நிரல்
மே 31 08:42

மன்னாரில் போதைப் பொருள் பயன்படுத்திய இருவர் மரணம்

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் பேசாலையில் இருந்து காரொன்றில் கொழும்பு நோக்கி பயணித்தவேளை அதிக அளவு போதைவஸ்தைப் பயன்படுத்திய இளம் குடும்பஸ்தர்கள் இருவர் பயணத்தின் இடைநடுவே திடீர் சுகயீனம் அடைந்து 30ஆம் திகதி திங்கட்கிழமை இரவு மரணமடைந்துள்ளனர். மரணமடைந்த இருவரின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒப்படைக்கப்பட்ட நிலையில் குறித்த சடலங்கள் இரண்டும் விசேட சட்டவைத்திய அதிகாரியின் உடற்கூறு ஆய்வுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மே 29 07:34

வடக்குக் கிழக்கில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 51 குடும்பங்களுக்கு இந்திய நிவாரணம்

(மன்னார், ஈழம்) இலங்கைக்கு வந்தடைந்துள்ள இந்திய நாட்டின் மனிதாபிமான உதவி திட்டத்தின் கீழான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களில் வாழும் சுமார் 3 லட்சத்து 46 ஆயிரத்து 51 குடும்பங்களுக்கு எதிர்வரும் திங்கள் முதல் விநியோகிக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களையும் நிர்வகிக்கும் அரசாங்க அதிபர்களின் மேற்பார்வையில் துரித கதியில் மேற்கொள்ளபட்டு வருகிறது.
மே 28 07:04

கொழும்பில் ஒன்றுகூடிய இளைஞர்கள்- நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறிப் போராட்டம்

(வவுனியா, ஈழம்) கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த ஐம்பது நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி காலிமுகத் திடலில் தொடர் போராட்டம் ஆரம்பமாகியது. கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரைப் பதவி விலகுமாறு வலியுறுத்திப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், சென்ற ஒன்பதாம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அலரி மாளிகை முன்பாக தொடர் போராட்டம் நடைபெற்ற நிலையிலேயே மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.
மே 27 22:53

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சியை முற்றாக நீக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையில் உள்ள அதிகாரங்கள் சிலவற்றை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்தும் 21 ஆவது திருத்தச் சட்டத்துக்கான நகல் வரைபு அங்கீகரிக்கப்பட்ட பின்னரே, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக ஒழிப்பது தொடர்பாக ஆராயக் குழு ஒன்றை அமைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. 21 இற்கான நகல் வரைபு தொடர்பாக ஆராயும் கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. இன்றைய கூட்டத்தின் மூலம், நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறை முற்றாக நீக்கம் செய்யப்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதைப் பிரதான சிங்களக் கட்சிகள் முன்வைத்த கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.
மே 26 09:10

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் 21 ஆவது திருத்தச் சட்டம்- அரசுக்குள் குழப்பம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைப்பது தொடர்பான 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கக்கூடிய வாய்ப்புகள் இல்லையெனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. திருத்தச் சட்டத்துக்கான நகல்வரைபு தொடர்பாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடாமல் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தலைமையிலான குழுவிடம் கையளிக்கப்பட்டமை தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்குள் அதிருப்திகள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மே 25 08:04

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசதரப்பு உறுப்பினர்கள் பலர் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை

(வவுனியா, ஈழம்) கொழும்பு காலிமுகத்திடலில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருந்த கோட்டா கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக நடைபெற்ற மைனா கோ கம தாக்குதல் குறித்த வழக்குகள் தொடர்பாக வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு ஆதரவான உறுப்பினர்கள் இதுவரையில் தமது கடவுச்சீட்டை கொழும்பு நீதிமன்றில் ஒப்படைக்கவில்லையென மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன தெரிவித்துள்ளார். மேற்படி தாக்குதல்கள் சென்ற ஒன்பதாம் திகதி நடைபெற்றிருந்தன.
மே 24 23:14

21 ஆவது திருத்தத்துக்குள் மறைந்திருக்கும் பேராபத்து

(யாழ்ப்பாணம், ஈழம்) கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்டத்தில் சில விடயங்களையும் உள்ளடக்கியே 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல்வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நகல்வரைபு, கோட்டாபய ராஜபக்சவுடன் முரண்பட்டு வெளியேறித் தற்போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றுள்ள சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தலைமையிலான குழுவினாலேயே தயாரிக்கப்பட்டிருக்கின்றது. விஜயதாச ராஜபக்சவுக்கு நெருக்கமான இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் சில சட்டத்தரணிகளும் நகல் வரைபு தயாரித்த குழுவில் அங்கம் வகித்திருக்கின்றனர். இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்தும் துணிகரம் இந்த நகல் வரைபில் தெரிகிறது.
மே 23 21:32

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் நகல் வரைபு

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகுமாறு கோரி காலிமுகத் திடலில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 21வது திருத்தத்துக்கான நகல் வரைபு இன்று திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 21 ஆவது திருத்தம் தொடர்பாக ஆராய்ந்த குழு தயாரித்த பரிந்துரைகளே நகல் வரைபாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கவனத்துக்கும் இந்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டு முழுமையான நகல் வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மே 21 21:05

மீள் எழுச்சி பெறப்போகும் சிங்கள மேட்டுக்குடி அரசியல்- சர்வதேச அரங்கில் மீண்டும் தமிழ்த்தேசத்துக்கு வரப்போகும் ஆபத்து

(முல்லைத்தீவு) பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்குப் பதவியில் இருந்த அனைத்து சிங்கள ஆட்சியாளர்களும் பொறுப்பேற்க வேண்டுமென்ற கருத்துக்களை மறுத்துரைக்க முடியாது. ஊழல்மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் நீடிப்பதற்கும் அவை இலங்கை அரசின் ஒரு பகுதிபோன்று மாறுவதற்கும் முப்பது ஆண்டுகால போர் வழிவகுத்து என்பதே மூல காரணம். ஆனால் இதனைச் சிங்கள அரசியல் தலைவர்களும், சிங்கள முற்போக்குவாதிகள் பலரும் ஏற்க மறுத்துள்ளதொரு சூழலில் சிங்களச் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது முற்கால அரசியல் நகர்வுகளை நியாயப்படுத்தும் செயற்பாடுகளில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகின்றார். எழுபது வருடகால இனப்பிரச்சினை மடைமாற்றப்படுகின்றது.
மே 20 22:45

அரச ஊழியர்களின் எண்ணிகை 13 பேருக்கு ஒருவர், இதுவே பாரிய சிக்கல் என்கிறார் அலி சப்ரி

(வவுனியா, ஈழம்) ராஜபக்ச குடும்பத்துக்கும் அவர்களுக்கு ஆதரவான உறுப்பினர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்படட தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சூடான விவாதம் நடைபெற்றது. வன்முறைகளில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென அரசதரப்பு உறுப்பினர்களான அஜித் ராஜபக்ச, தினேஸ் குணவர்த்தன உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகைக்குக் குண்டர்களை அழைத்து வந்து கூட்டம் ஒன்றை நடத்திவிட்டு காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதாலேயே வன்முறைகள் ஆரம்பித்ததாக சரத் பென்சேகா. ஜயமான பண்டார ஆகியோர் குற்றம் சுமத்தினர்.