நிரல்
ஓகஸ்ட் 14 08:45

பாகிஸ்தான் கப்பலுடன் இலங்கைக் கடற்படை பயிற்சியில் ஈடுபடாதென அறிவிப்பு

(முல்லைத்தீவு) இலங்கைத்தீவின் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ள பி.என்.எஸ் தைமூர் எனப்படும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் இணைந்து இலங்கைக் கடற்படை போர் பயிற்சிகளில் ஈடுபடாதென இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. சென்ற பன்னிரெண்டாம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த குறித்த கப்பல் பதினைந்தாம் திகதி திங்கட்கிழமை இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது. இந்த நிலையில். குறித்த பாகிஸ்தான் கப்பலுடன் இலங்கைக் கடற்படை பயிற்சியில் ஈடுபடுமென செய்தி இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் வெளியான செய்தியை இலங்கைக் கடற்படை மறுத்துள்ளது.
ஓகஸ்ட் 13 22:49

ஜெனீவாவைக் கையாளும் புதிய அணுகுமுறை - தமிழர்களையும் உள்ளடக்கிய பொறிமுறை உருவாக்கத் திட்டம்

(வவுனியா, ஈழம்) செப்ரெம்பர் மாதம் கூடவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படும்போது, பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைக்குக் கூடுதல் அழுத்தங்கள் முன்வைக்கப்படலாம். ஆனால் ஈழத்தமிழர்களின் அரசியல்தீர்வு, இன அழிப்பு மற்றும் சர்வதேசம் கூறுகின்ற போர்க்குற்ற விசாரணைகள் குறித்த விடயங்கள் எதிலும் அந்த அழுத்தங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம், ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற நாடுகள், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், தமக்குரிய புவிசார் அரசியல் நகர்வுகள் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தே, ஜெனீவா மனித உரிமைச் சபையில் தீர்மானங்களை முன்வைப்பர் என்பது வெளிப்படை.
ஓகஸ்ட் 12 22:43

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர்- விக்னேஸ்வரன்

(வவுனியா, ஈழம்) போர்க்காலத்திலும் அதற்குப் பின்னரான சூழலிலும் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் நாற்பத்து ஆறு பேரை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு உறுதியளிக்கப்பட்டதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார். சிறைக் கைதிகள் தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் அறிக்கை கிடைக்கும் வரை காத்திருப்பதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தன்னிடம் கூறியதாகவும் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஓகஸ்ட் 11 22:00

வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு

(வவுனியா, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அடுத்த நான்கு மாதங்களுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் முப்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் நிதியமைச்சராகப் பதவி வகித்திருந்த பசில் ராஜபக்ச தயாரித்த வரவு செலவுத்திட்டத்தை அப்போது ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச இடை நிறுத்தியிருந்தார். கடந்த மே மாதம் இரண்டு மாதங்களுக்கான வரவுசெலவுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தையும் கோட்டாபய ராஜபக்ச பெற்றிருந்தார்.
ஓகஸ்ட் 09 10:12

எதிர்க்கட்சிகளின் கொழும்புப் பேரணி இராணுவக் குவிப்பு, கைது மற்றும் அச்சுறுத்தல் காரணமாக வெற்றியளிக்கவில்லை

(வவுனியா, ஈழம்) அரசாங்கத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பெரியளவில் வெற்றியளிக்கவில்லை. கொழும்பு நகரை நோக்கிப் பேரணிகள் எதுவும் வரவில்லை. ஆங்காங்கே அரச ஊழியர்கள் சில பொது அமைப்புகள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு முன்பாக ஆரம்பித்த பேரணி சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தது. இரண்டாயிரத்துக்கும் குறைவானவர்களே பேரணியில் பங்குபற்றியிருந்தனர். பேரணி தொடர்பாக முன்னாள் இராணுவத்தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா நேற்றுத் திங்கட்கிழமை விடுத்த எச்சரிக்கையினால், இன்று செவ்வாயக்கிழமை கொழும்பு நகரில் கூடுதல் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஓகஸ்ட் 08 21:39

தொடரப்போகும் நிதி நெருக்கடி - சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலை

(வவுனியா, ஈழம்) கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகளிடம் இருந்து தொடர்ச்சியாகப் பெருமளவு நிதியுதவிகளைப் பெறக்கூடிய சூழல் அருகிக் கொண்டே செல்கின்றது. ரசிய - உக்ரெய்ன் போரினால், தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சர்வதேச நாடுகள் குறிப்பாக ரசியாவுக்கு எதிரான நாடுகள் உக்ரெய்ன் நாட்டை எப்படி மீளக் கட்டியெழுப்புவது என்பதிலேயே கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. ரசியாவுக்கு எதிரான போருக்கு உக்ரெய்ன் நாட்டுக்கு உதவியளிப்பதிலும் இந்த நாடுகளின் கவனம் மேலோங்கியுள்ளது.
ஓகஸ்ட் 06 22:11

சர்வகட்சி நிர்வாக ஆட்சி முறைக்கு ரணில் இணக்கம்

(வவுனியா, ஈழம்) சர்வகட்சி நிர்வாக ஆட்சி முறைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களைச் சந்தித்த போது இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை அமுல்படுத்துவதில் பிரச்சினையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆட்சிமுறைக்காக ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தியிடம் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஓகஸ்ட் 04 22:42

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அகற்றப்படுகின்றன

(வவுனியா, ஈழம்) கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட தளத்திலிருந்து போராட்டகாரர்களை வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்ததையடுத்து குறிப்பிட்ட சில போராட்டக்காரர்கள் வெளியேறி வரும் நிலையில், பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலினால் மேலும் போராட்டக்காரர்கள் வெளியேற மறுத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவையடுத்துப் போராட்டக்காரர்கள் பலர் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். கூடாரங்களும் அகற்றப்பட்டு வந்தன. இந்த நிலையில். பொலிஸார் ஒலி பெருக்கியில் வெளியிட்ட அறிவிப்பினால் சீற்றமடைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளனர்.
ஓகஸ்ட் 03 22:06

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணிலிடம் கோரிக்கை

(வவுனியா, ஈழம்) இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் காணி அபகரிப்புகளை நிறுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்துள்ளது. காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவும் பங்குபற்றியிருந்தார். இச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்றது. கூட்டமைப்பு முன்வைத்த முக்கியமான சில கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கும் தெரிவித்தார். ஆனால் எந்த வகையான அரசியல் தீர்வு என்பது குறித்துச் சுமந்திரன் எதுவுமே தெரிவிக்கவில்லை.
ஓகஸ்ட் 02 22:06

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து ரணில் கடும் முயற்சி

(வவுனியா, ஈழம்) சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளார். அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்துவது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய குழு செவ்வாய்க்கிழமை மாலை கூடி ஆராய்ந்துள்ளது. சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கெடுப்பதைவிட, பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில் சர்வகட்சிச் செயற்பாட்டில் மாத்திரம் ஈடுபடுவதென ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.