நிரல்
ஓகஸ்ட் 01 08:58

சீனக் கப்பல் குறித்து எதுவும் தெரியாதென்கிறார் இலங்கைக் கடற்படைப் பேச்சாளர்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவின் தென்மாகாணம் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் யுவான் வாங் ஐந்து எனப்படும் சீன விஞ்ஞான ஆய்வு கப்பல் தொடர்பாக இலங்கைக் கடற்படைக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனக் கப்பல் விவகாரம் தொடா்பாகத் தனக்கு போதுமான தகவல்கள் தெரியாதென இலங்கைக் கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழான வீரகேசரிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பதினொராம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ள சீன கப்பல், பதினேழாம் திகதி வரை அங்கு நங்கூரமிட்டிருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா இவ்வாறு கூறியுள்ளார்.
ஜூலை 31 07:55

மன்னாருக்குத் தமிழகத்தில் இருந்து பொருட்கள் கடத்தல்

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகள் உள்ளூர் மற்றும் இந்தியக் கடத்தல் நடவடிக்கைகளுக்கான பிரதான நுழைவாயிலாக மாறியுள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து சூசகமாகப் பல வகையான பொருட்கள் சட்டவிரோதமாக மன்னார் கரையோர பகுதிகளுக்கு தினமும் எடுத்து வரப்படுவதாக தலைமன்னார் பொலிஸார் கூறுகின்றனர். இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, தமிழர் தாயகமான மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடித்தொழில் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
ஜூலை 29 21:40

போரினால் பெறமுடியாத ஈழத்தைப் பெற, புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முயற்சி

(வவுனியா, ஈழம்) முப்பது வருடங்களுக்கும் மேலான போரினால் பெற்றுக்கொள்ள முடியாத தமிழ் ஈழத்தை, இலங்கையின் ஸ்திரமற்ற அரசியல் சூழலைப் பயன்படுத்திப் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பெற முயற்சிப்பதாக ஐக்கிய போர் வீரர்கள் சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர் அசேல தர்மசிறி தெரிவித்துள்ளார். போரில் உயிர்த் தியாகம் செய்த இலங்கைப் படைவீரர்களை நினைவு கூரும் மே மாதம் 18 ஆம் திகதியன்று, கொழும்பு காலிமுகத்திடலில் போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிப் போராளிகளை நினைகூர்ந்ததாகவும், கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவரும் சில தமிழ் இளைஞர்களும் அதில் ஈடுபட்டதாகவும் அசேல தர்மசிறி கூறியுள்ளார்.
ஜூலை 27 22:25

அவசரகாலச் சட்டம் நிறைவேற்றம்- காலிமுகத் திடல் போராட்டத்தில் ஈடுபட்ட அருட் தந்தையைக் கைது செய்ய முயற்சி

(வவுனியா, ஈழம்) இலங்கை அரசாங்கத்தின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருந்தபோது பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 57 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தி ரணில் விக்கிரமசிங்க வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலான விவாதம் புதன்கிழமை முற்பகல் தொடக்கம் பிற்பகல் வரை இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றில் இடம்பெற்றது.
ஜூலை 26 10:11

சீனாவிடம் கடனுதவிகள் பெறுவதற்கான பேச்சுக்கள் தொடருவதாகக் கூறுகிறார் பாலித கோகண

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் சீனாவுக்குப் பயணம் செய்வாரெனவும், சீனா தொடர்பான அடிப்படைக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாது என்றும் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோகண தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நான்காம் திகதி இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாகக் கூறப்பட்டிருந்த நிலையில், சீனாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக ரொய்டர் செய்திச் சேவைக்குப் பாலித கோகண இவ்வாறு தெரிவித்துள்ளார். வர்த்தகம் முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளில் சீனா உதவ வேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவித் திட்டத்தை பெறுவதற்கான முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது என்றும் பாலித கோகண கூறியுள்ளார்.
ஜூலை 24 23:06

போராட்டக்குழுக்கள் மீதான தாக்குதல்- நாடாளுமன்றத்தில் விவாதம்

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு நடத்தப்பட்ட போராட்டங்கள் அதன் பின்னர் தொடரும் போராட்டங்கள் மற்றும் கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட களத்தில் இருந்து போராட்டகாரர்கள் அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துமாறும் நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறும் எதிர்க்கட்சிப் பிரதான அமைப்பாளரான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஜூலை 22 16:37

ஐ.நா.விடம் கடிதம் கையளித்த சில மணிநேரத்தில் காலிமுகத்திடல் போராட்டக்குழு மீது இலங்கை இராணுவம் தாக்குதல்

(வவுனியா, ஈழம்) கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல, இராணுவம் அனுமதிக்க மறுத்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறாத முறையில் காலிமுகத் திடல் பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டிருந்தன. சட்டத்தரணி ஒருவர் உட்பட பத்துப் போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுக் கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு வியாழக்கிழமை மாலை கொழும்பு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் உட்பட பலர் காயமடைந்தனா்.
ஜூலை 21 22:51

இறைமையைப் பாதுகாக்கும் ரணில்- தமிழ்த்தரப்புச் செய்ய வேண்டியது என்ன?

(வவுனியா, ஈழம்) ஓற்றையாட்சியைப் பாதுகாக்கும் இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் எவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றாலும், வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. இலங்கை அரசியல் யாப்பைப் பாதுகாப்பேன் என்று கூறியே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். அரசியல் யாப்பைப் பாதுகாப்பது என்பது பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒற்றையாட்சி முறையைக் குறிக்கும். பதவிப் பிரமாணம் முடிந்த கையோடு, பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று, முப்படைத் தளபதிகளைச் சந்திக்கிறார் ரணில். பௌத்த விகாரைக்குச் செல்கிறார். இவைதான் ஒற்றையாட்சி அரசியல் யாப்பைப் பாதுகாக்கும் ஜனாதிபதியின் முதற் கடமை என்பதை ரணில் தனது செயற்பாட்டின் மூலம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.
ஜூலை 20 22:45

ரணில் தெரிவானாலும், போராட்டம் தொடருமென அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும், ரணில் விக்கிரமசிங்க பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடருமென காலிமுகத்திடல் போராட்டக்குழு அறிவித்துள்ளது.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நண்பல் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஒரு மணிநேரத்தில் வெளியான உயர்நீதிமன்ற அறிவிப்பில், காலிமுகத்திடல் பகுதியில் உள்ள எஸ்.எடபிள்யு.ஆர்.டி .பண்டாரநாயக்காவின் சிலைக்கு அருகில் நின்று போராடும் இளைஞர்கள் சிலையில் இருந்து சுமார் ஐம்பது மீற்றர் தூர இடையில் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது. குறிப்பாகப் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 20 00:12

இடைக்கால ஜனாதிபதித் தெரிவு- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ராஜபக்சவின் கட்சி வேட்பாளரை ஆதரிக்க முடிவு

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி வேட்பாளர் டளஸ் அழகப் பெருமாவை ஆதரிக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த முடிவை கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தணி சுமந்திரன் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மொட்டுக் கட்சி வேட்பாளர் டளஸ் அழகபெருமா. பேராசிரியர் ஜீ.எல். பீாிஸ் உள்ளிட்ட பலர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடியுள்ளனர். சம்பந்தன், சுமந்திரன், சித்தாத்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் பலரும் சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர்.