செய்தி: நிரல்
செப். 26 23:09

அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பற்கேற்றனர்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை இலங்கை ஒற்றையாட்சி அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ்தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை நான்கு மணி வரை இடம்பெற்றது. இலங்கைப் படையினரின் பெரும் நெருக்குவாரங்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இடம்பெற்ற போராட்டத்தில் நூற்றுக்கனக்கான மக்கள் கலந்துகொண்டனர். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
செப். 23 22:43

மன்னாரில் மன்னர்கால நாணயக் குற்றிகள் மீட்பு

(மன்னார்,ஈழம் ) ஈழத் தமிழர்களின் தாயகமான மன்னார் − நானாட்டான் பிரதேசத்தில் இருந்து மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட சுமார் 1904 நாணயக் குற்றிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட நாணயக் குற்றிகள் பாண்டிய மன்னர்களின் காலத்திற்கு சொந்தமானவையாக இருக்கலாம் மன்னார் செயலக தமிழ்த் தொல்லியல் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வடக்கு வீதியிலேயே மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் மற்றும் சட்டி, பாணை, ஓட்டுத் துண்டு போன்ற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செப். 23 22:03

கொழும்பில் தமிழ் இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் படையினரால் வடக்குக் கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் பல தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக போர்க்காலத்தின்போது கொழும்பில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட பதினொருபேர் வெள்ளைவானில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றது வருகின்றது. இந்த நிலையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசாரணையின்போது எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இநத வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி ரங்க திஸாநாயக்கா இடமாற்றம் செய்யப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செப். 22 21:56

20ஆவது திருத்தச் சட்ட நகல் வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நகல் புதிய வரைபு தொடர்பாக அரசாங்கத்தரப்புக்குள்ளேயே கருத்து மோதல்கள் உருவாகியிருந்தன. ஆனாலும் நீதியமைச்சர் அலி சப்ரி அந்த நகல் வரைபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவுடன் சமர்ப்பித்தார். தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியில் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு இன்று காலை சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டது. அதேவேளை குறித்த நகல் வரைப்பு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டுமெனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செப். 14 23:18

ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு ஏற்பட்டுள்ள தடுமாற்றம்

(வவுனியா, ஈழம்) ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வுகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில். தமிழ்க் கட்சிகள் எந்தவொரு கருத்து வெளிப்பாடுகளுமின்றி அமைதியாக இருக்கின்றன. கோட்டாபய ராஜபக்ச. மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் ஜெனீவாவின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இருந்து வெளியேறிய நிலையில், செப்பெரம்பர் மாத அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறவள்ள அமர்வில் இலங்கை பற்றி மீளாய்வு செய்யப்படுமா இல்லையா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
செப். 13 21:52

மனித உரிமைச் சபையில் இம்முறை இலங்கை விவகாரம் இல்லை?

(வவுனியா, ஈழம்) நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் இம்முறை இலங்கை பற்றிய விவகாரம் இல்லையெனத் தெரிய வருகின்றது. 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள கூட்டத் தொடர் ஒக்ரோபர் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெறுமென நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டுள்ளது. மியன்மார், யேர்மன், கம்போடியா, கொங்கோ வெனிசுலா சிரியா தென்சூடான் ஆகிய நாடுகளின் விவகாரங்களும் மற்றும் மரண் தன்டனைச் சட்டங்கள் பற்றிய விவகாரங்களோடு நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய விடயங்களுமே நிகழ்ச்சி நிரலில் குறிக்கப்பட்டுள்ளன. செப்ரெம்பர் மாதம் நடைபெறும் அமர்வில் இலங்கை தொடர்பாக மீளாய்வு செய்யப்படுவது வழமை. ஆனால் இம்முறை நிகழ்ச்சி நிரலில் மீளாய்வு பற்றிய விடயங்கள் எதுவுமே இல்லை.
ஓகஸ்ட் 27 22:40

தமிழர் தேசம் ஒன்றுகூடியே தமிழ்ப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்கு வருகின்றனர்- கஜேந்திரன்

(வவுனியா, ஈழம்) தொடர்ச்சியான கால இழுத்தடிப்புக்கள் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச் செய்ய முடியாதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அபிவிருத்தியும், அரசியல் தீர்வும் பொறுப்புக்கூறலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்ற நிலையில் அபிவிருத்தியை மட்டும் காட்டி மற்றவையை மழுங்கடிக்க முடியாது எனவும் அவர் கூறினார். 2004ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்திருந்த கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார். 2010இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆரம்பித்து, முன்னணியின் சார்பில் முதன் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்.
ஓகஸ்ட் 05 23:26

வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதியில் கூடுதல் வாக்குப் பதிவு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பில் 25 தேர்தல் மாவட்டங்களிலும் 71 சதவீத வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 83 சதவீத வாக்களிப்பு பதிவாகியிருந்தது. 2015ஆம் ஆண்டு நடபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 76சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இன்று புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் கொழும்பு மாவட்ட தேர்தல் தொகுதியில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் கடந்த 2105ஆம் ஆண்டு தேர்தலில் 78.93% வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆகவே இந்த ஆண்டு கொழும்பில் வாக்களிப்பு வீதம் குறைவாகும்.
ஓகஸ்ட் 04 22:12

வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் பொய்யான பிரச்சாரங்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) புதன்கிழமை நடைபெறவள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63ஆயிரத்து 885பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 25 தேர்தல் மாவடடங்களிலும் உள்ள 12 ஆயிரத்து 774 தேர்தல் தொகுதிகளில் 12அயிரத்து 995வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொரோன வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 01 23:15

பிரச்சாரங்களில் அரச வளங்கள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) தேர்தல் பிரச்சாரங்களின்போது அரச ஊழியர்கள் வேட்பாளர்கள் பலருக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றமை. அரச சொத்துக்கள், அரச வளங்கள் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் ரட்ன்ஸ்பரன்ஸி இன்ரர் நஷனல் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. 150 முறைப்பாடுகளில் 137 முறைப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவையனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் ட்ரான்ஸ்பரன்சி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்கா ஒபயசேகர தெரிவித்துள்ளார். அரச உயர் அதிகாரிகளின் உத்தரவோடு அரச வாகனங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.