செய்தி: நிரல்
ஏப். 10 20:56

கிளிநொச்சியில் 400 பேருக்கு மாத்திரமே வீடமைப்பு உதவி

(கிளிநொச்சி, ஈழம்) வடக்கு மாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் கடந்த மார்ச் மாதம் 400 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வீடுகளின் நிர்மாணப்பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திட்டப் பணிப்பாளர் கே. ஸ்ரீ பாஸ்கரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். போரினால் பாதிப்பிற்குள்ளான வீடற்ற மக்களுக்கு வழங்குவதற்கு 2500 இற்கும் அதிக வீடுகள் தற்போது கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையாக உள்ளதென அவர் கூர்மைச் செய்திக்கு மேலும் தெரிவித்தார்.
ஏப். 09 22:47

யாழ் நீதிமன்றத்தில் மணிவண்ணன் பிணையில் விடுதலை

(யாழ்ப்பாணம், ஈழம்) விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க முற்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று வெள்ளிக்கிழமை இரவு யாழ் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலேயே மணிவண்ணன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ் நகரில் மக்கள் பணிகளில் ஈடுபடுவதற்காக காவல் படை ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு புலிகளின் காவல்துறையினர் பயன்படுத்திய நீல நிற உடையை வழங்கினார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு இன்று அதிகாலை இரண்டு மணியளவில் யாழ் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஏப். 09 10:41

புலிக் கதைகூறி மணிவண்ணன் கைது செய்யப்பட்டாரா?

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோவினால் வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான மணிவண்ணன், வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை எட்டு மணியளவில் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடைகளை ஒத்ததாக இருந்தது என்ற குற்றச்சாட்டிலேயே மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப். 08 17:02

ஏமாற்றப்பட்ட இளைஞர், யுவதிகள் சிலாவத்துறையில் கைது

(மன்னார், ஈழம் ) தமிழர் தாயகத்தின் வட மாகாணம் மன்னார் மாவட்டம் சிலாவத்துறைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கனடா நாட்டிற்கு செல்ல முற்பட்டார்கள் எனும் சந்தேகத்தில் 2 முஸ்லிம் யுவதிகள் 3 தமிழ் யுவதிகள் மற்றும் சிறுமியொருவர் அடங்கலாக 15 பேரையும் அவர்களுக்கு உதவி புரிந்த 4 முற்சக்கர வண்டி சாரதிகளையும் இலங்கைப் பொலிஸார் கைது செய்து மன்னார் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். மாவட்ட நீதவான் பி. சிவக்குமார் சந்தேகநபர்கள் அனைவரையும் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
ஏப். 07 15:52

பாரம்பரியக் காணிகளை இலங்கை இராணுவம் தொடர்ந்து அபகரிக்க முடியாது- சிவாஜிலிங்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணம் மிருசுவில் எழுதுமட்டுவாழ் பகுதியில் இலங்கை இராணுவம் நிலைகொண்டுள்ள தனியார் காணியை நிரந்தரமாகவே சூறையாடும் நோக்கில் கடந்த திங்கள் மேற்கொள்ளப்பட்ட நில அளவை அப்பகுதி மக்களின் எதிர்ப்பு போராட்டத்தினால் கைவிடப்பட்டதாகவும் மீண்டும் அப்பகுதியை நில அளவை செய்ய இராணுவம் முற்பட்டால் மக்கள் அதற்கும் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பர் என யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். தமிழர்களின் பாரம்பரியக் காணிளை இராணுவம் அபகரிக்க அனுமதிக்க முடியாதென்றும் அவர் கூறினார்.