நிரல்
மார்ச் 10 09:28

மன்னார் மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது- பலருக்குக் கொரோனா

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் சுகாதார அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பஸார் பகுதியில் உள்ள மீன் சந்தை நேற்றுச் செவ்வாய் காலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மன்னார் பஸார் பகுதியில் உள்ள குறித்த மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் சௌத்பார் சாந்திபுரத்தைச் சேர்ந்த 51 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 5ம் திகதி இரவு மன்னாரில் புகையிரதம் மோதி உயிரிழந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த அவரின் சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பீ. சீ. ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.
மார்ச் 09 13:52

சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிராக ஏழாவது நாளாகவும் போராட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) கொரோனாவினால் மரணமடைபவர்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஏழாவது நாளாக முன்னெடுக்கப்படுவதாக முழங்காவில் பங்குத் தந்தை வண.பிதா மடுத்தீன் பத்திநாதன் சற்று முன்னர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் கொரோனாச் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் அதன் தீர்மானத்தை ரத்துச் செய்து உத்தியோகபூர்வத் தகவலை வெளியிடும் வரை இரணைதீவு மக்கள் தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனப் பங்குத்தந்தை வண.பிதா மடுத்தீன் பத்திநாதன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
மார்ச் 08 19:17

முஸ்லிம்களின் மதராஸா நிலையங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் பொதுபல சேன இயக்கத்தைத் தடை செய்ய முடியாதென ராஜபக்ச அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அறிவித்துள்ளார். பௌத்த பிக்குமாரை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பொதுபலசேன இயக்கத்தைத் தடை செய்யுமாறு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரைக்கு அமைவாகவே பொதுபல சேனவைத் தடை செய்ய முடியாதென அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மார்ச் 07 13:24

உயிரிழந்த முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் இஸ்லாமிய முறைப்படி அடக்கம்

(மட்டக்களப்பு, ஈழம் ) பலத்த சர்ச்சைகள், பல இழுபறிகள் மற்றும் தொடர் போராட்டங்கள் நிபுணர்கள் பலரின் வாதப்பிரதி வாதங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்ந முஸ்லிம் ஜகுஸாக்கள் கிழக்கு மாகாணம் ஓட்டமாவடியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் காகித நகர் எனும் கிராமசேவையாளர் பிரிவில் மஜ்மா நகர் எனும் பகுதியில் உள்ள சூடுபத்தின சேனை எனும் பகுதியிலேயே மேற்படி ஐனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டதாகக் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
மார்ச் 06 21:27

தலை மன்னாரிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையில் உள்ள மணல் திட்டைகளை மீனவர்கள் பயன்படுத்தத் தடை

(வவுனியா, ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள தமிழ் மீனவக் கிராமமான தலை மன்னாரிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையில் உள்ள மணல் திட்டைகளை மீனவர்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாதென இலங்கை ஒற்றையாட்சி அரசின் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தடாலடியாகத் தெரிவித்துள்ளனர். ஏலவே மன்னார் மாவட்டத்தில் தமிழர்களுக்கு சொந்தமான பல ஏக்கர் காணிகளைச் சுவீகரித்துள்ள இலங்கை அரசின் வன ஜீவராசிகள் திணைக்களம் கடல் நடுவே உள்ள மணல் திட்டைகளைத் தற்பொழுது சொந்தம் கொண்டாடுவது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
மார்ச் 06 20:45

புதிய கட்சி ஒன்றை வடமாகாணத்தில் ஆரம்பிக்க அமெரிக்கா முயற்சி

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த விடயத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குச் சாதகமாகச் செயற்பட்டு வரும் அமெரிக்கா, வடமாகாணத்தில் தமிழரசுக் கட்சிக்கு ஈடாகப் பிறிதொரு கட்சியை உருவாக்க இரகசிய முயற்சி எடுத்ததாகக் கொழும்பில் இருந்து வெளிவரும் திவயின என்ற சிங்கள வாரஇதழ் இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காகக் கொழும்பில் இயங்கும் அமெரிக்காவின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் 500 மில்லியன் ரூபாய்களைச் செலவிட்டிருப்பதாகவும் திவயின வாரஇதழ் அம்பலப்படுத்தியுள்ளது. திவயின என்ற சிங்கள நாளேட்டின் ஞாயிறு வாரஇதழ் சனிக்கிழமை வெளியிடப்படுகின்றமை வழமையாகும்.
மார்ச் 05 09:23

இரணைதீவில் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கைத் தீவில் கொவிட் நோய் தொற்றினால் மரணமடைபவர்களை தமிழர் தாயகப் பிரதேசமான கிளிநொச்சி மாவட்டம் இரணைதீவிலேயே அடக்கம் செய்தல் வேண்டும் என்பதில் விடாப்பிடியாக உள்ள நிலையில் அதனை ஆட்சேபித்து இன்று வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாகவும் இரணைதீவு மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் கொவிட் காரணமாக இறப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான அமைச்சரவை தீர்மானமொன்றை கடந்த செவ்வாய் இலங்கை அரசாங்கம் எடுத்திருந்தது.
மார்ச் 04 12:02

வடமாகாண பாடசாலைகள் திட்டமிடப்பட்டுப் புறக்கணிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர்கள் வாழும் வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்திலும் பாரிய குறைபாடுகள் நிலவி வரும் நிலையில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆட்சி செய்யும் ஸ்ரீ லங்கா பொது ஜனபெரமுன அரசாங்கம் அதனை நிவர்த்தி செய்யப் பொருத்தமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் 12 கல்வி வலயங்கள் இயங்கி வரும் நிலையில் வகுப்பறை மற்றும் நிர்வாகக் கட்டிடங்கள் போதிய அளவு இல்லாததுடன் விஞ்ஞான ஆய்வு கூடங்கள் கணனி மற்றும் தகவல் தொடர்புத் தொழில் நுட்பவியல் பீடங்கள் போன்ற வசதிகளை அநேக பாடசாலைகளில் இலங்கை அரசாங்கம் இன்றுவரை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என வட மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
மார்ச் 03 12:43

காங்கேசன்துறையில் இருந்து இந்தியாவுக்குக் கப்பல் சேவை- யாழ் அரச அதிபர் தகவல்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் மக்களின் தாயக பூமியான வடமாகாணம் யாழ் காங்கேசன் துறையிலிருந்து இந்தியாவிற்கான பயணிகள் கப்பல் சேவையை இவ்வருட நடுப்பகுதியில் ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். இந்தியா பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து இலங்கையின் வட மாகாணம் காங்கேசன்துறை வரையான பயணிகள் கப்பல் போக்குவரத்தை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று இந்திய தலைநகர் புதுடில்லியில் கைச்சாத்திடப்பட்டது.
மார்ச் 02 16:45

இலங்கைப் படையினரைக் காப்பாற்றப் புதிய சட்டம்- பீரிஸ் அறிவிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள போலியான குற்றச்சாட்டுக்களில் இருந்து இலங்கைப் படையினரைக் காப்பாற்றப் புதிய சட்டங்களை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்திருக்கின்றார். முப்படையினரையும் காப்பாற்றக்கூடிய முறையில் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை உருவாக்கவுள்ளதாகவும் தற்போதைய நிலையில் போதிய சட்டங்கள் இல்லையென்றும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.