நிரல்
பெப். 18 16:19

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டுக்கரைக் குளத்தை மீட்குமாறு கோரிக்கை

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகமான வடமாகாணம் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டுக்கரைக்குளம் மேய்ச்சல் நிலத்தை மீட்பதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி கோரிக்கை விடுத்துள்ளார். முருங்கன் கட்டுக்கரைக்குளத்தின் உட்பகுதியில் உள்ள புல் அறுத்தான் கண்டல், கருக்காக்குளம், கட்டைக்காடு ஆகிய நானாட்டான் பகுதி மக்களின் கால்நடை மேய்ச்சல் நிலங்களே இவ்விதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீட்டுத்தருமாறு அவர் தெரிவித்துள்ளார்.
பெப். 17 10:11

முஸ்லிம் மாணவர்களுக்காகப் புத்தளத்தில் அமைக்கப்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்திற்கு மாற்றம்

(வவுனியா, ஈழம்) தமிழர் தாயகமான வட மாகாணத்தில் வாழும் தமிழ்பேசும் முஸ்லிம் மாணவர்களுக்காகப் புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டு வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நிர்வாகிக்கப்பட்ட ஆறு பாடசாலைகளும் அதன் ஆளனியினரும் வட மேல் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு முற்றாக் கையளிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வித் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். மேற்படி பாடசாலைகளைப் புத்தளத்தில் புதிதாக அமைத்து அதனை சுமார் 15 வருடங்களுக்கு மேலாகப் பராமரித்ததிற்கு வட மாகாண கல்வி திணைக்களத்தினால் பல கோடி ரூபா பணம் செலவிடப்பட்டதாக அந்த உயர் அதிகாரி கூர்மைச் செய்தித் தளத்திற்குச் சுட்டிக்காட்டினார்.
பெப். 16 17:51

மனோ கணேசனிடம் இலங்கைப் பொலிஸார் வாக்குமூலம்

(மன்னார், ஈழம்) வடக்குக் கிழக்கில் இடம்பெற்ற நடைபவனிப் பேரணியில் கலந்துகொண்டதால் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார், விசாரணை நடத்தியதாக மனோ கணேசன் கூறினார். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் நேற்றுத் திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
பெப். 15 11:03

ஐ.நாவின் தோல்விக்கு இணைத் தலைமை நாடுகளே காரணம்

(யாழ்ப்பாணம், ஈழம்) நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றபோது இணைத்தலைமை நாடுகள் ஜப்பான் தலைநகர் ரோக்கியோவில் நடத்திய மாநாடுதான், விடுதலைப் புலிகள் பேச்சில் இருந்து வெளியேற்றப்படுவதற்குப் பிரதான காரணமாக இருந்தது. அந்த மாநாடுதான் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கும் வாய்ப்பாக இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கே சாதகமாகவும் இருந்தது என்பது வெளிப்படை. இவ்வாறானதொரு நிலையில், ஐக்கிய நாடுகள் முன்னாள் உதவிச் செயலாளர் சாரலஸ் பெட்ரி, இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபையை நம்ப வேண்டாமெனக் கூறுகின்றார்.
பெப். 13 21:55

அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள்- விமல் வீரவன்ச தலைமையில் 12 கட்சிகள் சந்திப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டுமென கூட்டணிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியதால் ஏற்பட்ட முரண்பாடுகள் நீடித்துச் செல்வதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
பெப். 12 15:15

சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாகக் கூறுகிறார் பேராயர் மல்க்கம் ரஞ்சித்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை கத்தோலிக்கத் திருச்சபையின் வடக்குக் கிழக்கு ஆயர்கள், அருட்தந்தையா்கள் ஆதரித்தும் பங்குபற்றியும் வந்திருக்கின்றனர். இதனால் அருட்தந்தையர்கள் பலர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் கைது செய்யப்பட்டுமிருந்தனர். ஆனால் அப்போதெல்லாம் பேராயர்கள் இலங்கை அரசாங்கத்தை கண்டித்திருந்தாலும் உரிய முறையில் அழுத்தம் கொடுத்திருக்கவில்லை. 1985 ஆம் ஆண்டு மன்னாரில் அருட்தந்தை மேரி பஸ்த்தியன் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தாா். 1999 ஆம் ஆண்டு மடு தேவாலயம் மீது விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு நூற்றுக்கும் அதிகமானேர் உடல் சிதறிப் பலியாகியிருந்தனர்.
பெப். 12 09:37

மன்னார் மாந்தை வடக்கில் புதிய பிரதேச செயலகம்

(மன்னார், ஈழம்) தமிழ் மக்களின் பூர்விகப் பகுதியான வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் மாந்தை வடக்கு எனும் புதிய பிரதேசச் செயலகப் பிரிவை உருவாக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம், மாந்தை மேற்கு, நானாட்டான், மடு, முசலி எனும் ஐந்து பிரதேசச் செயலகப் பிரிவுகள் இயங்கி வரும் நிலையில் மாந்தை வடக்கு எனும் ஆறாவது புதிய செயலகப் பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான நடவடிக்கைகளே துரித கதியில் முன்னெடுக்கப்படுவதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
பெப். 10 19:03

விமல் வீரவன்ச மகிந்த ராஜபக்சவை தலைமைப் பதவியில் இருந்து மாற்ற வேண்டுமென்கிறார்

(யாழ்ப்பாணம், ஈழம்) சிறிலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் எதுவும் இல்லையென அமைச்சர் டொன்ஸ்ரன் பெர்ணான்டோ தெரிவித்தார். சிறிலங்கா பொது ஜனப் பெரமுனக் கட்சியில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியோடு கருத்து வேறுபாடுகள் இல்லை எனவும் விமல் வீரவன்ச கூறிய தனிப்பட்ட கருத்துக்கள் அரசாங்கத்துக்குள் பிரச்சனைகளை உருவாக்கவில்லையெனவும் அமைச்சர் டொன்ஸ்ரன் கூறினார்.
பெப். 08 22:56

மன்னார் கரையோர பிரதேசங்களில் கனிய வளங்கள் அபகரிப்பு- அவுஸ்திரேலிய நிறுவனம் மீது குற்றச்சாட்டு

(மன்னார், ஈழம் ) வடமாகாணம் தமிழர் தாயகப் பகுதியான மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் அவுஸ்திரேலிய நிறுவனமொன்று எவ்வித அனுமதியுமின்றி கடந்த நான்கு வருடங்களாக இல்மைனைட் மற்றும் டைட்டானியம் ஆகிய கனியவளம் தொடர்பாக மேற்கொண்ட இரகசிய அகழ்வாராய்ச்சி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதால் இலங்கை ஒற்றையாட்சி அரசு மறைமுகமாக அனுமதி வழங்கி, ஈழத்தமிழர்களுக்குச் சொந்தமான வளங்களை இரகசியமாக விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கனியவள அபகரிப்புத் தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் ஜூட் கொன்சால் குலாஸ் மக்கள் சார்பில் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தகவல் வழங்கியுள்ளார்.
பெப். 07 22:32

சுயநிர்ணய உரிமையைக் கோரி சிவில் சமூக அமைப்பு பொலிகண்டியில் பிரகடனம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத்தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றம்;, புத்தர் சிலை வைத்தல் உள்ளிட்ட அடக்கு முறைக்கு எதிராக நடத்தப்பட்ட நடைபவனிப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிகண்டிப் பிரதேசத்தில் முடிவடைந்தது. கிழக்கு மாகாணத்தில் உள்ள பொத்துவில் பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை இந்தப் நடைபவனிப் பேரணி ஆரம்பித்தது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்று பெயரிடப்பட்டு, ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை ஒற்றையாட்சி அரசின் கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலான அடக்குமுறைகள் வெளிப்படுத்தப்பட்டன.