செய்தி: நிரல்
மார்ச் 29 22:37

திருநெல்வேலி பாற்பண்ணைக் கிராமம் முடக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகம் வடக்கின் யாழ் மாநகரில் கொரோனா தொற்று மிக தீவிரமாகப் பரவி வரும் நிலையில் திருநெல்வேலி பாற்பண்ணைக் கிராமம் அபாயப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் யாழ் கல்வி வலயத்திற்குள் உள்ள 104 பாடசாலைகளையும் இன்று திங்கள் தொடக்கம் ஒரு வாரத்திற்கு மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ் நகரில் நேற்றும் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நோய்த் தொற்று பரவாதிருக்க நகரின் வேறு சில பகுதிகளையும் இன்று திங்கள் கிழமை முடக்கும் அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் 29 16:55

குரங்குகளின் தொல்லைகளைத் தடுக்கத் துப்பாக்கிகள் கோரப்படுகின்றன

(கிளிநொச்சி, ஈழம்) குரங்குகளின் அட்டூழியத்தைத் தடுப்பதற்கு துப்பாக்கிகளைத் தந்து மக்களைப் பட்டினிச்சாவிலிருந்து காப்பாற்றுமாறு முல்லைத்தீவு மாவட்ட இணைத் தலைவர்களான வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர்களிடம் தான் வேண்டுகோள் விடுத்ததாகத் துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் அம்பலவாணர் அமிர்தலிங்கம் கூர்மைச் செய்தித்தளத்திற்கு தெரிவித்தார். கடந்த செவ்வாய் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் முல்லை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற வேளையே குறித்த கோரிக்கையைத் தான் முன்வைத்ததாகத் துணுக்காய் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
மார்ச் 27 07:35

யாழ் நகரின் சில பகுதிகள் முடக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் பகுதியான வட மாகாணம் யாழ் மாவட்டத்தில் சென்ற வியாழக்கிழமை கொரோனா நோய்த் தொற்றுடன் 77 பேர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் 27 புதிய நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ. கேதிஸ்வரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தீவிரமாகப் பரவிவரும் நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் குறித்த நோய் பரவல் ஏற்பட்டு வைத்தியர்கள் உட்பட பலர் கொரோனா நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
மார்ச் 27 06:54

தீர்மானத்தில் புவிசார் அரசியல் நோக்கம் மாத்திரமே என்கிறார் அனந்தி

(யாழ்ப்பாணம், ஈழம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடந்த செவ்வாய் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இன அழிப்பு தொடர்பிலான விடயங்கள் எதுவும் முன்வைக்கப்படாத நிலையில் அதனை வெற்றுப் பிரேரணையாகவே தான் கருதுவதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கட்சியின் தலைவியும் வட மாகாண சபையின் முன்னாள் பெண் அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் கூர்மை செய்தித்தளத்திற்கு தெரிவித்தார். சொந்தத் தேசத்திலேயே ஒரு இன அழிப்பிற்கு முகம் கொடுத்து நீண்ட நாட்களாக உரிய நீதி அதற்கு கிடைக்கப்பெறும் எனும் எதிர்பார்பில் இருந்த ஒரு இனத்தின் அபிலாசைகளும் மற்றும் எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் ஒட்டுமொத்தமாகத் தகர்த்தெறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மார்ச் 26 05:58

தமிழக மீனவர் 54 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகமான வடக்கு மாகாணக் கடற்பரப்பில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 54 இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று வியாழன் அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் கடந்த செவ்வாய் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரனைக்கு இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்காது நடுநிலைமை வகித்ததிற்கான இலங்கையின் பழிவாங்கும் நடவடிக்கையே தமது மீனவர்களின் குறித்த கைது என தமிழ் நாட்டு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.