செய்தி: நிரல்
நவ. 27 19:59

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் தாக்குதல்

(முல்லைத்தீவு) முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது இராணுவத்தினர் திட்டமிட்ட தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இன்று சனிக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் குறித்த ஊடகவியலாளர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளராகவும் லங்காசிறி ஊடகத்தின் பிராந்திய ஊடகவியலாளராகவும் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் கடமையாற்றுகின்றார். இன்று காலை பத்து மணிக்கு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நவ. 27 19:41

மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று சனிக்கிழமை மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. பெருந்திரளமான மக்களும் தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும் நிகழ்வுகளில் பங்கேற்றனர். இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மக்கள் துணிவோடு நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டனர். முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து,ரவிகரன் நந்திக்கடலில் மலர் தூவி வணக்கம் செலுத்தினார். யாழ் வல்வெட்டித்துறை, தேருவில்- ரேவடி கடற்கரைப் பகுதியில் படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சிவாஜிலிங்கம் வணக்க நிகழ்வுகளில் ஈடுபட்டார்.
நவ. 26 20:19

முல்லைத்தீவு பொலிஸாரின் நகர்த்தல் பத்திரம் நிராகரிப்பு

(முல்லைத்தீவு) இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும் இறந்தவர்கள் அவர் யாராக இருந்தாலும் அவரை நினைவு கூருவது மானிடப்பண்பு என்று குறிப்பிட்டு நேற்று வியாழக்கிழமை மற்றும் 17 ம் மற்றும் 23 ம் திகதிகளில் வழங்கிய மாவீரர் நிகழ்வு கொண்டாடுவதற்கு எதிரான கட்டளையை இறந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என்பதாக திருத்தியமைத்து கட்டளையாக்கியிருந்தார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா.
நவ. 25 09:04

அமெரிக்காவுக்கான புதிய தூதுவராக மகிந்த சமரசிங்க

(மட்டக்களப்பு, ஈழம்) அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக பொதுஜனப் பெரமுன கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மகிந்த சமரசிங்க பதவியேற்கவுள்ளார். தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு இன்று வியாழக்கிழமை அனுப்பிவித்த மகிந்த சமரசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் சந்தித்துள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
நவ. 24 14:36

13 ஐ ஏற்க முடியாதென கோட்டாபய சிங்கள எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளார்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு வலியுறுத்திச் சில தமிழ்த்தேசியக் கட்சிகள் கோரி வரும் நிலையில், 13 ஐ ஏற்றுக்கொள்ளமாட்டோம் என தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தரப்பு தமக்கு அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் மூத்த அரசியல்வாதியுமான லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தியுள்ளார். ஒரு புறம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமெனச் சொல்லிக் கொண்டு மறுபுறத்தில் 13 ஐ ஏற்க முடியாதெனக் கூறுவதாகவும் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்றுச் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற விவாதத்தில் அவர் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
நவ. 23 22:36

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை

(யாழ்ப்பாணம், ஈழம்) வட மாகாண மீனவர்கள் அண்மையில் ஏற்பட்ட சூறாவளி பாதிப்பு இயற்கை அனர்த்தம் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் தமது மீன்பிடி வள்ளங்கள் மீன்பிடி உபகரணங்கள் ஆகியன சேதமடைந்து பல பாதிப்புகளுக்கும் கடுமையான பொருளாதாரக் கஷ்டங்களுக்கும் தினசரி முகம் கொடுத்து வரும் நிலையில், அவர்களுக்கு இதுவரை ஒரு சதம் பணம் கூட நஷ்ட ஈடாக வழங்கப்படவில்லை என மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் என்.எம். ஆலம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
நவ. 23 22:28

வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் படையினர் குவிப்பு

(வவுனியா, ஈழம்) வட மாகாணத்தின் மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள் என்பதால், இலங்கைப் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் குறித்த ரோந்து நடவடிக்கைகளையும், சோதனை நடவடிக்கைகளையும் மேற்படி மாவட்டங்களில் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நவ. 22 08:08

முல்லைத்தீவில் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் வாரம் ஆரம்பம்

(முல்லைத்தீவு) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரகாவியமான வீரமறவர்கள் நினைவாக தாயகத்தில் மாத்திரமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்களால் அனுஸ்டிக்கப்படுகின்ற மாவீரர் நாளின் மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் முல்லைத்தீவில் மாவட்டத்தில் முப்படைகளாலும் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. வீதிகளில் இருந்த வீதி தடைகளுக்கு மேலதிகமாக வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு வீதி சோதனை நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மாவீரர் துயிலும்மில்ல வளாகங்களை சூழவும் இராணுவம் மற்றும் பொலிசார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நவ. 22 07:57

மன்னாரில் மாவீரர் நினைவேந்தலைத் தடுக்கும் பொலிஸாரின் மனு நிராகரிப்பு

(மன்னார், ஈழம்) மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் 20 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மன்னார் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் ஆலயங்களில் நடைபெறும் பூஜை வழிபாடுகள், திருப்பலிகள் மற்றும் மத அனுஷ்டானங்கள் ஆகியவற்றை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என இலங்கை பொலிஸார் முன்வைத்த வினோதக் கோரிக்கையை மன்னார் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மன்னார், சிலாவத்துறை, முருங்கன், இலுப்பைக்கடவை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் கடந்த வெள்ளியன்று நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட மேற்படி நூதனக் கோரிக்கையே, சட்டத்தரணிகளின் பலத்த ஆட்சேபணைகளை அடுத்து மன்னார் நீதிவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நவ. 20 20:56

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்க அரசாங்கம் ஏற்பாடு

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசினால் உருவாக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோர் உறிவினர் சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தொிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறினார். அயிரத்து 718 ஆவது நாளாக இன்று சனிக்கிழமை தொடர் போராட்டத்தை நடத்தி வரும் எநமு சங்கம் சர்வதேச சமூகத்துக்கு அவசியமான செய்தி ஒன்றை வழங்கவே இந்தச் செய்தியாளர் சந்திப்பை நடத்துவதாகக் கூறினார்.