நிரல்
ஓகஸ்ட் 27 20:28

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஏற்பாடு செய்யவும்- சுமந்திரன் அரசாங்கத்திடம் கோரிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) கொவிட் நோய்ப்பரவல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதும். மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற முறையில் சட்டத் திருத்தங்களைச் செய்து தயாராக இருக்க வேண்டுமெனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் நாளேட்டில் தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 26 21:04

மன்னாரில் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரம்

(மன்னார், ஈழம்) வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கொவிட் நோய்த் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் நிலையில் மாவட்டத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களில் 5 ஆயிரத்தி 626 பேர் தமது முதலாவது தடுப்பூசிகளைக் கூட பெற்றுக் கொள்ளாமல் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் கொவிட்-19 நோய்த் தொற்று தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த செவ்வாய்கிழமை காலை நடைபெற்றபொழுதே மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஓகஸ்ட் 25 23:12

பேரம்பேசி மரணத்தை மறைக்க முற்பட்ட பொலிஸ் அதிகாரி மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை

(மன்னார், ஈழம்) றிஸாத் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த சிறுமி காயங்களுக்கு உள்ளாகியவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்து சிறுமியின் குடும்பத்தினரிடம் பேரம் பேசிக் குறித்த விடயத்தை மறைக்க முயற்சித்த பொலிஸ் தலைமையகத்தில் பணிபுரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருக்கு (Chief Inspector) எதிராக இலங்கை பொலிஸ் மா அதிபரோ, பொலிஸ் திணைக்களமோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை குறித்து வெட்கித் தலை குனிய வேண்டும் எனப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப் பீரிஸ் கொழும்பு நீதிமன்றில் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 24 12:07

மன்னார் மடுப் பிரதேசத்தில் மரக் கடத்தல் அதிகரிப்பு

(மன்னார், ஈழம்) வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேசத்தின் பல பகுதிகளிலும் உள்ள வனப்பகுதிகளை இரவு வேளைகளில் ஆக்கிரமிக்கும் மரக் கடத்தல் கும்பல்கள் அங்கிருந்து சட்டவிரோதமாகக் காட்டு மரங்களை வெட்டி வேறு பிரதேசங்களுக்கு கடத்தி வருவதாக மாந்தை பிரதேச சபையின் தவிசாளர் இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
ஓகஸ்ட் 24 10:29

கொவிட் நோய்ப்பரவல் அதிகரிப்பு- மூன்று வாரங்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நீடிக்குமாறு கோரிக்கை

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் கொவிட் நோய்த்தாக்கம் மேலும் திரிபடைந்து செல்வதால் தினமும் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்குமெனவும் ஒரு மாதகாலம் வரை மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டுமெனவும் இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரையான 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கைச் சுகாதாரத் திணைக்களம் நேற்றுத் திங்கட்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 22 21:57

திருக்கேதீஸ்வரம் சிறுவர் இல்லத்தில் கொவிட் தொற்று

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வரம் சிறுவர் இல்லத்தில் கொவிட் தொற்றுக்கு உள்ளான 25 சிறுமிகளும் 2 சிறுவர் இல்ல மேற்பார்வையாளர்களும் தாராபுரம் துருக்கி சிட்டி கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்திற்கு மேலதிக பராமரிப்பிற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவிற்கான பொறுப்பதிகாரி வைத்திய நிபுணர் கதிர்காமநாதன் சுதாகர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் உள்ள சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளுக்கு கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக, அச்சிறுமிகள் மூவரும் அடம்பன் மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஓகஸ்ட் 22 09:24

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய இடமில்லாத அவலம்

(மன்னார், ஈழம்) இலங்கைத்தீவில் கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான பொருத்தமான இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினரும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் மேற்கொள்வதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தன. தற்போது இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் மஜ்மா நகரின் சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
ஓகஸ்ட் 21 22:29

கிளிநொச்சியில் பெயர் பலகையுமின்றித் திடீரென அமைக்கப்பட்ட காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகம்

(கிளிநொச்சி, ஈழம்) எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் திடீரென யாருக்குமே தெரியாமல், இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெயர் பலகைகூட இல்லாமல் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதெனவும், இது வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எஸ்.பீரிஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் இரகசியச் சந்திப்பின் ஊடாக வெளிப்பட்டுள்ள சதி நடவடிக்கை என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஓகஸ்ட் 20 21:29

முழுநேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்

(மன்னார், ஈழம்) இலங்கைத்தீவில் அதி தீவிரமாகப் பரவி வரும் கொவிட் -19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த இன்று 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. கன்டி மகாநாயக்கத் தேரர்கள், அரசாங்கத் தரப்புக் கட்சிகள், எதிர்க்கட்சிகள். இலங்கை மருத்துவர் சங்கம் உள்ளிட்ட சுகாதார சேவைச் சங்கங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கையை அடுத்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு முன்னதாக இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
ஓகஸ்ட் 19 21:54

கொழும்பு பிரதேசத்திற்குள் வரவேண்டாமென நகர முதல்வர் அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவின் தலைநகர் கொழும்பு நகருக்குள் வர வேண்டாமென கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்கா இன்று வியாழக்கிழமை அவசரமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். கொழும்பு மாவட்டத்திற்காவது முழுநேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தரப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் கோரியிருந்த நிலையில், இதுவரை அரசாங்கம் உரிய பதில் வழங்கவில்லை. இந்த நிலையிலேயே கொழும்பு நகருக்குள் வருவதை முற்றாகத் தவிர்க்குமாறு ரோசி சேனநாயக்கா வெளி மாவட்ட மக்களுக்கு அவசரமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.