செய்தி: நிரல்
நவ. 10 22:58

ஏனைய சமூகங்களைத் தாக்கவா ஒரே நாடு ஒரே சட்டம்

(வவுனியா, ஈழம்) சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் மீது தாக்குதல் நடத்தவா ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டதென ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை இடம்பெற்ற அமர்வின் ஆரம்பத்தில் இடம்பெற்ற உறுப்பினர்களுக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். 20 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்தியதால் இன்று இலங்கைத்தீவு பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகக் கூறிய அனுரகுமார திஸாநாயக்கா, ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரரின் தகுதி தொடர்பாகக் கேள்வி தொடுத்தார்.
நவ. 10 21:02

மன்னாரில் பல கிராமங்களுக்கு எச்சரிக்கை

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மத்திய மாகாணம் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மல்வத்த ஓயா ஆறு (அருவி ஆறு ) பெருக்கெடுத் துள்ளதால் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு நானாட்டான் மற்றும் முசலி ஆகிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்கச் செய்யும் வகையில் மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மேல் இப்பகுதி மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (RED ALERT) எனும் அபாய அறிவிப்பை விடுத்துள்ளார்.
நவ. 09 21:55

கடும் மழை, 15 பேர் பலி- வடமாகாணத்தில் பெரும் பாதிப்பு

(மன்னார், ஈழம்) இலங்கைத்தீவில் கடந்த தினங்களாகப் பெய்துவரும் கடும் அடை மழையினால் வெள்ளம், மின்னல், காற்றுடன் கூடிய காற்றினால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகப் பகுதியான மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் முற்றாக முழ்கியுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்துவரும் தொடர் அடைமழை காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிப்படைந்துள்ளது. அத்துடன் பல வீதிகளும் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது.
நவ. 08 22:09

அரசாங்கத்தைக் கண்டிக்கும் கருத்து- அருட்தந்தை சிறில் காமினியைக் கைது செய்ய ஏற்பாடு

(வவுனியா, ஈழம்) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்தைக் கண்டிக்கும் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில், கொழும்புப் பேராயர் இல்லத்தில் அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படவுள்ளதைக் கண்டித்துக் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை கொட்டும் மழையிலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் அருட் தந்தையர்கள், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
நவ. 07 19:36

மன்னாரில் கடும் மழை- 13 கிராமசேவகர் பிரிவுகள் நீரில் மூழ்கின

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் ஞாயிறு அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல்தீவு பகுதியின் மூன்று கிராமசேவையாளர் பிரிவுகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், இப்பகுதிகளில் உள்ள பல வீடுகளில் கடல் நீரும் உட்புகுந்துள்ளது. ஞாயிறு அதிகாலையில் பெய்த திடீர் மழை காரணமாக வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததினால் வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்று அதிகாலை பெய்த அடைமழை காரணமாக விடத்தல்தீவு மீனவர்கள் சிலரின் மீன்பிடிப்படகுகளும், மீன்பிடி வலைகளும் பாதிப்படைந்துள்ளது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
நவ. 05 18:42

சிறுவர்களைத் தாக்கும் கொவிட் 19

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் கொவிட் 19 நோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். சுகாதார விதிமுறைகளை பொது மக்கள் உரிய முறையில் பின்பற்றத் தவறுவதும் இதற்கு ஒரு காரணம் என்றும் மருத்துவர் தீபால் பெரேரா கூறினார்.
நவ. 04 18:52

மன்னாரில் ஐந்து நாட்கள் மழை

(மன்னார், ஈழம்) வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பொது மக்களின் வீடுகளிலும் மழை நீர் உட்புகுந்துள்ளதினால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மூர் வீதி, உப்புக்குளம், பள்ளிமுனை, சௌத்பார், பணங்கட்டுக்கொட்டு, எமில்நகர் மற்றும் தலைமன்னார் கிராமம், தலைமன்னார் பியர் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளதினால் பொது மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் இயல்பு வாழக்கையும், முற்றாக சீர்குழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நவ. 01 21:34

முரண்படும் அமைச்சர்கள் வெளியேறலாம்- காமினி லொக்குகே

(வவுனியா, ஈழம்) அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து கொண்டு முரண்படுவோர் எந்த நேரத்திலும் வெளியேறிச் செல்லலாமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான மூத்த அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதயகம்பன்வில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் ஊடக மாநாடுகள் நடத்தி நாடகமாடிக் கொண்டிருப்பதாகவும் இவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும், மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை அரசாங்கம் பெற்றுக் கொள்ளுமெனவும் அமைச்சர் காமினி லொக்குகே கூறினார்.
ஒக். 31 10:16

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கப்பட்டதை மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

(மன்னார், ஈழம்) மன்னார் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய தவிசாளர் நியமனம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு வட மாகாணம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்கால தடை உத்தரவை மேலும் நீடிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கடந்த 27ஆம் திகதி புதன்கிழமை மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சாகுல் ஹமீட் முகம்மது முஜாஹீர், வட மாகாண ஆளுநரினால் பதவி நீக்கப்பட்டமை தொடர்பாக, அவரினால் இலங்கை மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் வழக்கு விசாரணைகள் 27ஆம் திகதி நடைபெற்ற நிலையிலேயே மேல் முறையீட்டு நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து இடைக்காலத் தடை உத்தரவையும் நீக்கம் செய்துள்ளது.
ஒக். 29 19:05

மகிந்த முன்னிலையில் பங்காளிக் கட்சிகள் சந்திப்பு

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சிக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை மாலை திடீரென அழைப்பு விடுத்துள்ளார். நேற்று மாலை 5 30க்குச் சந்திப்பு நடைபெறுமென அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைவாகச் சுமார் நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாகக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.