்கு வாக்களித்துப் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மக்களின் பிரதான கடமை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் மாநாடு நேற்றுச் செய்வாய்க்கிழமை கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் இடம்பெற்றது. அங்கு தலைமையுரையாற்றிய சந்திரிகா ராஜபக்ச குடும்பத்திடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியில் இணைந்துள்ள உறுப்பினர்கள் அனைவருமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்தான். அவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
நவ. 05 22:24

தமிழரசுக் கட்சியின் முடிவில் பங்காளிக் கட்சிகள் அதிருப்தி

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களில் எவரை ஆதரிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் குழப்பமான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றன. தமிழரசுக் கட்சி தனித்து முடிவெடுத்துள்ளது என்றும் ஐந்து கட்சிகளின் பதின்மூன்று அம்சக் கோரிக்கைகளை கைவிட்டு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகவும் ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவை ஏற்க முடியாதென ஈபிஆர்எல்எப் இயக்கத்தின் செயலாளர் சுரேஸ் பிரேமச் சந்திரன் கூறியுள்ளார். எந்த வேட்பாளரையும் ஆதரிக்கும்படி கோர முடியாதென்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
நவ. 04 22:50

ஏமாற்றிய தமிழரசுக் கட்சி- சிவாஜிலிங்கம் கண்டனம்

(கிளிநொச்சி. ஈழம்) பதின்மூன்று அம்சக் கோரிக்கையை கைவிட்டுத் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்தமை தமிழ் மக்களுக்கும் யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பச்சைத் துரோகம் செய்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ம.க.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் நீண்ட விளக்கமளித்த சிவாஜிலிங்கம், பிரதான சிங்களக் கட்சிகளின் இரண்டு வேட்பாளர்களையும் கடுமையாக விமர்சித்தார். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களைக் கொலை செய்த கோட்டாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுகின்றார்.
நவ. 04 22:00

முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்- மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் போராட்டம்

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் பலர் கலந்துகொண்டு எதிர்ப்பு வெளியிட்டனர். ஊடகவியலாளர்கள் அனைவரும் கறுப்புப் பட்டியணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள ஜனாதிபதி வேட்பாளர் கிஸ்புல்லாவின் அலுவலகத்திற்குச் சென்ற ஊடகவியலாளர் முகமட் சஜி தாக்கப்பட்டிருந்தார்.
நவ. 03 17:46

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு- தமிழரசுக் கட்சி தீர்மானம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதென சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்குத் தமது பூரணமான ஆதரவை வழங்குவதற்குத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவு, வவுனியாவில் உள்ள கட்சியின் கிளை அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
நவ. 03 14:37

சஜித் இல்லாத நிலையில் அரசியல் தீர்வு பற்றிப் பேசுகிறார் ரணில்

(கிளிநொச்சி. ஈழம்) சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவதோடு இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து குறைந்தது நூற்றி 20 உறுப்பினர்களைத் தெரிவு செய்தால் நிரந்த அரசியல் தீர்வு கிடைக்குமெனக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சிப் பொதுச் சந்தை மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்தன, ஹரிசன்,விஜயகலா மகேஸ்வரன் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். ஆனால் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்குகொள்ளவில்லை.
நவ. 02 20:38

சஜித், கோட்டா குறித்து விசாரணை செய்யும் இந்தியப் புலனாய்வு- சிங்கள வார இதழ் தகவல்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான சிங்கள அரசியல் கட்சியின் இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்கள் குறித்து இந்திய உளவுப் பிரிவான றோ பல்வேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் திவயின வார இதழில் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பற்றியே இந்திய உளவுப் பிரிவான றோ விசாரணை செய்து வருவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. திவயினப் பத்திரிகையின் ஞாயிறு வார இதழ் இன்று சனிக்கிழமை வெளியாகியுள்ளது. அந்த வார இதழ் குறித்த விடத்தை தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்துள்ளது.