நிரல்
பெப். 14 10:59

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள் மீட்பு

(முல்லைத்தீவு, ஈழம் ) தமிழர் தாயகம் வடமாகாணம் முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வியாழக்கிழமையும் மேலதிக அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகவே அகழ்வுப் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. வைத்தியசாலை வளாகத்தில் புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான துப்பரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே மனித எச்சங்கள் புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. உடனடியாக மாங்குளம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுச் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் வருகை தந்து பார்வையிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமையும் அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன.
பெப். 13 23:05

ஒற்றையாட்சியைப் பலப்படுத்தும் முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும்போது இலங்கை அரசின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பௌத்த பிக்குமாரை உள்ளடக்கிய யுத்துகம என்ற சிங்கள அமைப்பு ஒன்று இந்த அறிக்கையைத் தயாரித்துக் கையளித்துள்ளது. பலமானதொரு அரசு- எமது அரசியல் யாப்புக்கான முன்மொழிவுகள் என்ற கருப்பொருளில் குறித்த பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு அறிக்கையாகக் கையளிக்கப்பட்டுள்ளன. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சிறப்பு நிகழ்விலேயே இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
பெப். 13 14:16

பௌத்த தேசியவாதக் கட்டமைப்பு அரசாங்கத்தை நிறுவும் முயற்சியில் கோட்டா

(வவுனியா, ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் விலகப் போவதில்லையென கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவன்ச கூறியுள்ளார். புதிய அரசியல் அணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கட்சியின் யானை சின்னத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமெனவும் அவர் கொழும்பில் நேற்று்ச் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறியுள்ளார். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் இதனால் ஏனைய சிறிய கட்சிகளுடன் இணைந்து புதிய அரசியல் அணி ஒன்று விரைவில் உருவாக்கப்படுமெனவும் சஜித் பிரேமதாசவுக்கு நெருக்கமான உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
பெப். 12 12:53

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள்- சம்பவ இடத்தைப் பார்வையிட்டார் நீதிபதி

(முல்லைத்தீவு, ஈழம் ) தமிழர் தாயகம் வடமாகாணம் முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலை வளாகத்தில் புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான துப்பரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பணியாளர்கள் கூறுகின்றனர். உடனடியாக மாங்குளம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுச் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் வருகை தந்து பார்வையிட்டுள்ளார். நீதிபதியின் உத்தரவுக்கு அமைவாக தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன. வைத்தியசாலை வளாகத்தில் ஏற்கனவே கண்ணிவெடிகள் இருப்பதாகத் தெரிவித்து மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களினால் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
பெப். 11 23:17

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மரணச் சான்றிதழ்- கொழும்பில் ஆர்ப்பாட்டம்

(வவுனியா, ஈழம்) இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் சரணடைந்தும் கையளிக்கப்பட்டும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் எவ்வாறு மரணச் சான்றிதழ் வழங்க முடியுமென சமவுரிமை இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. போரின் போதும் அதன் பின்னரான சூழலிலும் காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சமீபத்தில் கூறியிருந்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்ட சமவுரிமை இயக்கம், ஜனாதிபதி அவ்வாறு கூறியதை ஏற்க முடியாதென்றும் தெரிவித்துள்ளது.
பெப். 10 21:03

விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி கொள்கைக்கானதாகத் தெரியவில்லை- ஜோதிலிங்கம்

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கொள்கையோடு செயற்படுகின்றதா அல்லது இது ஒரு தேர்தல்கால கூட்டா என்பது தொடர்பாக பொறுத்திருந்தே அவதானிக்க வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தக் கூட்டணியில் இணைந்துள்ள சுரேஸ் பிரேமச் சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கட்சியைத் தவிர ஏனைய கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு பெருமளவில் இல்லை என்றும் வெறுமனே உதிரிக் கட்சிகள் எனவும் அவதானிகள் கூறுகின்றனர்.
பெப். 09 23:16

விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி சமகால பூகோள அரசியலைக் கருத்தில் கொண்டதா?

(யாழ்ப்பாணம், ஈழம்) வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. காலை 9.30க்கும் 11.30 க்கும் இடையிலான சுப நேரத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணி ,ஈபிஆர்.எல்.எப், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசியக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச் சந்திரன், சிறிகாந்தா, அனந்தி சசிதரன் ஆகியோர் தத்தமது கட்சிகள் சார்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
பெப். 08 22:35

இலங்கையின் ஒற்றையாட்சி மாறாது- டில்லியில் மகிந்த ராஜபக்ச

(யாழ்ப்பாணம், ஈழம்) கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய புதிய அரசாங்கம் இந்திய மத்திய அரசுடன் பொருளாதார உடன்படிக்கைகள். நிதியுதவிகள் குறித்துப் பேச்சு நடத்தி வருகின்றது. இந்தோ பசுபிக் பிராந்திய நலன் அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு அமைவாக இலங்கையுடனான உறவுகளைப் பேணும் புதிய அணுகுமுறைகளின் வெளிப்பாடாகவே கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனால் சென்ற நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்று முதன் முறையாக இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்தார் கோட்டாபய ராஜபக்ச. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவும் நான்கு நாள் பயணமாக சென்ற வெள்ளிக்கிழமை இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.
பெப். 07 23:13

மகிந்த இந்தியா பயணம்- நாளை மோடியுடன் சந்திப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நான்கு நாள் பயணமாக இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இந்தியாவுக்குச் சென்றுள்ளார். பிரதமராகப் பதவியேற்று முதன் முதலாக இந்தியாவுக்குச் சென்ற மகிந்த புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட இந்திய உயர் அதிகாரிகள் பலரைச் சந்திக்கவுள்ளார். புதுடில்லி விமானநிலையத்தில் மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சஞ்சய் தோட்ரே மகிந்த ராஜபக்சவை பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். நாளை வெள்ளிக்கிழமை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்திக்கும் ராஜபக்ச, நண்பகல் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார்.
பெப். 07 21:38

மகாவலி அபிவிருத்திக்காகச் சிங்களக் குடியேற்றம் இல்லையென மகிந்த கூறியமை பொய்யான தகவல்

(முல்லைத்தீவு, ஈழம் ) வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் தமிழ்ப் பிரதேசங்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள் இலங்கை அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச இலங்கை நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் வெளிப்படையாகவே காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதை மகிந்த ராஜபக்ச எவ்வாறு நாடாளுமன்றத்தில் மறுத்துரைத்தார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். முல்லைத்தீவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரவிகரன் விளக்கமளித்தார்.