செய்தி: நிரல்
ஏப். 24 13:37

ரிஷாட் பதியுதீன் அதிகாலை கொழும்பில் திடீரெனக் கைது

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் முன்னாள் கைத்தொழில் வாணிப அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது இளைய சகோதரர் றியாஜ் பதியூதீன் ஆகியோர் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக இன்று சனிக்கிழமை அதிகாலை இலங்கை பொலிஸாரின் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டைச் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னாள் அமைச்சரை அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.
ஏப். 23 21:56

சிங்கள மீனவர்களை விடுவிப்பதுபோன்று, தமிழ் மீனவர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை

(மன்னார், ஈழம் ) இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதாகும் தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களை இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு துரிதமாக விடுதலை செய்யும் இலங்கை அரசாங்கம், இந்தியக் கடற்படையினரால் கைதாகும் வட மாகாண மீனவர்களின் விடுதலை தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை என வட மாகாணக் கடற்றொழில் இணையத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என். முகம்மது ஆலம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஏப். 23 06:01

வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு மிகுதிப் பணம் வழங்கப்படவில்லை

(யாழ்ப்பாணம், ஈழம்) வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரிவில், இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டிய மிகுதிப் பணத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலி.மேற்கு பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது. முன்னைய அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்தி நடவடிக்கைகளை அடுத்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டிய பெரும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் புறந்தள்ளி செயற்படுவதால் வலி.மேற்கில் 1039 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
ஏப். 19 22:51

சிறீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் மேலும் குழப்பங்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்ததாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. கூட்டத்தில் கலந்துகொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்பன்வில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் வெளியேறினர். இன்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் சுமார் மூன்று மணிநேரம் இடம்பெற்ற கூட்டத்தில் வாக்குவாதம் இடம்பெற்றது. மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஒரு அணியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்காக மற்றொரு அணியும் பிரிந்து வாக்குவாதப்பட்டதாகவும் மற்றுமொரு அணி பசில் ராஜபக்சவை ஆதரித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது.
ஏப். 18 19:34

மீனவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு உருக்கமான வேண்டுகோள்

(மன்னார், ஈழம் ) இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள புழல் சிறைச்சாலையில் கடந்த ஐந்து வாரங்களாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மீனவர்களான தமது கணவன்மார்கள் இருவரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் அதன் வெளிவிவகார அமைச்சரும் மேற்கொள்ள வேண்டுமென சிறையில் உள்ள மன்னார் மாவட்ட மீனவர்கள் இருவரின் மனைவிகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமாகாணம் மன்னார் மாவட்டம் பேசாலை எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களான 30 வயதுடைய அருண் பிரசானியா டலிமா மற்றும் 37 வயதுடைய றேகன் நிசாந்தினி மஸ்கிரிஞ்சே ஆகிய இரண்டு தமிழ் பெண்களே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.