நிரல்
செப். 15 20:33

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இல்லை

(வவுனியா, ஈழம்) வட மாகாணத்தின் மன்னாரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்துச் செய்யக்கோரி பொதுமக்களின் கையெழுத்துகளைப் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. புதன்கிழமை மன்னார் பிரதான பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த கையெழுத்துகளைப் பெரும் பணிகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட இளைஞர் முன்னணி மற்றும் சர்வஜன நீதி அமைப்பு ஆகியவற்றினால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரி வாகனப் பவனி மூலம் பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறும் நடவடிக்கைகள் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செப். 14 21:31

உள்ளக விசாரணையை வலியுறுத்தும் ஜெனீவாத் தீர்மானம்- உறுப்பு நாடுகளிடம் வரைபு கையளிப்பு

(வவுனியா, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புச் சட்டதிட்டங்களின் படி சர்வதேச தரத்திலான விசாரணைக்கு ஏற்றவாறு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகளை வலுப்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டு வரும் தீர்மானத்தின் பிரதிகள், தற்போது இலங்கை விவகாரம் தொடர்பான கருக்குழு நாடுகளிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன. விசாரணையின்போது சர்வதேசத் தொழில்நுட்ப உதவிகளுக்குரிய ஒத்துழைப்புகளைப் பெற வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கப்பட்டிருக்கின்றது. ஆறு பக்கங்களில் குறித்த தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
செப். 13 08:03

நிதியைப் பெற கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சந்தேகங்களைக் கிளப்பி வரும் நிலையில், இலங்கை அரசாங்கம் அதனை மறுத்துள்ளது. குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் உள்ள கணக்காய்வுக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார். நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். ஆயிரக்கனக்கான அரச ஊழியர்களைக் கட்டாய விடுமுறையில் அனுப்ப வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை பெரும் நிதிச் சுமை எனவும் அமைச்சர் கூறினார்.
செப். 12 10:39

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் 46/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை ஜெனீவா மனித உரிமைச் சபையின் 52 ஆவது அமர்வு ஆரம்பமாகியபோது இலங்கை விவகாரம் தொடர்பான பரஸ்பர உரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். சுயாதீன உள்நாட்டுப் பொறிமுறையை வலுப்படுத்தத் தேவையான ஆதரவு மற்றும் வளங்களை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமெனவும் அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.
செப். 11 21:38

ராஜபக்ச குடும்பத்தை ரணில் காப்பாற்றுகிறார்- சஜித் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை வெளிப்படுத்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தயங்குவதாகக் குற்றம் சுமத்தியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பல விடயங்கள் அதில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்த ஒப்பந்தத்தில் ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்காப் பொதுஸனப் பெரமுனக் கட்சிக்கும் உடன்பாடில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாமல், ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
செப். 10 22:22

ரணில் அரசாங்கத்துக்கு எதிராக பௌத்த குருமார் ஆர்ப்பாட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு எதிராகக் கொழும்பில் பௌத்த குருமார் மாபெரும் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே, சிறிதர்ம தேரர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவே பௌத்த குருமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். கொழும்பு ஸ்ரீ போதிராஜா மாவத்தையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படுமென பௌத்த குருமார் கூறியுள்ளனர். சனிக்கிழமையும் பௌத்த குருமாரின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
செப். 08 09:10

போர்க்குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குச் சென்றால் அந்தந்த நாடுகளில் விசாரணை நடத்தும் புதிய பொறிமுறை

(மட்டக்களப்பு, ஈழம்) ஈழத்தமிழர்களின் இன அழிப்பு விசாரணைக் கேரிக்கைகள் மாத்திரமல்ல, போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறையைக்கூட நீத்துப் போகச் செய்யும் நோக்கிலேயே ஜெனீவா மனித உரிமைச் சபையும் அமெரிக்கா போன்ற மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் மற்றும் இந்தியாவும் செயற்படுகின்றன என்பது தற்போது பகிரங்கமாகவே வெளிப்பட்டுள்ளன. யுனிவேர்சல் யூறிஸ்டிக்சன் (Universal Jurisdiction) எனப்படும் முழு நிறை நியாயாதிக்க விசாரணை என்பதன் ஊடாகப் போர்க் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் விசாரணை செய்யப்பட வேண்டுமென ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார். இப் பரிந்துரை சர்வதேச விசாரணை என்பதில் இருந்து கீழ் இறங்கிவரும் ஏற்பாடாகவே காணப்படுகின்றது.
செப். 07 09:13

ரணில் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

(வவுனியா, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. முப்பத்து ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியுடன் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் பதவிக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுன பரிந்துரைத்த தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக பெதுஜன பெரமுனக் கட்சி கூறியுள்ளது.
செப். 06 09:22

இந்தியா வழங்கியதையும்விட குறைவான நிதியுதவிகளை வழங்கிய சர்வதேச நாணய நிதியம்

(வவுனியா, ஈழம்) இந்தியா ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு வழங்கிய சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களையும் விட அரைவாசித் தொகையை மாத்திரமே ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது. அதுவும் இலங்கை அரசாங்கம் உறுதியளித்தபடி தனது பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்தால் மாத்திரமே தீர்மானிக்கப்பட்ட நிதியை வழங்க முடியுமென ஐ.எம்.எப் மூத்த அதிகாரி பீற்றர் ப்ரூயர் (Peter Breuer) கூறுகிறார். நீண்ட பாதையின் ஒரு ஆரம்பம் மாத்திரமே எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆகவே இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றைச் செய்தாலும், மெதுவான எச்சரிக்கை ஒன்றையும் ஐ.எம்.எப் இலங்கைக்கு விட்டுச் சென்றிருக்கின்றது.
செப். 05 21:40

சர்வதேச விசாரணைப் பொறிமுறை நிராகரிக்கப்படும்- வெளியுறவு அமைச்சர் அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணை செய்வதற்கான சர்வதேசப் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு தொடர்பாக விளக்கமளித்தபோதே அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறினார். இலங்கையின் மீது ஜெனீவா மற்றும் சர்வதேச நாடுகளினால் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் எந்தவொரு தீர்வுகளையும் இலங்கை அரசியல் யாப்புக்கு முரணான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எதிர்க்கும் என்றும் அமைச்சர் கூறினார்.