செய்தி: நிரல்
ஜன. 07 07:59

மன்னாரில் கைதான இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு உத்தரவு

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்ட கடற்பரப்பில் கடற்படையினரால் கடந்த 19ஆம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 இந்திய மீனவர்கள் கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை மன்னார் நீதவான் பி. சிவக்குமார் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஞாயிறு பகல் தலைமன்னார் கடற்பரப்பில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து அங்கு மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப்படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் இந்திய ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை கைது செய்தனர். பின்னர் கைதான இந்திய மீனவர்கள் தாழ்வுபாடு கடற்படையினர் மூலமாக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.
ஜன. 04 22:01

கோட்டாபயவினால் அமைச்சர் ஒருவர் பதவி நீக்கப்பட மற்றுமொரு அமைச்சர் வரவேற்கிறார்

(வவுனியா, ஈழம்) இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேம ஜயந்த பதவி நீக்கப்பட்ட பின்னர். அமைச்சரவையில் உள்ள ஏனைய மூத்த அமைச்சர்கள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அந்த அதிருப்தியை இன்று செவ்வாய்க்கிழமை தனது கல்வி அமைச்சில் வைத்து செய்தியாளர்கள் முன்னிவையில் வெளிப்படுத்தினார். கல்வி மறுசீரமைப்பு திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு முன்னாள் இராஜாங்க அமைச்சராகப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இன்று பதவி விலக்கப்பட்டமை தொடர்பாகச் செய்தியாளர்கள் சிலர் கேள்வி தொடுத்தபோது பதிலளிக்க மறுத்த தினேஸ் குணவர்த்தன, ஆவேசமாகக் காணப்பட்டார்.
ஜன. 03 11:33

மன்னாரில் கொவிட் நோயாளி மரணம்

(மன்னார், ஈழம்) வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் இவ்வருடத்தின் முதலாவது கொவிட் - 19 மரணம் புத்தாண்டின் முதல் நாளான சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது. இவ்விதம் கொவிட் நோய்த் தொற்றினால் மரணமடைந்தவர் 70 வயதுடைய வயோதிபர் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மரணமடைந்த மேற்படி வயோதிபர் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், இவருக்கு ஏற்பட்ட சுகயீனம் கடந்த 30ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டவேளையில், மேற்கொள்ளப்பட்ட பீ. சி. ஆர். பரிசோதனையின் போது இவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை தெரிய வந்ததாகவும் அதிகாரி கூர்மை செய்தி தளத்திற்கு தெரிவித்தார்.
ஜன. 01 22:39

தேசியத்தை மட்டுமல்ல சுயநிர்ணய உரிமையையும் கைவிட்ட கடிதம்

(வவுனியா, ஈழம்) இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தை வலியுறுத்தி கடிதம் எழுதுமாறு கோரிய ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற கட்சியின் முன்னெடுப்பில் ஒன்றுகூட்டப்பட்டு இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக 2022 ஜனவரி முதலாம் திகதி இறுதிசெய்திருந்த கடித வரைபில் தமிழரசுக்கட்சியில் தமிழ்த்தேசியம் சார்ந்த பலருக்கு உடன்பாடு இல்லை என்று தெரியவருகிறது. இது தொடர்பாக நீண்டநேரம் புதுவருடநாளன்று விவாதித்த தமிழரசுக்கட்சியினர் தேசியத்தை ஏற்கனவே பெயரளவில் மட்டுமே கொண்டுள்ள தமது கூட்டமைப்பில் தற்போது உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதையும் கைவிட்டுச் செல்வது பொருத்தமில்லை என்று விவாதித்துள்ளதாக தமிழரசுக்கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் கூர்மைக்கு சனிக்கிழமை இரவு தெரிவித்தன.
டிச. 30 22:20

அரசியல் மற்றும் நிதி நெருக்கடி- மூன்று அமைச்சர்கள் பதவி விலகத் தயாரென அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை ஒருபோதும் மீறவில்லை என்றும் அமைச்சர் பதவிகளில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். அமைச்சரவையில் விவாதிக்க வேண்டிய விவகாரங்களை பொதுவெளியில் விமர்சிப்பது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடு என்று கூறுவதானால், அமைச்சரவையில் இரகசியமான தீர்மானங்களை மேற்கொள்வதும் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயல் என்றும் மூன்று அமைச்சர்களும் சுட்டிக்காட்டினர்.